மனதில் உறுதியும் வாக்கினிலே இனிமையும் 

எஸ்.வி.வேணுகோபாலன் 

மகாகவி நினைவு நாள் என்று எழுதுவதே சரியோ என்ற கேள்வி
அடிக்கடி எழும். ஏனெனில், இலக்கியத்தில், ‘உன்னை நேற்று நினைத்துக்
கொண்டேன்’ என்று தலைவன் சொன்னால், ‘அப்படியானால்
அதற்குமுன் என்னை மறந்து போயிருந்தாயா’ என்று சண்டைக்கு
இறங்குவாளாம் தலைவி. மறக்கவே முடியாத மகாகவியை என்றைக்கு
நாம் நினைக்காது இருந்திருக்கிறோம்! 

‘சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொல் புதிது சோதிமிக்க
நவகவிதை எந்நாளும் அழியாத மாகவிதை’  என்பது தான் அவரது
பிரகடனம். ‘உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி
உண்டாகும்’  என்று அவரே வேறிடத்தில் சொல்வது இதற்கான விளக்கம். 
நேர் கொண்ட பார்வை இருக்கவே, அறச்சீற்றம் பொங்குகிறது. அதே
வேளையில், சமூகத்தின் மீதான காதல் பெருகுகிறது. ‘முட்டாள்கள் என
நம்மைத் திட்டியபோதிலும் மோகம் குறைந்தானா மாடத்தி’ என்ற
இசைப்பாடல் வரி, மனித சமூகத்தின் மீதான மகாகவியின் நேயத்தை
விளக்குகிறது. 

அரசியல், பொருளாதாரம், சமூகம் எல்லாம் வெளிப்பட்டது அவரது
எழுத்தில். பாலின சமத்துவம், குழந்தைகள் உரிமை, உழைப்பாளிகள்
மீதான மதிப்பு யாவும் மிகுந்திருந்தது அவரது கவிதைகளில். சாதீய
மேட்டிமைத் தன்மைக்கு எதிரான உரத்த குரல் ஒலிக்கிறது அவரது
பாக்களில். சர்வமத சமரச கீதம் அவரது மூச்சு. இசையில் நெகிழ்ந்திருந்தது
அவரது நெஞ்சு. இயற்கையோடு ஒன்றிப் போயிருந்தது அவரது உள்ளம். 
ஒரு படைப்பாளியின் மேதைமை அல்லது சிறப்பு அவரவர் வாழ்ந்த
காலத்தோடு பொருத்திப் பார்க்கையில் தான் மேலும் துலங்குகிறது. 1882
டிசம்பர் 11இல் பிறந்த பாரதி வாழ்ந்த காலம் 39 ஆண்டுகள் தான். 1921
செப்டம்பர் 11 நள்ளிரவு அவர் மறைந்தபோது, இந்திய விடுதலை இன்னும்

கடுமையான போராட்டங்களுக்குக் காத்திருந்தது. ஆனாலும் எழுச்சி
மிகுந்த தேசிய கீதங்களை வழங்கி விட்டிருந்தன அவரது கரங்கள். 
சவால் மிகுந்த நாட்களை அன்றாடம் கடந்து கொண்டிருந்த காலத்தில்
தான் அவர் ஒரு பத்திரிகையின் ஆசிரியராகத் திகழ்ந்தார். பெரிய
அறிவியல் தொழில் நுட்ப  சாதனங்கள் ஏதும் இல்லாத போதிலும் உலக
நடப்புகளைக் கேட்டறிந்து எழுதவும், கார்ட்டூன்கள் வரையவும்,
தலையங்கங்கள் படைக்கவும் திறன் பெற்றிருந்தார் என்பது சாதாரண
விஷயமன்று. 

‘அர்பட் நாட் வங்கி’ வீழ்ச்சி பற்றிய அபாரமான விவரங்களை சேகரித்து
நிறைய கட்டுரைகளை இந்தியா பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்தார்.
அந்நிய வங்கி, உள்நாட்டு சேமிப்பைச் சுரண்டி, உள்நாட்டு
மக்களைக் கண்ணீரில் தள்ளியதில் நொந்துபோய்த் தான்,
‘பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு
போகவோ…நாங்கள் சாகவோ…’ என்று எழுதினார். அதோடு நிற்கவில்லை,
தேசத்து சீமான்கள், பணம் படைத்தவர்களையெல்லாம் நோக்கி, ‘நீங்கள்
எல்லாம் சேர்ந்து ஏன் ஒரு சுதேசி வங்கியைத் தொடங்கக் கூடாது?’ என்ற
கேள்வியை நவம்பர் 1906இல் எழுப்பினார். மார்ச் 1907இல் நீதியரசர்
கிருஷ்ணசாமி அய்யர் தலைமையில் பல்வேறு வகுப்பார் இணைந்து
தொடங்கிய ஸ்தாபனத்தின் விளைச்சல் தான், சுதந்திரம் கிடைப்பதற்கு 40
ஆண்டுகள் முன்னதாக 1907இல் அதே ஆகஸ்ட் 15 அன்று இந்தியன் வங்கி
பிறந்தது! 

இரும்பைக் காய்ச்சி உருக்குவது, இயந்திரங்கள் வகுப்பது, அரும்பும்
வியர்வை உதிர்த்துப் புவி மேல் ஆயிரம் தொழில் செய்வது மட்டுமல்ல,
கண்டுபிடிப்புகள் பற்றியும் கற்பனையை வளர்த்தார் மகாகவி. ‘சந்திர
மண்டலத்தியல் கண்டு தெளிவோம்’ என்பது இப்போது சந்திரயான் 3
பெற்ற வெற்றியில் கனிந்த அவரது கனவு. ஆனால் அதற்கு அடுத்த
அவரது வரி, ‘சந்தி தெரு பெருக்கும் சாத்திரம் கற்போம்’ என்பது! இன்னும்
கையால் மலமள்ளும் வேலையையும், அந்த வேலையைக் காக்க
அத்தகைய சாதியையும், அவர்கள் மேலான இழிவையும் காத்து
வைத்திருக்கும் நாகரிக சமூகத்தின் மீது, பாரதி இன்றிருந்தால்,

எப்பேற்பட்ட நெருப்புத் துண்டு கவிதை தெறித்து வந்து விழுந்திருக்கும்
அவரிடமிருந்து!

‘காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி
செய்வோம்’ என்ற அவரது அறிவிப்பு, அறிவியல் புரட்சியை மட்டுமா
பேசுகிறது, காசி நகர்ப்புலவர் என்ன மொழியில் பேசுவார்,
அதைக் காஞ்சியில் இருப்பவர் என்ன மொழியில் கேட்டறிவார்…பரஸ்பர
நேயமும் நல்லெண்ணமும் மதிப்பும் கொண்ட பாலத்தைப்
படைப்பதையும் சேர்த்தல்லவா பேசுகிறது கவிதை!  
‘அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய் ..’ என்று
பின்னாளில் அவர் கொண்டாடிய சகோதரி நிவேதிதையை சந்தித்துத்
திரும்பியபின் பெண்ணடிமைக்கு எதிராக அவரது குரல் முழங்கியது.
‘பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா’ என்ற முழக்கமோ, ‘எட்டும்
அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி’
என்ற வெளிப்பாடோ காலத்தால் எத்தனை முந்தியது என்பதை
இப்போதைய சமூகத்திலிருந்து அத்தனை இலகுவாகப் புரிந்து கொள்ள
முடியாது. 

‘எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ…இந்த நிறம்
சிறிதென்றும் இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ’ என்பதை எந்தத்
தருணத்தில் அவர் சிந்தித்திருப்பார் என்று அடிக்கடி வியப்பதுண்டு. ‘குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம், பாப்பா’ என்கிற வரி மட்டும்
என்னவாம்? தான் வாழ்ந்த காலத்தில் தன்னைச் சுற்றிலும் இருந்த
மனிதர்களது கருத்தியல், வாழ்வியல், சமூக நிலவரங்களுக்கு எதிராக
முப்போதும் எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் வாழ்ந்த வாழ்க்கை
முள் மேல் படுக்கையை விடவும் வேதனைகளும், வலிகளும்
நிரம்பியதாகவே இருந்திருக்க முடியும். அதுவும் ‘என்று தணியும் இந்த
சுதந்திர தாகம்…என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’ என்ற
விடுதலை வேட்கையும் மிகுந்த ஒரு ஆவேசமிக்க மனிதரின் நிச்சயமற்ற
அன்றாடத்திலிருந்து எப்பேற்பட்ட படைப்புகள் புறப்பட்டன என்பது
மலைக்க வைப்பது.

‘தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று மொழிப்
பற்று கொஞ்சிய அதே வேளையில், ‘சுந்தரத் தெலுங்கு’
உள்ளிட்டுப் பல்வேறு மொழிகளையும்  கொண்டாடியவர். மிக உயர்ந்த
தொட்ட பெட்டா சிகரத்தில், ‘காக்கை குருவி எங்கள் சாதி………நோக்கும்
திசையெல்லாம் நாமன்றி வேறில்லை, நோக்க நோக்கக் களியாட்டம்’
என்ற வரிகளே பொறிக்கப்பட்டுள்ளது. பாரதியின் குயில் பாட்டு அவரது
இசை ஞானத்திற்கும், ‘உயிர்களிடத்து அன்பு வேண்டும்’  அவரது உன்னத
நோக்கிற்கும், கவித்துவ மொழிக்கும் மகத்தான சான்று.
தத்துவத் தேடலில் அவர் தொடர்ந்து ஈடுபட்டிருந்ததை அடுத்தடுத்து அவர்
படைத்த கவிதைகள் பேசுகின்றன. ஆன்மீக உணர்வுகளுக்கு
உட்பட்டிருந்தவர் தான் பாரதி. இறை நம்பிக்கை இருந்தது அவருக்கு.

ஆனால், ஒரு கட்டத்தில் மாயாவாத அத்வைத
தத்துவத்தைக் கடுமையான கேள்விகளுக்கு உட்படுத்திய அவரது
சிந்தனையின் ஒளிக்கீற்று தான், ‘நிற்பதுவே நடப்பதுவே
பறப்பதுவே…நீங்கள் எல்லாம் சொப்பனம் தானோ…பல தோற்ற
மயக்கங்களோ’ என்ற கவிதை !  ‘கற்பதுவே…. கேட்பதுவே …
கருதுவதே…நீங்கள் எல்லாம் அற்ப மாயைகளோ..உம்முள் ஆழ்ந்த
பொருள் இல்லையோ’  என்பது அடுத்த அடி.  அந்தக் கவிதைக்கு முன்
சொற்சித்திரமாக உரைநடையில் பாரதி, இந்த உலகமே பொய் எனும்
வேதாந்திகளைச் சாடி, ‘கொட்டுகின்ற தேள் பொய்யோ, அதனால் ஏற்படும்
வலியும் பொய்யோ…’ என்று கேள்விகள் எழுப்பி, உலகில் காண்பது,
கேட்பது, உணர்வது எல்லாம் உண்மையன்றி மாயை அல்ல என்று எழுதி
இருப்பார். 

‘மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டும்’ என்றவர் அவர். ‘என்றன்
பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்’ என்கிற குரல்
இன்னும் கூர்மையானது. அதனால் தான், பொதுவுடைமைப் போராளி
தோழர் ப ஜீவானந்தம் என்கிற ஜீவா, மாநிலம் முழுவதும் மகாகவியின்
கவிதைகளைக் கொண்டு சேர்த்தார். பாரதியை மகாகவி என்று
வகைப்படுத்த முடியாது என்று முதலில் நிலையெடுத்த எழுத்தாளர் கல்கி
போன்றோர் அந்தப் புதிய சூழலில் தான், பாரதிக்கு மணிமண்டபம்
கட்டுவோம் என்று பின்னர் வேறு நிலையெடுத்தது. 

மகாகவி தனது எளிமையால், எழுத்தின் வலிமையால், அதனுள்
சுடர்விடும் உண்மையால், உணர்ச்சிகளின் ஆவேசப் புயலால், அக்கினிக்
குஞ்சுகளாய்த் தெறிக்கும் சொற்களால் நிலைபெற்று விட்டவர். அவரது
நினைவு நாள் செப் 11 ஆக இருக்கலாம், அவரை நினைக்காத நாள் ஒரு போதும் இருக்க முடியாது.

One comment

  1. மகாகவிக்கு ஒரு மகத்தான நினைவு கட்டுரை…

Comment here...