பொதுவுடைமைக் காடும், போராடும் காக்கைகளும்

க.சிவசங்கர்

மனித சமூகம் தோன்றியது முதல் இன்று வரை பல்வேறு வகையான சமூக அமைப்பு முறைகளைக் கடந்து வந்துள்ளது. இந்த சமூக மாற்றங்களுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் உற்பத்தி முறைஎன்ற ஒன்று மட்டுமே அவற்றின் அடிப்படை அம்சமாக இருந்து வந்துள்ளது. இத்தகைய சமூக மாற்றங்களை ஒரு எளிய கதை வடிவில் விளக்கும் முயற்சியே இது.

பாகம் 1: பாட்டியும், காக்கைகளும்:

அது ஓர் அழகிய, அடர்ந்த, செழிப்பான காடு. அந்த காட்டில் பல்வேறு விலங்குகளும் பறவைகளும் வாழ்ந்து வந்தன. ஒரு நாள் அந்த காட்டில் உள்ள ஒரு மரத்தடியில் ஒரு வயதான பாட்டி சோகத்துடன் அமர்ந்து இருந்தாள். அப்போது அந்த மர உச்சியில் அமர்ந்து இருந்த இரண்டு காக்கைகள் பாட்டியைப் பார்த்தன. பிறகு அந்த காக்கைகள் மெதுவாக பாட்டியின் அருகில் வந்து பாட்டியைப் பார்த்து, “ஏன் பாட்டி சோகமாக உள்ளாய்?” என்று கேட்க, பாட்டி தான் வழி தவறி இங்கு வந்து விட்டதாகவும், தனக்கு மிகவும் பசிப்பதாகவும் கூறினாள். அதற்கு காக்கைகள், நீ சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு இந்த காட்டில் இல்லையே என்று சொன்னன. அதற்கு பாட்டி தனக்கு நன்றாக வடை சுட தெரியும் என்றும், ஆனால் வடை சுடுவதற்கான சட்டி, அடுப்பு மற்றும் குச்சிகள் தன்னிடம் இல்லை என்றும் கூறினாள். உடனே காக்கைகள், அவற்றை நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூறி கிளம்பின.

ஒரு காகம் காட்டின் உள்ளே சென்று காய்ந்த குச்சிகளைப் பொறுக்கிக் கொண்டு வந்தது. இன்னொரு காகம் காட்டின் ஒரு பகுதிக்குச் சென்று ஒரு மண் சட்டி மற்றும் மண் அடுப்பையும் பிற காக்கைகளின் உதவியுடன் எடுத்து வந்தது. பாட்டி மிகுந்த மகிழ்ச்சியுடன் தன்னிடம் இருந்த பொருட்களை வைத்து காக்கைகளின் உதவியோடு வடை சுட்டாள். கிடைத்த வடைகளைப் பாட்டி மற்றும் உடன் இருந்த காக்கைகள் அவரவர் தேவைகளுக்கு ஏற்ப பகிர்ந்து கொண்டனர். அனைவருக்கும் பசி அடங்கியது. இது தினமும் தொடர ஆரம்பித்தது. காக்கைகள் தினமும் குச்சிகளைப் பொறுக்கிக் கொடுக்க, பாட்டி வடை சுட்டு பகிர்ந்து உண்டனர்.

நரிகளின் வருகையும், உபரியின் உருவாக்கமும்:

நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் வழக்கம் போல் பாட்டியுடன் சேர்ந்து வடை சுட்ட காக்கைகள் அவற்றை மரத்தின் மீது அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தன. அப்போது வெகு நாட்கள் சரியான சாப்பாடு கிடைக்காமல் பசியுடன் அந்த வழியாக வந்த சில நரிகள் இதை கவனித்தன. அவை காக்கைகளிடம், தங்களுக்கும் மிகவும் பசிப்பதாகவும், சில வடைகள் தரும் படியும் கேட்டன. அதற்கு காக்கைகள், இது பாட்டியும் தாங்களும் சேர்ந்து உருவாக்கிய கூட்டு உழைப்பின் பலன் என்று சொல்ல, உடனே நரிகள் பாட்டியைப் பார்க்கச் சென்றன.

பாட்டியிடம் சென்ற நரிகள் தங்களுக்கும் இந்த புதிய உணவு வேண்டும் என்றும், அதற்கு தாங்கள் என்ன வேலை கொடுத்தாலும் செய்வதாகவும் கூறின. பாட்டி தனக்கு வேலை செய்ய கூடுதல் ஆட்கள் கிடைத்த மகிழ்ச்சியில் சேர்த்துக் கொள்கிறாள். நரிகளின் உடல் உழைப்பு காக்கைகளை விட அதிகமாக இருக்க உற்பத்தி பெருகுகிறது. மேலும் நரிகளிடம் மிக அதிக நேரம் வேலை வாங்கியும், மிகக்குறைவான வடைகளை மட்டுமே கூலியாக கொடுத்தும் வந்ததால் உற்பத்தியான வடைகள் மீதமாகி “உபரி” ஏற்படத் துவங்கியது.

காலங்கள் கடக்கின்றன. பாட்டிக்கு ஒரு ஆசை பிறக்கிறது. நாம் தானே வடை சுடுகிறோம். இந்த காக்கைகள் குச்சி பொறுக்கி வந்து வடை சுடும் போது நமக்கு சில உதவிகள் மட்டும் தானே செய்கின்றன. நாம் ஏன் அவைகளுக்கு சமமான பங்கு கொடுக்க வேண்டும்?. பாட்டி ஒரு குழப்பத்துடனே தூங்கினாள். மறுநாள் ஒரு யோசனையுடன் எழுந்த பாட்டி, நரிகளிடம் ஒரு ரகசிய ஆணை பிறப்பித்தாள். அதன் படி வடை சுடத் தேவையான குச்சிகள் கிடைக்கும் காட்டின் அந்த பகுதி முழுவதும் யாரும் நுழைய முடியாத படி வேலி இடப்பட்டு பூட்டி பாட்டியிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது. இப்போது பாட்டி நினைத்தால் மட்டுமே காட்டில் இருந்து குச்சிகளை எடுக்க முடியும் என்ற நிலை. பாட்டியின் அனுமதியுடன் தினமும் நரிகள் சாவியைப் பெற்று, வேலியைத் திறந்து விட, காக்கைகள் குச்சிகளை எடுத்து வர ஆரம்பித்தன. அது வரை அனைவருக்கும் பொதுவாக இருந்த காடு இப்போது பாட்டியின் தனிக் கட்டுப்பாட்டில் வந்தது.

காக்கைகள் மற்றும் நரிகளின் கடின உழைப்பால் பாட்டியிடம் தன் தேவைக்கு அதிகமான வடைகள் சேர்ந்து உபரி பெருக ஆரம்பித்தது. எனவே பாட்டி ஒரு முடிவிற்கு வந்து நரிகளின் மூலம் வடையைப் பிற பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்க ஆரம்பிக்கிறாள். விற்பனை மூலம் லாபம் கிடைத்தது. வியாபாரம் சூடு பிடிக்கவே உற்பத்தி தொடர்ந்து அதிகரித்தது. இதனால் வடை செய்ய தேவையான மூலப்பொருட்களான மாவு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் தேவையும் அதிகரிக்கிறது. இதனால் புதிதாக அந்த காட்டில் மாவு மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்யும் சிறு சிறு பட்டறைகள் உருவாகத் துவங்குகின்றன. இவ்வாறு காட்டின் இன்னொரு பகுதியில் வசிக்கும் மான்களிடம் இருந்து மாவையும், அணில்களிடம் இருந்து எண்ணெயையும் பாட்டி பெற்றுக் கொள்கிறாள்.

கலகமும், கடவுளும்:

நாட்கள் நகர்கின்றன. பாட்டி வழக்கம் போல் வடை சுட்டு முடித்தவுடன் அதில் ஒரு சிறு பகுதியை மட்டும் காக்கைகளுக்கும், கொஞ்சம் நரிகளுக்கும் கொடுத்து விட்டு மீதியை தன்னிடமே வைத்துக் கொள்கிறாள். ஒரு நாள் காக்கைகள் பாட்டியிடம் சென்று, இது சரி அல்ல என்றும், சமமாக பிரிப்பது என்று தானே நாம் முடிவு செய்து இருந்தோம் என்றும் முறையிடுகின்றன. அதற்கு பாட்டி இவ்வளவு தான் தர முடியும் என்று கூற காக்கைகள் அனைத்தும் சேர்ந்து பாட்டியிடம் வாக்குவாதத்தில் இறங்கின. சிறு சிறு கலகங்கள் பிறந்தன. இதைத் தடுப்பதற்காக பாட்டி சில நரிகளை காவல் பணிக்கு அமர்த்தி பிரச்சனை செய்யும் காகங்களை அடித்து ஒடுக்கும் படி கூறினாள். பாட்டியின் பிடியில் இருந்த நரிகளும் பாட்டி சொல் படி காக்கைகளை அடித்து அடி பணிய  வைக்கின்றன. இருப்பினும் காகங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் ஒவ்வொரு முறையும் இவ்வாறு வலிமையின் மூலம் அவற்றை ஒடுக்கி வைப்பது கடினம் என்பது பாட்டிக்கு புரிகிறது. நீண்ட யோசிப்பிற்குப் பிறகு ஒரு முடிவிற்கு வந்தவளாக தூங்கச் செல்கிறாள்.

அதன்படி பாட்டி புதிதாக சில சட்ட திட்டங்களை உருவாக்கி அதை மீறுபவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய தண்டனை விவரங்களையும் வெளியிடுகிறாள். மேலும் சில புத்திகூர்மையுள்ள நரிகளை வைத்து “பாட்டி நமக்கு கடவுள் போன்றவர் என்றும், பாட்டியால் மட்டும் தான் இந்த காட்டையும், நம் அனைவரையும் காப்பாற்ற முடியும் என்றும், பாட்டிக்கு சேவை செய்வதே நம் கடமை என்றும், அதன் மூலம் நாம் புண்ணியம் பெற முடியும்” என்றும் காக்கைகளின் மனதில் பதிய வைத்து ஒரு சமூக ஒப்புதலை (Consent) உருவாக்குகிறாள். இவ்வாறு அந்த சமூகத்தில் பொருளாதாரம் என்ற அடிக்கட்டுமானத்தில் இருந்து அரசு,  ராணுவம், சட்டம், மதம் என்ற மேல் கட்டுமானம் உருவாகிறது.  

தொடரும்

4 comments

  1. கதை சொல்லும் விதம் அதன் நடை கற்பனை கதாபாத்திரங்கள் ஆனால் இவை யாவும் மிக முக்கியமான ஓர் பதிவை நோக்கி கொண்டு செல்வதாக படுகிறது. வாழ்த்துக்கள்… அடுத்த வாரம் இதன் தொடர்ச்சியை படிக்கும் ஆர்வத்தை தூண்டி உள்ளது

Comment here...