நமது சிறப்பு நிருபர்
பாரம்பரியக் கருவிகளைக் கொண்டு தொழில் செய்யும் கலைஞர்களின்
குடும்பங்களை ஊக்குவித்து, பாரம்பரியத் தொழிலை மேற்கொள்பவர்களுக்கு
ஊக்கமளித்திடும் வகையில் “பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா” வருகிற
செப்டம்பர் 17ம் தேதி நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பி, சலவைத் தொழிலாளர், காலணி
தைப்பவர், கொத்தனார், கயிறு செய்பவர், முடி திருத்தும்
தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், தையல்காரர், மீன்பிடி வலை
தயாரிப்பவர், படகு தயாரிப்பவர், கவசம் தயாரிப்பவர், இரும்புக் கொல்லர்,
கூடை/ பாய்/ துடைப்பம் தயாரிப்பவர், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்
உள்ளிட்ட 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் இந்த திட்டத்தில்
நிதியுதவி பெறத் தகுதி உடையவர்கள் ஆவர் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறும் கைவினைத் தொழிலாளர்களுக்கு
`விஸ்வகர்மா’ சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும்
முதல் தவணையாக ரூபாய் ஒரு லட்சமும், இரண்டாவது தவணையாக
ரூபாய் இரண்டு லட்சமும் 5% வட்டியுடன் கடனாக வழங்கப்படும் என்றும்
குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் குறிப்பிட்ட 18 தொழில்களுக்கும்
பிரத்தியேகமாக அடிப்படைப் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், பயிற்சி
பெறுவோருக்குத் தினமும் 500 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலோட்டமாக பார்க்கும் போது தொழில்முனைவோரை ஊக்குவிக்கும்
திட்டமாக தெரிந்தாலும் நீண்ட கால அடிப்படையில் பல்வேறு சமூக
சிக்கல்களை உருவாக்கிடும் திட்டமாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்
உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்த திட்டத்தின் படி எந்த ஒரு
தனிநபரும் தனக்கு பிடித்த ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்து செய்திட
இயலாது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் ஒரு நபர், தான்
விண்ணப்பிக்கும் அந்த குறிப்பிட்ட தொழிலை தலைமுறை தலைமுறையாக
தனது குடும்பத் தொழிலாக செய்து வந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்
நபர் குறிப்பிட்ட தொழிலை பாரம்பரியமாக செய்து வருகிறாரா என்பதை
கிராம பஞ்சாயத்து தலைவர் விசாரணை செய்து அறிக்கை அளித்த பிறகே
விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்திய சூழலில் தொழில்கள் சமூக ரீதியில் பிரிக்கப்பட்டு, குறிப்பிட்ட
தொழிலைச் செய்யும் சமூகம் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தது என்று
வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட சாதிகள்
தலைமுறை, தலைமுறையாக ஒரே தொழிலையே செய்திட வேண்டும்
என்று கட்டாயப்படுத்தப்பட்டு வந்துள்ளன. இவையே சமூக ஒழுங்காகவும்,
இவை மீறப்பட்டால் கடுமையான தண்டனைகளும் கொடுக்கப்பட்டு வந்தன.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு கல்வி அனைத்து தரப்பட்ட மக்களுக்கும்
பரவலாக்கப்பட்ட பிறகே இந்த நிலைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்
வந்தன. எனினும் இப்போதும் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிற
பின்தங்கிய பகுதிகளில் குலத்தொழில்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த
சூழலில் ஒன்றிய அரசு இப்போது அறிவித்திருக்கும் இந்த விஸ்வகர்மா
திட்டமானது கல்வியின் மூலம் ஓரளவிற்கு முன்னேறிய இந்திய சமூகத்தை
மீண்டும் பல ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்திடும் ஒரு பிற்போக்குவாத
திட்டமாகவே உள்ளது.
மேலும் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையும் இது
போன்ற பிற்போக்குவாத திட்டங்களை அமல்படுத்துவதற்கு ஏதுவான சூழலை
இளைஞர்கள் மத்தியில் உருவாக்கிட உதவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய கல்விக் கொள்கையின் படி Voccational Training என்ற பெயரில் ஆறாம்
வகுப்பு முதலே உள்ளூர் தொழில்களைக் குழந்தைகள் கற்கவேண்டும்
எனவும், 3,5 மற்றும் 8ம் வகுப்புகளில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்
என்றும், 9ம் வகுப்பு முதலே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும்
கொடுக்கப்பட்டுள்ள அம்சங்கள் இங்கு கவனிக்கத்தக்கது. இவை அனைத்துமே
சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு சாதகமாவும், பெரும்பான்மை எளிய
மக்களுக்கு எதிராகவுமே செயல்படும். குழந்தைகளுக்கு படிப்பின் மீதான
விருப்பங்களைக் குறைப்பதிலும், தொழில் செய்வதன் மீதான விருப்பங்களை
அதிகரிக்கும் விதமாகவுமே இவை மாறக்கூடும். இதனால் பள்ளியில்
இடைநிற்றல் என்பது அதிகரிக்கும். இயல்பாகவே சமூகத்தின் விளிம்பு
நிலையில் இருக்கின்ற, கல்வி ஒன்றையே ஆயுதமாகக் கொண்டு முன்னேற
நினைக்கின்ற சாமானிய குடும்பத்துக் குழந்தைகளின் படிப்பையே இவை
அதிகமாக பாதிக்கும்.
இவ்வாறு புதிய கல்விக்கொள்கையால் பள்ளியில் இருந்து விடுபடும் அல்லது
கல்லூரிப் படிப்பை தொடங்க இயலாமல் இருக்கும் 18 வயது நிரம்பிய
மாணவர்களுக்கு தன்னுடைய குலத் தொழிலைத் தேர்ந்தெடுக்க வேண்டிய
கட்டாயத்தை உருவாக்கவே விஸ்வகர்மா திட்டம் உதவும். எனவே இந்த
திட்டத்தில் சேர்வதற்கான குறைந்தபட்ச வயதை 18 ல் இருந்து 22 ஆக
மாற்ற வேண்டும். இதன் மூலம் குறைந்தபட்சம் ஒரு பட்டப்படிப்பையாவது
மாணவர்கள் படித்து முடிக்க வாய்ப்பு ஏற்படும். மேலும் மிகமுக்கியமாக
இந்த திட்டத்தில் குறிப்பிட்ட ஒரு தொழிலுக்காக விண்ணப்பம் செய்பவர்,
அந்த தொழிலை பாரம்பரியமாக செய்து வந்திருக்க வேண்டும் என்ற
நிபந்தனை நீக்கப்பட வேண்டும். எந்த ஒரு தனி நபரும் தான் விரும்பும் எந்த
ஒரு தொழிலையும் செய்திட வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.