க.சிவசங்கர்
நண்பகல் 12 மணி. குக்கிராமத்தில் ஆளே வராத வங்கிகிளைகள் கூட கூட்டமாகத் தெரியும். வங்கிக் கிளைகளின் பீக் ஹவர் அது. எனில் நகரின் முக்கியப் பகுதியில் உள்ள எங்கள் கிளை அந்நேரத்தில் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. ஒரு புறம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி கிளை மூச்சு முட்டிக் கொண்டிருக்க, “சார் லைன் ல வாங்க சார்” என்று நூற்று முப்பத்து ஐந்தாவது முறையாக மூச்சிரைத்துக் கொண்டிருந்தார் கவுண்டரில் இருந்த ஒரு ஊழியர். “யம்மா மெதுவா பேசுங்கம்மா…யாருப்பா அது சத்தமா வீடியோ பாக்குறது…ஆஃப் பண்ணுப்பா” என்று வழக்கம் போல் அறிவுறுத்திக் கொண்டிருந்தார் எங்கள் கிளை அப்ரைசர். “அக்கவுண்ட் திறந்தப்போ போட்ட மாதிரி கையெழுத்து போடணும் பாட்டி… அப்ப தான் பணம் கிடைக்கும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார் இன்னொரு ஊழியர். “கிளிங் கிளிங்”…மேலாளர் அழைப்பு மணி சத்தம் வந்த அடுத்த நொடி “மேனேஜர் சார் கூப்பிடுறாங்க… என்னன்னு கேட்டுட்டு வந்துர்ரன் சார்” என்று என் பதிலுக்கு காத்திராமல் நடையும் ஓட்டமுமாக கிளம்பினார் என்னருகே நின்று கொண்டிருந்த அலுவலக உதவியாளர்.
குளிரூட்டப்பட்ட அந்த அறை மூச்சுத்திணற காற்றாடியை மூன்றில் கூட்டி வைத்துவிட்டு நிமிர்ந்தேன். அப்போது தான் வந்தார் அவர். அடிக்கடி கிளைக்கு வரும் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெரியவர். ஓரளவிற்கு பரிச்சயமும் உண்டு. வழக்கம் போல் அன்றும் பணம் எடுப்பதற்காக வந்திருந்தார். ஐந்தாயிரம் ரூபாய் பணம் எடுத்து விட்டு “மீதி எவ்வளவு இருக்கு தம்பி?” என்று கேட்டார். 22000 ரூபாய் இருக்குதுய்யா என்று சொன்னேன். அதிர்ச்சியான முகத்துடன், “தம்பி நல்லா பாருங்க, கூடல்லா இருக்கும்” என்றார். நான் மீண்டும் ஒரு முறை அவர் கணக்கை பார்த்துவிட்டு, அய்யா 22000 தான் இருக்கு, என்றேன். அவர் இன்னும் அதிர்ச்சியுடன், “இல்ல தம்பி, 50000 ரூவாய்க்கு மேல இருக்குமே” என்றார். அதற்குள் கவுண்டரில் முணுமுணுப்புகள் ஆரம்பித்து விட்டது.
நான் அவசரம் அவசரமாக அவர் கணக்கு ஸ்டேட்மெண்ட் எடுத்து பார்த்துவிட்டு, “அய்யா ரெண்டு நாளைக்கு முன்னால ஏடிஎம் ல 35000 ரூபாய் எடுத்தீங்கல்லா. அப்பறம் எப்படி இருக்கும்?” என்று சற்று குரல் உயர்த்தி கூறி அவரை அனுப்பி விட்டு அடுத்த வாடிக்கையாளரை பார்க்க ஆரம்பித்து விட்டேன். அவரும் அதிர்ச்சி கலந்த குழப்பத்துடன் நகர்ந்து விட்டார்.
மறு நாள் மாலை நான்கு மணி:
கிளைகளில் பணப் பரிமாற்றம் உள்ளிட்ட வாடிக்கையாளர் சேவைகள் முடிந்து பணம் சரிபார்ப்பு மற்றும் பிற அலுவலக வேலைகள் நடைபெறும் நேரம் அது. ஒரிருவரைத் தவிர யாரும் இல்லை. என் காற்றாடி அணைக்கப்பட்டிருந்தது. இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு வாடிக்கையாளர் தொலைபேசியில் இருந்து மெல்லிய சத்தத்தில் “நான் தேடும் செவ்வந்திப் பூவிது…” என்று இசைஞானி ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தார். இம்முறை அப்ரைசர் ஒன்றுமே சொல்லவில்லை.
முதல் நாள் மதியம் வந்த அதே பெரியவர் மெதுவாக என் கவுண்டருக்கு வந்தார். முந்தைய நாள் காலையில் அவரை சற்று குரல் உயர்த்திப் பேசி விட்டது எனக்குள் ஒரு சங்கடத்தைக் கொடுத்தது. இயல்பாகவே காசளர் பணி என்பது ஒவ்வொரு நொடியும் கவனமாய் இருக்க வேண்டிய பணி; ஒரு நொடி கவனக்குறைவு கூட மிக அதிக பணஇழப்பு அபாயங்களைக் கொண்ட பணியாகும். அதிலும் இரண்டு கவுண்டர்களை ஒன்றாக சுருக்குவது, மிக அதிக கூட்டம், அடிக்கடி ஏற்படும் கணினி தொழில்நுட்ப ரீதியான தடங்கல்கள், ஊழியர் பற்றாக்குறை போன்ற இன்னல்களால் வங்கிக் காசளர் பணி என்பது சமீப காலங்களில் கடுமையான மன அழுத்தங்களைக் கொடுக்கக் கூடியதாக மாறியுள்ளது. வங்கிப் பணியாளர்- வாடிக்கையாளர் இடையிலான உறவில் இவை ஒரு மிகமுக்கிய தாக்கத்தைச் செலுத்துகின்றன.
அவர்: “தம்பி, இப்பத்தான் கொஞ்சம் ஃபிரீயா இருப்பிய ன்னுட்டு வந்தேன்”.
நான்: “சொல்லுங்கய்யா என்ன விஷயம்? நேத்து எதோ கொழப்பத்துலயே போன மாதிரி இருந்துச்சு..”.
அவர்: தம்பி அந்த பணத்தை நான் எடுக்கவே இல்லைய்யா.
நான்:அய்யா, உங்க ஏடிஎம் கார்ட்ல இருந்து தான் பணம் போயிருக்கு. நல்லா ஞாபகப்படுத்தி பாருங்க.
: இல்ல தம்பி, நல்லா ஞாவம் இருக்கு. கடைசியா நான் ஏடிஎம் ல பணம் எடுத்து பத்து நாளுக்கு மேல இருக்கும்.
: அய்யா உங்க வீட்டுல யாருல்லாம் இருக்காங்க? யாருக்கெல்லாம் உங்க பாஸ்வேர்ட் தெரியும்?
: எனக்கும், என் பையனுக்கும் மட்டும் தான் தம்பி தெரியும்.
: பையன் என்ன பன்றார்?
: படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கான்ய்யா.
என்ன நடந்திருக்கும் என்று என்னால் ஓரளவிற்கு ஊகிக்க முடிந்தது. “அய்யா முதல்ல உங்க பையன்ட போய் கேளுங்க. அவரு தான் எடுத்துருப்பாரு…” என்றேன்.
அவர்: இல்ல தம்பி. அவன் அப்படிப்பட்ட பையன் இல்ல. எனக்கு தெரியாம ஒரு ரூவா கூட எடுக்க மாட்டான். இது வரைக்கும் அப்படி நடந்ததே இல்ல.
நான் : (மனதிற்குள் சிரித்துக் கொண்டு…) அந்த பரிவர்த்தனையை இன்னும் கூர்மையாக பார்த்து விட்டு…அய்யா, ஞாயிற்றுக்கிழமை காலை பத்தரை மணி வாக்குல எங்க இருந்தீங்க ன்னு ஞாபகம் இருக்கா?.
: ஒரு சில நொடி யோசிப்பில், தம்பி நான் சர்ச்சுக்கு போயிருந்தேன்.
: அப்ப உங்க பையன் எங்க இருந்தாரு?
: அன்னைக்கு அவன் “டயர்டா இருக்கு, சர்ச்சுக்கு வரலன்னு சொல்லிட்டு வீட்டுல இருந்தான்”.
: ஏடிஎம் அட்டை எங்க இருந்துச்சு?
: வீட்டுல தான் வச்சிட்டு போனேன்.
நான்: அனைத்தும் புரிந்தவனாக, போய் உங்க பையன்ட கேளுங்க. அவர் தான் எடுத்திருப்பார்.
: இல்ல தம்பி. அவன் அப்படிப்பட்ட பையன் இல்ல.
: அய்யா நீங்க ரொம்ப குழப்பிக்கிறீங்க. போய் உங்க பையன்ட்டயே கேட்டுருங்க.
அவர்: இல்ல தம்பி. ஒருவேளை அவன் எடுக்கலன்னா, அப்பா நம்மள சந்தேகப்பட்டுட்டாரே ன்னு மனசு கஷ்டப்படுவான்லா. அதனால நான் கேக்கப் போறது இல்ல.
அவர் சென்ற பிறகு, “பையன் தான் எடுத்திருப்பான் ன்னு அவர் அறிவுக்கு தெரியுது. ஆனா அவர் மனசு அத ஒத்துக்க மாட்டேங்குது” ன்னு என் அருகில் இருந்த ஊழியரிடம் சொன்னேன்.
“மங்கைக்குள் என்ன நிலவரமோ…மஞ்சத்தில் விழும் நிலை வருமோ…” என்று மெலிதாக கொஞ்சிக் கொண்டிருந்தார் ஜானகி.
இரண்டு நாட்கள் ஓடியது. மீண்டும் ஒரு மாலை நேரத்தில் பாஸ் புக் என்ட்ரி போட வந்தார் பெரியவர். “ரெண்டு நாளா ராத்திரி தூக்கம் வரல தம்பி. நெஞ்செல்லாம் வலிக்கிற மாதிரி இருக்கு” என்றார். நான் பாஸ்புக்கை வாங்கிக்கொண்டு “அய்யா பையன்ட்ட கேட்டீங்களா?. என்ன சொன்னார்?” என்றேன். “அவன் தான் எடுத்திருக்கணும்னு தெரியுது தம்பி. இவ்ளோ பெரிய பணத்தை எடுத்து என்ன பண்ணிருப்பான் ன்னு யோசிக்கவே முடியல. ஆனா ஒன்னு மட்டும் முடிவு பண்ணிட்டேன். நான் அவன்கிட்ட கேக்கப் போறது இல்ல தம்பி. ஒருவேளை ஏதாச்சும் அவசர தேவைன்னு எடுத்துட்டு அப்பாக்கு தெரியாம மறுபடியும் அக்கவுண்ட் லயே போட்டுறலாம் ன்னு நெனச்சிருக்கலாம்லா?. இப்ப நான் கேட்டுட்டா அவனுக்கு கஷ்டம் ஆயிரும்லா. ஒருவேளை பணம் திரும்பி வராமலே போனாலும் பரவால்ல தம்பி. நான் அவன்கிட்ட கேக்கப் போறது இல்ல”. தீர்மானமாக சொல்லிவிட்டு பாஸ்புக்கை வாங்கிக் கொண்டு நகர்ந்து விட்டார்.
நான் என் பக்கத்தில் இருந்த சக ஊழியரிடம் சொன்னேன். “பாவம் நல்ல மனுஷன். பையன் மேல அவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கார். ஆனா அவன் இப்படி நம்பிக்கை துரோகம் பன்றான். அதை அவரால் உணர முடியல. பாசம் தடுக்குது”…
நான்கைந்து நாட்கள் கழித்து ஒரு நாள் காலை 11.30 மணி. கிளையில் ஓரளவிற்கு கூட்டம்.
“பாட்டி உங்க கணக்குல 200 ரூவா தான் இருக்கு. நீங்க 700 ரூவா எழுதி இருக்கீங்க. மாத்தி எழுதிட்டு வாங்க…” என்று கூறிக் கொண்டிருந்தார் என் சக ஊழியர். ஆனால் அந்த பாட்டியோ, ரொம்ப தெளிவாக “ஏம்மா… நான் மூணு தடவ சிலிண்டர் வாங்குன பணத்த எடுக்கவே இல்ல. ஒரு தடவைக்கு 250 ரூவா கணக்கு போட்டு பாரு. எழுநூறு ரூவாய்க்கு மேலயே கெடக்குமேம்மா…” என்றார். “அதெல்லாம் முன்னாடி பாட்டி. இப்ப ஒரு சிலிண்டருக்கு 65 ரூவா தான் மானியம் வருது…” என்று விளக்கிக் கொண்டிருந்தார் ஊழியர். “அடப் பேதீலபோவான்…” என்றவாறு நகர்ந்தார் பாட்டி.
என் காற்றாடி ஒன்றாம் நம்பரில் சுற்றிக் கொண்டிருந்தது. பெரியவர் மீண்டும் பணம் எடுக்க வந்தார். “என்னய்யா எப்படி இருக்கீங்க. ஏதும் தகவல் தெரிஞ்சிச்சா?”…கேட்டுட்டே கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்து பணம் எடுத்து கொடுத்தேன். “ஒரு தகவலும் இல்ல தம்பி. ஒவ்வொரு நாளும் அவன் முகத்தை பார்க்கும் போதுல்லாம் அவ்ளோ கஷ்டமா இருக்கு. என்ன செய்ய???…சரி மீதி எவ்ளோ பணம் இருக்குன்னு பார்த்து சொல்லுங்க” என்றார். “48000 ரூபாய் இருக்குதுய்யா”…சொல்லும் போதே இருவரும் ஒருசேர அதிர்ச்சியானோம்.
உடனே ஸ்டேட்மெண்ட் எடுத்து பார்த்தேன். “அய்யா 35000 ரூபாய் நேத்து உங்க அக்கவுண்டுக்கு வந்திருக்கு. நோபல் ன்னு பேர் இருக்கு” என்றேன். பெரியவர் முகத்தில் பிரகாசம். “எம் பையன் தான்…நோபல்…அவன் தான்…” அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு, “தம்பி பாத்தியளா….நான் சொன்னம்லா… எம் பையன நான் அப்படி வளக்கல. ஒருவேள நான் கேட்டிருந்தேன்னா அவன் எவ்ளோ கஷ்டப்பட்டுருப்பான். இப்ப என் நம்பிக்கை வீண் போகல பாத்தியளா”…
நானும் இதை எதிர்பார்க்கவில்லை. “ரொம்ப சந்தோசம்ய்யா… சரி பையன் பணத்த எதுக்கு எடுத்தார் ன்னு தெரிய வேண்டாமா?” என்றேன். “வேண்டாம் தம்பி. இவ்ளோ பெரிய பணத்த எடுத்துருக்காம்னா, ஏதோ முக்கியமான தேவைக்கு தான் எடுத்துருப்பான். இது இப்படியே அவனுக்கு தெரியாமலே போகட்டும்” என்றார். நோபல்- பெயருக்கு ஏற்றவாறு நம்பிக்கையை காப்பாற்றி விட்டான். அந்த பெரியவர், தன் மகன் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு தகப்பனாக உயர்ந்து நின்றார். ஆம் அவர் நம்பிக்கை ஜெயித்தது.
அதற்குள் கவுண்டரில் பின்னால் இருப்பவர் தலையை சாய்த்துப் பார்க்க, “சரிய்யா…ரொம்ப சந்தோஷம்…போய்ட்டு வாங்க” என்று அனுப்பி வைத்தேன். “இன்னிக்கு நல்லா தூங்குவேன் தம்பி” என்றவாறு விடைபெற்றார். “லைன்ல வாங்க சார்… யம்மா மெதுவா பேசுங்கம்மா… ஃபோன் ஆஃப் பண்ணு தம்பி…கையெழுத்து தப்பா இருக்கு சார்…”…நேரம் 12 நோக்கி நகர்ந்தது. காற்றாடியை மூன்றுக்கு திருப்பினேன்.
அற்புதம் சிவசங்கர்…. அருமை…
வேணு
வங்கி உள்ள போய்விட்டு வந்த மாதிரி இருக்கு… எழுத்து தொடரட்டும்.
மிகவும் அருமை அழகான நடை
நெகிழ்ச்சியான கதை… வாழ்த்துக்கள் சிவசங்கரன்
பிரேமா
கோடை வியர்வையை வருடும் தென்றலென உள்ளது சிறுகதை 💐
வாழ்த்துக்கள் எழுத்தாளரே👏