12 வது இருதரப்பு ஒப்பந்தம் – பேச்சு வார்த்தை துவங்கியது

கெளதம்

11 வது இருதரப்பு ஒப்பந்தம் 2022 அக்டோபர் 31 ஆம் நாள் முடிவடைந்தது.
2022 நவம்பர் 1 முதல் 12 வது இருதரப்பு ஒப்பந்த காலம் துவங்குகிறது.
அடிப்படை சம்பளத்தில் குறைந்த (2.5%) லோடிங், வாரம் ஐந்து நாட்கள்
வேலை, பென்ஷன் அப்டேஷன், குடும்ப பென்ஷன் உள்ளிட்ட முக்கிய
கோரிக்கைகள் வங்கி நிர்வாகங்களால் (ஐபிஏ) ஏற்கப்படாததால் 11 வது
இருதரப்பு ஒப்பந்தத்தில் பிஇஎப்ஐ கையெழுத்திடவில்லை. பின்னர் குடும்ப
பென்ஷன் ஏற்றுக்கொள்ளப்பட்டு அமல்படுத்தப்பட்டது. 11 வது ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்ட 4 ஊழியர் சங்கங்களும், 4 அதிகாரிகள் சங்கங்களும் கூட 5
நாட்கள் பணி, பென்ஷன் அப்டேஷன் உள்ளிட்ட கோரிக்கைகளை 11 வது
ஒப்பந்தம் முடிந்த கையோடு எழுப்பின. தனித்தனியாக குறிப்புகள்
நிர்வாகத்துடன் கையெழுத்திடப்பட்டன. நீண்ட பேச்சு வார்த்தை
நடைபெற்றது. 9 சங்கங்கள் அடங்கிய யுஎப்பியு என்ற வங்கி சங்கங்களின்
கூட்டமைப்பின் அறைகூவல்படி இரண்டு முறை வேலை நிறுத்த
அறைகூவல் விடப்பட்டது. மத்திய தொழிலாளர் நல ஆணையர்
தலையீட்டின் பேரில் வேலை நிறுத்தம் தள்ளி வைக்கப்பட்டது.

விடுபட்ட கோரிக்கைகள்

வாரம் ஐந்து நாட்கள் வேலை அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பென்ஷன்
அப்டேஷன், புதிய பென்ஷன் திட்டத்திற்கு பதில் பழைய பென்ஷன் திட்டம்
ஆகியவற்றின் மீதான பேச்சு வார்த்தை தொடர்கிறது. அத்துடன் பழைய
பென்ஷன் திட்டத்தில், 20 வருடம் பணி முடித்தால் முழு பென்ஷன், கடைசி
சம்பளம் அல்லது கடைசி 10 மாத சம்பளம் எது கூடுதலோ அதனை
பென்ஷன் கணக்கிட எடுத்துக் கொள்ளுதல், 40% கம்யுடேஷன், 20 வருடம்
பணி முடித்து வேலை ராஜினாமா செய்தவர்களுக்கு பென்ஷன் நீட்டிப்பு
உள்ளிட்ட பல கோரிக்கைகள் யுஎப்பியு சார்பாக முன் வைக்கப்பட்டுள்ளன.

மருத்துவ காப்பீடு, முழு பஞ்சப்படி

இதற்கிடையில் ஓய்வு பெற்றவர்களுக்கு அடிப்படையில் ரூ. 2 லட்சம் (சில
உச்ச வரம்புடன்) மருத்துவ காப்பீடு, கூடுதலாக ரூ.10 லட்சம் டாப் அப்
பற்றிய குறிப்பு 2023 ஜூலை 19 அன்று ஐபிஏ மற்றும் யுஎப்பியுவுக்கு
இடையே கையெழுத்தானது. பின்னர் இதற்கான பிரீமியம் ரூ.22000/- ஆக
இருக்கும் என்று ஐபிஏ கூறியது. 2002 நவம்பர் 1 ஆம் தேதிக்கு முன்பு ஓய்வு
பெற்றவர்களுக்கு முழு பஞ்சப்படி நீட்டித்து ஒரு குறிப்பு ஜூலை 28 அன்று
கையெழுத்தானது. இது அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல்
கிடைக்கப்பெற்றவுடன் அமலுக்கு வரும். இதன் மூலம் ஓய்வு
பெற்றவர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. ஸ்லாப்
அடிப்படையில் முழுமையான பஞ்சப்படி கிடைக்காத அனைவருக்கும் இது
மிகப்பெரிய முன்னேற்றமாகும். சட்டப்படி போராடி வெற்றி கிடைக்காத ஒரு
கோரிக்கை இருதரப்பு பேச்சு வார்த்தையில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

12 வது இருதரப்பு ஒப்பந்தம்

12 வது இருதரப்பு ஒப்பந்தத்திற்கான கோரிக்கை பட்டியல் 4 ஊழியர்
சங்கங்கள் தனியாகவும், பிஇஎப்ஐ தனியாகவும், 4 அதிகாரிகள் சங்கங்கள்
இணைந்தும் சமர்ப்பித்தன. உடனடியாக பேச்சு வார்த்தை துவங்கப்பட
வேண்டும் என்று யுஎப்பியு அமைப்பில் உள்ள ஒன்பது சங்கங்களும்
வலியுறுத்தியதின் அடிப்படையில் முதல் சுற்று பேச்சு வார்த்தை ஜூலை 28
அன்று துவங்கியது. இதில் பிஇஎப்ஐ உள்ளிட்ட ஐந்து ஊழியர் சங்கங்களும்,
ஏஐபிஓஏ தவிர்த்த மூன்று அதிகாரிகள் சங்கங்களும் பங்கேற்றன. முதலில்
ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட சில வங்கிகள் பேச்சு
வார்த்தை நடத்த ஐபிஏ விற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்பட்டது.
பின்னர் அனைத்து பொதுத்துறை வங்கிகளும் ஒப்புதல் கொடுத்து விட்டன,
தனியார் வங்கிகள் ஒப்புதல் அளிக்கவில்லை என்று ஐபிஏ தரப்பில்
கூறப்பட்டது.

அந்த சுற்று பேச்சு வார்த்தையில் “நாங்கள் பேச்சு வார்த்தையை விரைவில்
முடித்து ஒப்பந்தம் காண தயாராக உள்ளோம், இனி மாதா மாதம் முழு
கமிட்டி பேச்சு வார்த்தை நடக்கும், அதை விட குறுகிய இடைவெளியில்
ஊழியர்கள், அதிகாரிகள் சிறு குழு பேச்சு வார்த்தை நடைபெறும். முழு

கமிட்டியில் சம்பளம் உள்ளிட்டவையும், சிறு குழுவில் இதர கோரிக்கைகளும்
விவாதிக்கப்படும்” என்று கூறப்பட்டது. அதற்காக முழு பேச்சு வார்த்தை குழு,
சிறு குழுக்கள் ஐபிஏ சார்பில் அமைக்கப்பட்டன.

பென்ஷன் அப்டேஷன், புதிய பென்ஷன் திட்டத்திற்கு பதிலாக
அனைவருக்கும் உத்தரவாதமான பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட
விடுபட்ட கோரிக்கைகளுடன், நியாயமான ஊதிய உயர்வு, பணி
நிலைமைகளில் முன்னேற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள்
வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து முழு பேச்சு வார்த்தைக் குழு கூட்டம் ஆகஸ்ட் 31 ஆம்
தேதி நடைபெற்றது.

இதில்
* 2022 நவம்பர் 1 ஆம் தேதி முதல் 12 வது இருதரப்பு ஒப்பந்தம்
அமுலாகும்.
* அதன் காலம் 2027 அக்டோபர் 31 வரை ஐந்து ஆண்டுகளுக்கு இருக்கும்
* 8088 விலைவாசிப் புள்ளியில் அடிப்படை ஊதியம் இணைக்கப்படும்
என்று இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

சங்கங்கள் தரப்பில்

  • ஒப்பந்தத்தை விரைவில் முடிக்க வேண்டும்.
  • அர்த்தமுள்ள பேச்சு வார்த்தை நடத்துவதற்கு சம்பள செலவின
    விவரங்கள் அளிக்கப்படவேண்டும்;
  • வாரம் 5 நாட்கள் வேலை உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்.
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக பழைய பென்ஷன்
    திட்டத்தில் முன்னேற்றம் வேண்டும்
  • 16.4% சிறப்பு அலவன்சை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க
    வேண்டும்
  • 1960க்கு பதிலாக 2016 ஆம் ஆண்டை பஞ்சப்படி கணக்கிடும் ஆண்டாக
    மாற்ற வேண்டும்
  • புதிய பென்ஷன் திட்டம் கைவிடப்பட்டு அனைவருக்கும்
  • உத்தரவாதமான பழைய பென்ஷன் திட்டம் அமலாக்க வேண்டும்
  • 2002 நவம்பர் 1க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு அரசு ஒப்புதலுடன் 100% பஞ்சப்படி உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

    சிறு குழு கூட்டம் ஆகஸ்ட் 7 ஆம் தேதியும், செப்டம்பர் 12 ஆம் தேதியும் நடைபெற்றன.
    இவற்றின் விவரங்களை அடுத்த இதழில்

One comment

  1. வங்கி ஊழியர்களின் சமரசமற்ற ஒன்றுபட்ட போராட்ட உணர்வினை வலுப்படுத்துவதன் மூலமே கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்

Comment here...