பொதுவுடைமைக் காடும், போராடும் காக்கைகளும்

க சிவசங்கர்

மனித சமூகம் தோன்றியது முதல் இன்று வரை பல்வேறு வகையான சமூக அமைப்பு முறைகளைக் கடந்து வந்துள்ளது. இந்த சமூக மாற்றங்களுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் “உற்பத்தி முறை” என்ற ஒன்று மட்டுமே அவற்றின் அடிப்படை அம்சமாக இருந்து வந்துள்ளது. இத்தகைய சமூக மாற்றங்களை ஓர் எளிய கதை வடிவில் விளக்கும் முயற்சியே இது.

பாகம் 2:

உற்பத்தி உயர்வும், உழைப்புப் பிரிவினையும்:

காடுகள் முழுவதும் வேலியிடப்பட்டு  பாட்டியின் கட்டுப்பாட்டில் வந்ததால், காட்டின் வளங்களை மட்டுமே நம்பி வாழும் மற்ற உயிரினங்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. அவை ஒவ்வொன்றாக பாட்டியிடம் வேலை தேடி வர ஆரம்பித்தன. ஒரு நாள் ஒரு முயல் கூட்டம் பாட்டியைச் சந்தித்து தங்களுக்கு உதவுமாறு கேட்டன. முயல்கள் மிக வேகமாக ஓடும் திறன் பெற்று இருந்ததாலும், அதன் மூலம் தன் வடைகளை முன்பை விட அதிக தூரமும், விரைவாகவும் கொண்டு சென்று விற்க முடியும் என்பதாலும் முயல்களுக்கு நரி மற்றும் காக்கைகளை விட குறைந்த வடைகளே உணவாக தேவைப்படும் என்பதாலும் பாட்டி முயல்களை வேலைக்கு சேர்த்துக் கொண்டாள். பாட்டி நினைத்ததைப் போன்றே முன்பை விட வியாபாரம் அதிகரித்து லாபம் குவிய ஆரம்பித்தது.

இந்த நேரத்தில் மீண்டும் ஒரு புதிய சட்டத்தை பாட்டி உருவாக்கினாள். காட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொழில் என்பது வரையறுக்கப்பட்டு, அவை மீறப்பட்டால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படக் கூடிய வகையில் சட்ட திட்டங்களை பாட்டி உருவாக்கினாள். அதன்படி நரிகளுக்கு காவல் காப்பது மற்றும் பாட்டி வகுக்கும் சட்ட திட்டங்களை சரியாக அமல்படுத்துவது உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட்டன. வடைகளை தொலைதூரம் வரை சென்று வியாபாரம் செய்யும் பொறுப்பு முயல்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காக்கைகளுக்கு காடுகள் முழுவதும் அலைந்து திரிந்து குச்சிகளைப் பொறுக்கிக் கொண்டு வரும் பணி ஒதுக்கப்பட்டது.  பாட்டி இவை அனைத்தையும் முடிவு செய்பவளாக, கேள்விகளுக்கு அப்பாற்பட்டவளாக, தான் நினைத்த எதையும் செய்யும் ஏகபோக உரிமை கொண்டவளாக மாறினாள். ஒவ்வொருவர் செய்யும் தொழிலின் அடிப்படையில், சமூக அடுக்கிலும் அவர்களுக்கான இடம் பிரிக்கப்பட்டது. அதன் படி அனைத்து உற்பத்தி சக்திகளையும் தன்வசம் வைத்துக் கொண்ட பாட்டி அனைவருக்கும் மேலானவளாக முதல் நிலையிலும், காவல் பணி செய்யும் நரிகள் பாட்டிக்கு அடுத்த நிலையிலும், வணிகத்தில் ஈடுபடும் முயல்கள் மூன்றாவது நிலையிலும், உடல் உழைப்பை அதிகம் கொண்ட காக்கைகள் அனைவருக்கும் கீழான கடைசி நிலையிலும் வைக்கப்பட்டனர். வடைகளில் அவர்களின் பங்கும், சமூக அடுக்கில் அவர்கள் வகிக்கும் இடத்தின் அடிப்படையிலேயே பிரித்து கொடுக்கப்பட்டன. இருப்பதிலேயே அதிகமான பங்கு பாட்டிக்கும், குறைவான பங்கு காக்கைகளுக்கும் கொடுக்கப்பட்டன. இதில் யாரும், எந்த சூழலிலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியினைத் தாண்டி வேறு பணிகளைச் செய்யும் உரிமை முற்றிலுமாக மறுக்கப்பட்டது.

புதிய உற்பத்திக் கருவிகளும், சமூக மாற்றமும்:

வியாபாரத்திற்கு வெகுதூரம் சென்று வந்த முயல்களின் மூலம் பாட்டிக்கு ஒரு புதிய தகவல் கிடைத்தது. அதன்படி வடைகளை வேகமாக உற்பத்தி செய்யக்கூடிய திறன் வாய்ந்த வடைசட்டி மற்றும் வடை சுடும் இயந்திரம் போன்றவை ஒரிடத்தில் இருப்பதை அறிந்து அதை வாங்குகிறாள். இதன் மூலம் உற்பத்தி உயர்ந்து லாபமும் அதிகரித்தது. கிடைத்த மித மிஞ்சிய லாபத்தை மறு முதலீடாக வைத்து மேலும் சில வடை சட்டி மற்றும் இயந்திரங்களை வாங்கி தன் உற்பத்தியைப் பெருக்கினாள். இவை அனைத்தையும் ஓரிடத்தில் வைத்து உற்பத்தி செய்திடும் வகையில் ஒரு பிரம்மாண்ட தொழிற்சாலையையும் நிறுவினாள். இவ்வாறு உற்பத்தி சக்திகளின் அபரிமித வளர்ச்சியினால் அந்த சமூகம் பழைய பூர்வீக உற்பத்தி முறையில் இருந்து ஒரு புதிய முதலாளித்துவ பெருவீத உற்பத்திமுறைக்கு நகர்ந்தது. இதன் மூலம் பாட்டி ஒரு முதலாளியாக உருவானாள். புதிய உற்பத்திக் கருவிகளைத் தன் தொழிலாளிகள் சரியாக கையாளுவதற்கு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சிறப்பு திறன் பயிற்சிகளுக்கு பாட்டி ஏற்பாடு செய்தாள்.

திறன் வாய்ந்த புதிய உற்பத்தி சாதனங்களின் மூலம் ஒரு நாளில் முன்னர் உற்பத்தி செய்த வடையை விட நான்கு மடங்கு வடைகளை பாட்டியால் உற்பத்தி செய்ய முடிந்தது. இதனால் குறைந்த விலைக்கு பாட்டியால் வடைகளை விற்க முடிந்தது. இதனால் காட்டின் பிற பகுதிகளில் இருந்த சிறு வடை உற்பத்தியாளர்கள் பெரிய நட்டத்தைச் சந்தித்தனர். அவர்களின் தொழில் முடங்கியது. அவர்கள் அனைவரும் வேறு வழியின்றி பாட்டியின் தொழிற்சாலைக்கு கூலியாட்களாக வேலைக்கு சேர்ந்தனர். இப்போது அந்த காட்டில் வடை உற்பத்தியில் பாட்டியின் தொழிற்சாலை மட்டுமே ஈடுபடுகிறது. பாட்டி வடை உற்பத்தியின் ஏகபோக (monopoly) உற்பத்தியாளராக மாறினாள். இப்போது பாட்டி வடையின் விலையை இருமடங்கு உயர்த்தினாள். காட்டில் வேறு எங்கும் வடை கிடைக்காததால், வடை சாப்பிடும் எவரும் வேறு வழியின்றி இவரிடம் தான் வாங்க வேண்டிய சூழல். பாட்டியின் லாபம் பல மடங்கு உயர்ந்தது.

உழைப்புச் சுரண்டலும், தொழிற்சங்க உதயமும்:

நாட்கள் நகர்ந்தன. வடை உற்பத்தியில் லாபம் குவிந்தது. பாட்டிக்கு இப்போது புதிய ஆசை ஒன்று வந்தது. நாம் ஏன் வடைக்கு தேவையான மாவு மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களை வெளியில் இருந்து வாங்க வேண்டும். நாமே இவற்றை உற்பத்தி செய்தால் என்ன? என்ற கேள்வி எழுந்தது. உடனே செயலில் இறங்கினாள். தனது வடைத் தொழிற்சாலைக்கு அருகிலேயே இன்னொரு தொழிற்சாலையை உருவாக்கி அதில் மாவு மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யத் துவங்கினாள். காட்டில் வடை தயாரிக்கும் தொழிற்சாலை பாட்டியிடம் மட்டுமே இருந்ததால் அந்த காட்டில் இருந்த மாவு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் பாட்டியின் தொழிற்சாலையை நம்பி மட்டுமே இருந்தன. இப்போது பாட்டியே அவற்றையும் உற்பத்தி செய்யத் துவங்கியதால் அந்த நிறுவனங்கள் வியாபாரம் இன்றி நொடிந்தன. இதனால் அந்த தொழிலை மட்டுமே நம்பியிருந்த அணில்கள் மற்றும் மான்கள் போன்றவை வாழ வழியின்றி தவித்தன. சொந்தமாக தொழில் செய்து வந்த அவை அனைத்தும் வேறு வழியின்றி அனைத்தையும் விட்டுவிட்டு பாட்டியின் தொழிற்சாலைக்கு வேலை தேடி வந்தன. தங்களுக்கு சொந்தமான உழைப்புச் சாதனங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு உழைப்புச் சக்தியை மட்டுமே உடமையாகக் கொண்ட உதிரிப் பாட்டாளிகளாய் மாறிப் போயின.

லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உற்பத்தி நடைபெறுவதால் வேலை நேர வரைமுறை என்பதே இல்லாமல் போனது. மிதமிஞ்சிய உழைப்பாலும், காலவரையற்ற வேலை நேரத்தாலும் காக்கைகள் மற்றும் நரிகளின் மனதில் ஒரு வெறுப்பு ஏற்படுகிறது. அவை சிறு சிறு கலகங்களாக மாறின. இதற்கெல்லாம் ஒரே தீர்வு நாம் அமைப்பாய் திரள்வது மட்டுமே என்று கூறியது லெனி என்ற காக்கை. இதையடுத்து லெனியின் தலைமையில் ஒரு தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டு அதில் நரிகள், முயல்கள், மான்கள் மற்றும் அணில்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் இணைகின்றனர். தொழிற்சாலையில் கடுமையான உழைப்புச் சுரண்டல் நடைபெறுவதையும், நமது உரிமைகள் அனைத்தும் பாட்டியால் பறிக்கப்படுவதையும் அனைவருக்கும் புரியும் விதமாக எடுத்துரைக்கிறது லெனி காகம். இதன் தொடர்ச்சியாக கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டது தொழிற்சங்கம். வேலைநிறுத்தம் ஏற்பட்டால் கடும் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்த பாட்டி, தொழிற்சங்கத்தைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறாள். பேச்சுவார்த்தையின் முடிவில் தொழிற்சாலையில் வரையறுக்கப்பட்ட வேலை நேரம் மற்றும் குறைந்தபட்ச கூலி போன்ற ஒரு சில உரிமைகள் வழங்கப்படும் என்று ஒப்பந்தம் ஏற்படுகிறது.

தொடரும்

4 comments

Comment here...