Photo:mint

கிராம வங்கிகளுக்கு வயது 48

பரிதிராஜா

மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 2 தான் கிராம வங்கிகளுக்கும் பிறந்தநாள். கிராம மக்களுக்கும், கிராமப்புற தொழில்களுக்கும் ஊக்கம் தரவும், விவசாயத்திற்கு தேவையான வங்கிக்கடன் கிடைப்பதற்கும் அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த அரசு கிராம வங்கிகளை துவங்கியது. “பிரதம வங்கி” என்ற பெயருடன் முதல் கிராம வங்கி உத்திரபிரதேச மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாவட்டத்திற்கு ஒன்று என்ற அளவில் முதல் கட்டமாக 196 கிராம வங்கிகள் 196 நாடெங்கும் இயங்கின.இவை பின்னர் ஒருங்கிணைக்கப்பட்டு இன்றைய தேதியில் 43 கிராம வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

140 கோடி மக்கள்தொகை உள்ள நம் நாட்டில் சுமார் 40 கோடி மக்களை தனது வாடிக்கையாளர்களாகக் கொண்டிருக்கும் கிராம வங்கிகள் தாங்கள் துவக்கப்பட்டதன் நோக்கத்தை கைவிடவில்லை. ஆமாம்! அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மாறுதல் அடைந்து, வங்கிகள் என்பவை சேவை நிறுவனங்கள் என்ற தன்மையிலிருந்து மாறி, லாப நோக்கோடு இயங்கும் நிறுவனங்களாக மாறிவிட்ட இந்த காலத்திலும், கிராம வங்கிகள் வெகுமக்களுக்கு வங்கி சேவை கொடுப்பது என்ற தங்களின் நோக்கத்திலிருந்து இன்று வரை தடம் மாறவில்லை.

கிராம வங்கிகளின் சாதனைகள்:

அனைவருக்கும் வங்கிக்கணக்கு என்ற இலக்குடன் முன்னெடுக்கப்பட்ட Financial Inclusion திட்டத்தின் கீழ் நாடெங்கிலும் துவங்கப்பட்ட பிரதம மந்திரி ஜன் தன் கணக்குகளின் எண்ணிக்கை சுமார் 50 கோடி. இதில் கிராம வங்கிகளின் பங்களிப்பு மட்டும் 9 கோடியே 42 லட்சம். இந்த கணக்குகளின் வழியாக முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், ஊனமுற்றோர் ஓய்வூதியம், மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்ட ஊதியம், தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை என அனைத்து விதமான அரசின் நலத்திட்ட உதவிகளை நாட்டின் பெருமளவு மக்களுக்கு கொண்டு சேர்க்கும் கருவிகளாக கிராம வங்கிகள் திகழ்கின்றன.

சென்ற நிதியாண்டு முடிவில் கிராம வங்கிகளின் மொத்த வணிகம் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய். கிராம வங்கிகள் கொடுத்த கடன் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய். இதில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் சமூகத்தில்  நலிவடைந்த மக்கள் பிரிவினர் போன்றோருக்கு கொடுக்கப்பட்ட கடன்கள் மட்டும் சுமார் 2.97 லட்சம் கோடி ரூபாய். தங்களின் மொத்த கடன்களில் கிட்டத்தட்ட 90 சதம் கடன்களை முன்னுரிமைக் கடன்களாக கொண்டு இயங்கி வருபவை கிராம வங்கிகள்.

அரசின் தவறான நிலைப்பாடுகள்:

கிராம மக்களுக்கு வங்கி சேவையை கிராம வங்கிகள் ஏற்கனவே திறம்பட வழங்கிவரும் வேளையில், அவற்றை பலப்படுத்தவும், அவற்றின் சேவையை மேலும் பரவலாக்கவும் தேவையான முன்னெடுப்புகளை தற்போது மத்தியில் ஆளும் அரசு மேற்கொள்ளவில்லை. மாறாக, சிறு வங்கிகள், நுண்கடன் நிறுவனங்கள் என்ற பெயர்களில் தனியார் நிறுவனங்கள் கடைவிரிக்கவும், அவை மக்களை சூறையாடவும் இந்த அரசு வழிகளை ஏற்படுத்தி வருகிறது. கடுமையான சுரண்டலை மேற்கொள்ளும் இந்த நிறுவனங்கள் கந்துவட்டி வணிகத்தின் நவீன வடிவங்களாக இருக்கின்றன. கிராம வங்கிகளின் இருப்பு இவற்றின் வளர்ச்சிக்கும், பரவலுக்கும் முட்டுக்கட்டையாக இருப்பதால் கிராம வங்கிகளை சிதைக்கும் வேலைகளில் அரசு இறங்கியுள்ளது.

அதன் முதல்படியாகவே, கிராம வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்று, அரசின் கட்டுப்பாட்டை கைவிடதிட்டமிடுகிறது.தனியார் நுண்கடன் நிறுவனங்கள் கிராம வங்கிகளின் இடத்தை ஆக்கிரமிக்க துடித்து வரும் வேளையில், அரசின் இத்தகைய முன்னெடுப்புகள் கிராம வங்கிகளை முடக்கும் முயற்சியே அன்றி வேறில்லை. மக்கள் சேவைக்காக துவங்கப்பட்ட கிராம வங்கிகளை தனியார் முதலாளிகளின் லாபவேட்டைக்காக, மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சிகளான நுண்கடன் நிறுவனங்களாக மாற்றிவிட அரசு நினைப்பது கிராம வங்கிகள் துவங்கப்பட்டதன் நோக்கத்திற்கு விரோதமானது மட்டுமல்ல; மக்கள் நலனுக்கும் எதிரான முடிவு ஆகும்.

கிராம வங்கிகளை மட்டுமல்லாது, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் சுமைகளாக கருதும் அரசாக தற்போதைய பாஜக அரசு இருக்கிறது. ஐம்பது வயதை நெருங்கும் நம் கிராம வங்கிகளை பொதுத்துறை நிறுவனங்களாக, மக்களுக்கானதாக காப்பாற்ற வேண்டிய பெருங்கடமை நமக்கிருக்கிருக்கிறது. அந்தக் கடமையின் ஒரு பகுதியாக பொதுத்துறை நலன் பேணும் அரசு அதிகாரத்தில் அமர்த்தப்பட வேண்டியுள்ளது. அந்த வகையில் பொதுத்துறைகளை பாதுகாக்கும், மக்கள் நலனை முன்னிறுத்தும் அரசினை தேர்வு செய்யும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. அந்தக் கடமையை சரியாக செய்து, கிராம வங்கிகளை மட்டுமல்லாது, பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் பாதுகாத்திடுவோம்!!

4 comments

  1. கிராம வங்கிகளின் சேவைகளையும் அதன் முக்கியத்துவத்தையும் அழகாக இக்கட்டுரை எடுத்துரைத்துள்ளது.

  2. கிராம வங்கிகளின் சேவையும் தேவையையும் இன்றைய ஒன்றிய அரசு உணர வேண்டும். கிராமப் பொருளாதரத்தை காக்க வேண்டும் என்றால் இவ் வங்கிகள் பொதுத் துறையில் இயங்க வேண்டும். அழகாக விவரிக்கப்பட்டுள்ள கட்டுரை. கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்

  3. கிராம வங்கிகள் எதிர்கொள்ள விருக்கும் சவால்களை உணர்த்தும் அருமையான பதிவு

Comment here...