யாத் வஷேம் – நூல் அறிமுகம்

பரிதிராஜா இ

“யாத் வஷேம்” இது ஹீப்ரூ மொழி வாசகம். இந்த பெயரில் தான்
இஸ்ரேலில் ஹிட்லரின் இன அழிப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்ட
லட்சக்கணக்கான யூதர்களுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பெயரில் படைக்கப்பட்டிருக்கும் இந்தப் புனைவு யூதர்கள் சந்தித்த
துயரங்களை பேசுகிறது. அந்நாளைய இன அழிப்பு நடவடிக்கையிலிருந்து
தப்பிக்க, புலம்பெயர்ந்து இந்தியா வந்த ஒரு சிறுமியின் கதையாக, விட்டு
வந்த உறவுகளின் தேடலாக விரிகிறது.

அகதியாக இந்தியாவுக்கு…

ஆரிய இன மேட்டிமை கருத்தியலால் தன் சொந்த நாட்டிலிருந்து தப்பி
வரும் ஹ்யானா என்னும் சிறுமி தன் தகப்பனுடன் சாதி அடுக்குகளால்
கெட்டிபட்டுப்போன இந்தியாவில் தஞ்சமடைகிறாள். இங்கிருக்கும்
வேறுபாடுகளை கண்டு, இங்கிருந்தும் விரட்டப்பட்டால் எங்கு போவது என்று
அச்சமடைகிறாள். வந்த இடத்தில் அவளுடைய தந்தை மரணமடைந்து விட,
தனித்து விடப்படும் அவளை எவ்வித விகல்பமும் இல்லாமல் ஒரு குடும்பம்
சுவீகரித்துக்கொள்கிறது. அந்த குடும்பத்தின் தலைவியும், நான்கைந்து
பிள்ளைகளுக்கு அம்மாவுமான அந்தப் பெண் தான் சொல்லும் கதைகளால்,
நடவடிக்கைகளால் சகிப்புத்தன்மையை, பரந்த மனதை பயிற்றுவிக்கிறாள்.
அந்தப் பாடம் ஹ்யானாவுக்கு மட்டுமல்லாது, வாசிக்கும் நமக்கும் தான்
என்பதை தனியாக சொல்லத் தேவையில்லை.

கூர்மையான கேள்விகள்…

வந்த இடத்தில் அவளுக்கு வசதியிலோ அல்லது அன்பிலோ குறையில்லை
என்றாலும், தன் ரத்த சொந்தங்களை நினைத்து, அவர்களின் நிலை தெரியாத
தடுமாற்றம் அவளது இந்திய வாழ்க்கையை வேதனையாக்குகிறது. வளர,
வளர யதார்த்தம் புரிகிறது. தன் குடும்பத்தை நினைத்த ஏக்கம் மறைந்து,
அவள் இப்படி தப்பி ஓடி வர வேண்டியதற்கான காரணத்தை தேடும்
கேள்விகள் முளைக்கின்றன. நிறைய வாசிக்கிறாள். பதில்களை கண்டறிந்து
நமக்கு விளக்குகிறாள். விமர்சனங்களை முன்வைக்கிறாள். அவளுடைய
விமர்சனங்கள் நம்மையும் தாக்குகின்றன; தடுமாற வைக்கின்றன.
அநீதிகளுக்கு எதிராகவும், அக்கிரமங்களுக்கு எதிராகவும் குறைந்தபட்சம்
குரலைக்கூட உயர்த்தாத நம்மை குற்றவுணர்வுடன் நெளிய வைக்கின்றன.
” நாகரீகத்தில் முன்னேறிய ஐரோப்பாவில் இருந்த ஜெர்மனியில் தான்
ஹிட்லர் உருவாகியிருந்தான்”, “ஹிட்லரின் நாசிசத்தை ஜெர்மனி
எதிர்க்கவேயில்லையே; லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதை உலகம்
அமைதியாக வேடிக்கை பார்த்தது”. “ஹிட்லருக்கு எதிராக நடந்த ஒரே
பொதுப் போராட்டம் பெண்களுடையதாக இருந்தது”.

இவையெல்லாம் ஹ்யானா நம் மீது வீசும் சொல்லம்புகள். “தாங்க முடியாத வலியை
சந்தித்த ஓர் இனம் எப்படி அத்தகைய வலியை இன்னோர் இனத்திற்கு தர முடியும்?”
என்று நிகழ் உலகில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக, முஸ்லீம்களுக்கு
எதிராக ஒடுக்குமுறையை கையில் எடுத்திருக்கும் யூத நாடான இஸ்ரேலை
சாடுகிறாள். “உலகம் அநீதியில் கிடக்கும் போது எதுவும் செய்யாமல்
அமைதியாக வேடிக்கை பார்த்தவர்கள் என்ற பழியை சுமக்க வேண்டுமா?”
என்று தன் மகனிடம் அறச்சீற்றம் கொள்கிறாள். தன்னால் இயன்ற வழியில்
போர்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு உதவுகிறாள். தன் குடும்பப்
பொறுப்புகள் குறைந்த பின்னர் தானும் அத்தகைய போராட்டங்களில்
பங்கேற்கிறாள். அநீதிகளுக்கு எதிராக போராட வேண்டியதன் அவசியம்
வாசிக்கும் நமக்கும் அழுத்தமாக பதிவு செய்யப்படுகிறது. சித்ரா பௌர்ணமி
இரவில் வாசிக்கப்படும் சித்ரகுப்தனின் கதையை கேட்பவர்களுக்கு மோட்சம்
கிடைக்கும் என்று சொல்வார்கள். அது போல, ஹ்யானாவாக வந்து
அனிதாவாக வாழ்ந்த இந்தப் பெண்ணின் வாழ்க்கை கதை வாசிப்பவர்களுக்கு
அன்பும், பரந்த மனதும், அநீதிக்கு எதிரான போர்க்குணமும் கிடைக்கின்றன.

ஆசிரியரைப் பற்றி:

பெங்களூருவில் இந்தியன் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் பொறியாளராக
பணியாற்றிய திருமதி நேமி சந்திரா அவர்களால் கன்னடத்தில் எழுதப்பட்ட
நாவல் இது. பெங்களூரு நகரில் யூதர்களுக்கான மயானம் இருப்பதைக்
கண்டு ஆச்சர்யத்துடன், இந்தியாவுக்கு ஏன் யூதர்கள் வர வேண்டும்? என்ற

கேள்வியோடு இந்த நாவலுக்கான தேடலை ஆரம்பித்ததாக ஆசிரியர்
கூறுகிறார். அவருடைய தேடலில் கிடைத்தது இந்தியாவிலிருந்து பல
ஆயிரம் கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் ஜெர்மனியில் நடந்த
கொடூரங்கள். கோடானு கோடி மனிதர்கள் தங்கள் நாட்டு அரசினாலேயே
தங்களின் உடைமைகள், உரிமைகள் பறிக்கப்பட்டு அகதிகளாக, அடிமைகளாக
ஆக்கப்பட்ட துயரம். ஹிட்லர் என்னும் நபர் வரலாற்றில் கொல்லப்பட்ட
பின்னரும், மதம், இனம், நிறம், மொழி என்று பல்வேறு பெயர்களால்
ஒற்றைத் தன்மையை கொண்டு வரத்துடிக்கும் நபர்கள், அமைப்புகள் வந்தபடி
இருக்கும் அச்சத்தை இந்த நூல் வழியே பதிவு செய்திருக்கிறார்.
இந்தியாவில் துவங்கி பின் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா,
இஸ்ரேல் என்று பயணித்து இறுதியில் இந்தியாவிலேயே முடிவடைகிறது.
இந்த நெடும் பயணத்தில் முன்வைக்கப்படும் பெரும்பான்மை வாதத்திற்கு
எதிரான கருத்துக்களும், அதிகாரத்தின் பெயரால் எளிய மனிதர்களின் மீது
ஏவப்படும் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலும் இந்த நாவலை
தனிச்சிறப்பு வாய்ந்ததாக ஆக்கியுள்ளது.

மொழிபெயர்ப்பு நூல் என்ற உணர்வைத் தராமல், வாசிக்க எடுத்தால்
மூடி வைக்க முடியாதபடி வாசகனை கட்டிப்போடும் தன்மையில் கே.
நல்லதம்பி அவர்கள் இந்நூலை மொழிமாற்றம் செய்துள்ளார்.
பாசிச கருத்தியல்கள் மிக வேகமாக கிளை பரப்பி வரும் இக்காலத்தில்
நாம் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் “யாத் வஷேம்”. இந்நூலின் முக்கிய
கருத்தான, “ஹிட்லர் எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம்; ஏனென்றால், சக
மனிதனை வெறுக்கும் பண்பு நம் அனைவரின் மூளையிலும் இருக்கிறது”
என்பது நாம் மறுக்காமல் சிந்திக்க வேண்டிய உண்மை.

One comment

Comment here...