பெண்களின் ஊதியமற்ற உழைப்பிற்கான ‘உரிமைத் தொகை’

எஸ்.பிரேமலதா

அதிகாலை எழுந்தது முதல் இரவு உறங்கப் போகும் வரை வீட்டு வேலைகளில் இடுப்பொடிய உழன்று கொண்டிருக்கும் பெண்களுக்கு, ஒரு முதற்கட்ட அங்கீகாரமாக தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம்.

ஒரு புறம் நாள் முழுதும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருந்தாலும், ‘சும்மா தான் இருக்கா வீட்டுல….’ எனும் அடையாளத்தை மனக்குமுறலுடன் சுமந்து கொண்டிருந்த பெண்கள், சுயமரியாதையின் அடையாளமாய் தமது வங்கிக் கணக்குகளில் தற்போது மாதாமாதம் 1000 ரூபாயை பெற்றுக் கொள்ளத் துவங்கியுள்ளனர்.

ஊதியமற்ற உழைப்பின் கொடுஞ்சுமையில் இருந்து பெண்களின் உழைப்பை மீட்க, பெண்ணீயவாதிகள் பல ஆண்டுகளாக முன்வைத்து போராடிக் கொண்டிருக்கும் கோரிக்கை இது. குடும்பங்களுக்குள்ளாக பெண்கள் செய்து வரும் அன்றாட வீட்டு வேலைகள், மதிப்பற்ற உழைப்பாகவே காலம் காலமாய் கருதப்பட்டு வருகின்றது.

பெண்களின் உழைப்பை மலிவானதாக கருதும் பிற்போக்குத்தனமான பார்வை உலகளவில் அனைத்து நாடுகளிலும் வியாபித்து உள்ளது. இருப்பினும், இந்தியாவில் இந்தப் பார்வை மிக வலுவாக வேரூன்றி உள்ளது.  வீட்டு வேலைகளில் பெண்களின் வருமானமில்லாத உழைப்பு, உலக மொத்த பொருளாதாரத்தில் 13% பங்கிற்கு சமமானதாக கணக்கிடப்படுகிறது. ஆனால், இந்தியாவை பொறுத்த மட்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 40% பங்கிற்கு சமமானதாக கணக்கிடப்படுகிறது. அதாவது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத, இந்தியப் பெண்கள் வீட்டு வேலைகளில் செலுத்தும் உழைப்பின் மதிப்பு நாட்டின் ஜிடிபியில் 40% பங்கிற்கு ஈடானதாகும்.

இந்திய சமூகத்தின் இறுகிக் கிடக்கும் ஆணாதிக்க கட்டமைப்பு, பெண்களை பல நூற்றாண்டுகளாக ‘ஊதியமற்ற உழைப்பு’ எனும் பெயரில் வீட்டுக்குள் முடக்கி வைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது.

மறுபுறம் பொருளீட்டுகிற வேலைகளில் பெண்கள் ஈடுபடுவதற்கான பெருந்தடையாகவும் இது நீடிக்கின்றது. ஏனெனில் பொருளீட்டக் கூடிய வேலைகளில் ஈடுபடும் பெண்கள் தமது வீட்டு வேலைகள் மற்றும் குடும்ப பொறுப்புகள் அனைத்தையும் நிறைவேற்றிய பிறகே, வருமானம் சார்ந்த வேலைகளுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தமான சூழல் தான் இன்றும் நிலவுகிறது. தியாக பிம்பம், சாந்த சொரூபம், மல்டி டாஸ்கிங் என பல்வேறு விதமான பெயர்களில் குடும்ப அழுத்தங்களும், சமூக நிர்ப்பந்தங்களும் அவர்களை நெருக்குகின்றன. 

வீட்டு வேலைகள், சமையல், குழந்தை வளர்ப்பு, முதியோர் பராமரிப்பு, குடும்ப நிர்வாகம் என குடும்பத்திற்குள் பெண்கள் செய்யும் வேலைகள் மதிப்பற்றதாகவே கருதப்படுகின்றன. ஆண்களின் உழைப்பு பெரும்பாலும் பொருளீட்டக்கூடிய தன்மையில் வருமானம் சார்ந்து இருப்பதால், அது மேன்மையானதாக கருதப்படுகிறது. குடும்பங்களுக்குள்ளான கண்ணுக்குத் தெரியாத பெண்களின் உழைப்பு, மலிவானதாக கருதப்படுகிறது.

வீட்டிற்குள் பெண்களின் உழைப்பை மதிப்பில்லாததாகக் கருதும் பார்வையே, உழைப்புச் சந்தையில் பெண்களின் உழைப்பை மலிவானதாக சுரண்டுவதற்கும் அடிப்படையாய் அமைகிறது.  

இத்தகைய பிண்ணனியில், பெண்களின் பொருளாதார சுயசார்பை நோக்கிய நீண்ட, நெடும் பயணத்தில் இந்த ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ ஒரு முக்கியமான மைல்கல். இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை நிறைவேற்றி பெருமிதத்தை தேடிக் கொண்டுள்ளது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. வீடுசார் வேலைகளில் பெண்களின் உழைப்பினை முறையாக மதிப்பிட்டால், பல ஆயிரங்களைத் தாண்டும் என்ற போதிலும், ஓர் ஆரோக்கியமான துவக்கமாக இந்த திட்டம் வரவேற்கத்தக்கது.

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு நேரடியாக வங்கி கணக்குகளில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் மேல் முறையீடு செய்யலாம் எனவும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் பயனாளிகளுக்கான வருமான வரம்பு மற்றும் சில நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்பது போன்ற சில ஆக்கபூர்வமான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு அத்தகைய நியாயமான ஆலோசனைகளை ஆராய்ந்து, குறைபாடுகளை களைந்து இத்திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்த முன்வர வேண்டும்.

இத்திட்டத்தின் அமுலாக்கத்தில் பொதுத் துறை வங்கிகள் வழக்கம் போல், தமது சமூகக் கடமையை சத்தமின்றி நிறைவேற்றிக் கொண்டுள்ளன. ஏற்கனவே பணிச்சுமையால் திணறிக் கொண்டிருக்கும் வங்கிக் கிளைகள், நடைமுறையில் கூடுதல் சிரமங்களை எதிர்கொள்ளவே நேரிடுகிறது. இருப்பினும் ‘1000 ரூபா பணம் வந்துடுச்சு’ என்றதும், பெண்களின் முகத்தில் பூரிக்கும் மகிழ்ச்சியில் சிரமங்கள் காணாமல் போகின்றன.

ஆரம்ப நாட்களில் வங்கிக் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாததற்கான கட்டணம் போன்ற சில சேவைக் கட்டணங்கள், சில வங்கிகளால் இந்த உரிமைத் தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது. இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் உடனடியாக இதை கண்டித்து அறிக்கை வெளியிட்டது. தொடர்ந்து தமிழக அரசும் தலையிட்டு மகளிர் உரிமைத் தொகையில் இருந்து வங்கிகள் சேவைக் கட்டணங்கள் பிடித்தம் செய்யக்கூடாது எனும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

‘கட்டணமில்லா பேருந்து’, ‘மகளிர் உரிமைத் தொகை’ என பெண்கள் முன்னேற்றத்திற்கான செயல் திட்டங்களை தொடர்ந்து அமுல்படுத்தி வருகிறது தமிழக அரசு. இத்தகைய திட்டங்கள் பெண்களது ஊதியமற்ற உழைப்பின் சுமையை பொருளாதார ரீதியிலும், உளவியல் ரீதியிலும் குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கும். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பதன் மூலம், ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த உதவும்.

மொத்தத்தில் ‘நச்சரிக்கும்’ வீட்டு வேலைகளில் தொலைந்து கொண்டிருந்த பெண்களின் உழைப்பு மதிப்பு வாய்ந்ததாக மாறத் துவங்கியுள்ளது. இதுவரையிலும் ‘சும்மா தான் இருக்கா’ என அடையாளப்படுத்தப் பட்ட பெண்கள், சுயமரியாதையோடு தலைநிமிரத் துவங்கியுள்ளனர்.

One comment

  1. தமிழக அரசின் வரவேற்கத் தகுந்த நடவடிக்கைக்கு நன்றி 🙏
    பெண்களின் உழைப்பை மதிக்க முன் வரும் தமிழக அரசு, தனது சத்துணவு திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பெண்களுக்கு காலமுறை சம்பளம் வழங்கி அவர்களின் உழைப்பை குறைவாக இல்லாமல் நியாயமாக மதிப்பிட மற்றும் மதிக்க முன்வர வேண்டும் ✍️

Comment here...