பொதுவுடைமைக் காடும், போராடும் காக்கைகளும்

க.சிவசங்கர்

மனித சமூகம் தோன்றியது முதல் இன்று வரை பல்வேறு வகையான சமூக அமைப்பு முறைகளைக் கடந்து வந்துள்ளது. இந்த சமூக மாற்றங்களுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் “உற்பத்தி முறை” என்ற ஒன்று மட்டுமே அவற்றின் அடிப்படை அம்சமாக இருந்து வந்துள்ளது. இத்தகைய சமூக மாற்றங்களை ஒரு எளிய கதை வடிவில் விளக்கும் முயற்சியே இது.

பாகம் 3:

தொழில்நுட்ப வருகையும், வேலையிழப்பின் உச்சமும்:

பணியாளர்கள் மத்தியில் தொழிற்சங்கத்திற்கு ஆதரவு பெருகுகிறது.  தொழிற்சங்கத்தின் வளர்ச்சி தனது ஒற்றை மேலாதிக்கத்திற்கும், மிதமிஞ்சிய லாபத்திற்கும் தடையாக அமையும் என்பதை உணர ஆரம்பிக்கிறாள் பாட்டி. எனவே தொழிற்சங்கத்தின் ஆதிக்கத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயத் துவங்குகிறாள். காக்கைகள் தான் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்படுவதால் அவற்றை வேலையில் இருந்து நீக்குவதற்கான வேலையில் தீவிரம் காட்டுகிறாள். அதிக திறன் வாய்ந்த புதிய உற்பத்திக் கருவிகளால் குச்சிகளின் தேவையும் இப்போது பாதியாக குறைந்து போனது. எனவே பாட்டிக்கு இப்போது முன்பு போல் அதிக காக்கைகள் தேவைப்படவில்லை. இதனைப் பயன்படுத்தி லெனி உள்ளிட்ட பெரும்பாலான காக்கைகளை வேலையில் இருந்து வெளியேற்றினாள் பாட்டி.

காலங்கள் மீண்டும் நகர்கின்றன. காட்டின் பெரும்பகுதி பாட்டியால் வேலி இடப்பட்டதால் அங்கு இருந்த எல்லா மிருகங்களும் தங்கள் சொந்த தொழில்களைச் செய்ய வழி இல்லாமல் பாட்டியிடம் குறைந்த கூலிக்கு வேலைக்கு வர ஆரம்பிக்கின்றன. காட்டின் சிறு தொழில்கள் அனைத்தும் நலிவுற்று பாட்டியின் பெரு முதலாளித்துவ தொழிலின் ஒரு பகுதியாக மாறுகின்றன. தன் லாபத்தை மேலும் அதிகரிக்க எண்ணிய பாட்டி, காட்டில் வேலைவாய்ப்பின்றி இருக்கும் ஒரு பகுதியினரைப் பயன்படுத்தி மேலும் மேலும் வேறு வேறு நபர்களை குறைந்த கூலிக்கு வேலைக்கு எடுத்துக் கொண்டு ஏற்கனவே இருந்த பெரும்பாலானவர்களை வேலையை விட்டு நிறுத்த ஆரம்பித்தாள். ஒரு பக்கம் பாட்டிக்கு மித மிஞ்சிய லாபமும் இன்னொரு பக்கம் காட்டில் கடுமையான வேலையின்மையும் உருவாகியது.

உற்பத்தித் தேக்கமும், லாபத்தின் வீழ்ச்சியும்:

இப்போது பாட்டிக்கு ஒரு புதிய சிக்கல் வருகிறது. அதன்படி வடைகளின் விற்பனையில் ஒரு பெரிய சரிவு ஏற்பட்டது. ஏனெனில் வடைகளை வாங்குவதற்கு ஆள் இல்லை. காட்டில் இருந்த பெரும்பான்மையானவர்களை பாட்டி வேலையில் இருந்து நீக்கியதால் யாரிடமும் வாங்கும் சக்தி இல்லை. இதனால் மிதமிஞ்சிய உற்பத்தி தேக்கம் உருவாகியது. பாட்டியின் வருமானத்தில் ஒரு பெரிய அடி விழுகிறது. இதன் பிறகும் வேலை செய்பவர்களுக்கு கூலி கொடுத்தால் தனது மூலதனத்திற்கே ஆபத்து ஏற்படும் என்று கருதினாள் பாட்டி. எனவே தனது மூலதனத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் விதமாக தொழிற்சாலையில் வேலை செய்து வந்த அனைவரையும் வேலையில் இருந்து நீக்கி விட்டு தொழிற்சாலையை இழுத்து மூடினாள் பாட்டி. இதனால் காட்டில் வேலையின்மை மேலும் தீவிரமாகி காட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் முடங்கியது.

வர்க்க ஒற்றுமையும், புரட்சிப் படையின் தோற்றமும்:

இந்நிலையில் பாட்டியால் வேலையிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட நரிகள், முயல்கள், மான்கள், அணில்கள் என்று அனைவரும்  லெனியின் தலைமையில் ஒன்று சேர்ந்தனர். அப்போது லெனி, இத்தனை காலமாக பாட்டி நம்மை ஏமாற்றி வருகிறாள் என்றும், இனியும் நாம் தாமதித்தால் நமது மொத்த வாழ்வதாரமும் பறிக்கப்பட்டு விடும் என்றும் கூறியது. இதைக் கேட்ட இன்னொரு காக்கை, “நாம் பாட்டியின் தொழிற்சாலையில் வேலை செய்றோம். அதுக்கு பாட்டி நமக்கான கூலியாக வடைகளில் ஒரு பங்கு கொடுக்கிறார் தானே? இதை எப்படி ஏமாற்று என்று சொல்ல முடியும்?” என கேட்டது.

உடனே கூட்டத்தில் உள்ளவர்களை நோக்கி “ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நீங்க வேலை செய்றீங்க?” என்றுலெனி கேட்க, கூட்டத்தில் இருந்த ஒரு நரி, “நேரமா? அதெல்லாம் கணக்கே இல்ல லெனி. காலையில எட்டு மணிக்கு உள்ள வந்தோம்னா வேல முடிச்சு கிளம்ப ராத்திரி ஏழு, எட்டு மணி ஆயிரும்”என்று விரக்தியுடன் கூறியது. “சரியா சொன்னீங்க நரியாரே…ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை நாம வேல செய்றோம். ஆனா பாட்டி நமக்கு கொடுக்குறதோ வெறும் 4 முதல்  6 மணி நேரத்துக்கு உரிய பங்கு மட்டும் தான். இப்படி ஒவ்வொருத்தர்ட இருந்தும் எடுக்கப்படுற மீதி பங்கு முழுவதும் உபரிமதிப்பாக சேர்ந்து ஒவ்வொரு நாளும் லாபம் என்ற பேர்ல பாட்டிக்கு போய் சேருது”என்று விளக்கியது லெனி.

அப்போது நடைபெற்ற விவாதத்தில் சிலர், “வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அதிக கூலி வழங்கப்பட வேண்டும் என்றும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்றும், பாட்டியால் வேலையிழந்தவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட வேண்டும் என்றும் பாட்டியிடம் கோரிக்கை வைப்போம்” என்று கூறினர். ஆனால் லெனியோ, இது போன்ற சிறு சிறு சீர்திருத்தங்களைப் பெறுவதன் மூலம் பாட்டியின் கொள்ளை லாபத்தில் ஒரு சிறிய அளவு குறையுமே தவிர, பாட்டியின் மேலாதிக்கம் துளியும் குறையப்போவது இல்லை எனவும், சுரண்டலின் வடிவம் மட்டுமே மாறும் என்றும் விளக்கிக் கூறி அவற்றை நிராகரித்தது. மேலும் நாம் எத்தனை முறை பாட்டியோடு சமரசம் பேசினாலும் பயனில்லை எனவும், இதற்கு ஒரே நிரந்தர தீர்வு வடை சட்டி, வடை சுடும் இயந்திரம் உள்ளிட்ட உற்பத்தி சாதனங்களையும், உற்பத்தி சக்தியான வேலியிடப்பட்ட காட்டையும் மீட்பது தான் எனவும் தீர்க்கமாக சொல்லியது.

இதைக் கேட்ட அங்கிருந்த ஒரு முயல், “அதெப்படி சரியா இருக்கும் லெனி? பாட்டி தானே முதல் போட்டு தொழிற்சாலை கட்டி, இயந்திரங்கள் வாங்கி தொழில் நடத்துறாங்க…அப்போ அவங்களுக்கு லாபம் போறது தப்புன்னு எப்படி சொல்ல முடியும்?”…என்று கேட்டது.அதற்கு லெனி, “ஓ அப்படியா…சரி, பாட்டியிடம் இப்போது இருக்குற தொழிற்சாலை, வடை சுடும் இயந்திரங்கள் போன்றவை எங்கிருந்து வந்துச்சுன்னு யாரலயாவது சொல்ல முடியுமா? என்று வினவியது. அதற்கு அங்கிருந்த ஒரு மான், “அவை அனைத்தும் பாட்டியின் உழைப்பினால் உருவானது தானே?” என்றது. இல்லை நீங்கள் நினைப்பது தவறு என்று சொன்ன லெனி, அவை யாவும் பாட்டியின் உழைப்பினால் உருவானது அல்ல. இப்போது எவ்வாறு உபரி மதிப்பு சேர்கிறதோ, அதே போல் நமக்கு முந்தைய காலகட்டத்தில் நமது முன்னோர்களின் உழைப்பினால் சேர்ந்த உபரிமதிப்பை சேர்த்து வைத்து உருவானது தான் இப்போது பாட்டியிடம் இருக்கும் அனைத்து மூலதனமும் ஆகும்.

எனவே அவை பாட்டியின் தனிச்சொத்து இல்லை என்றும், நாம் அனைவரும் சேர்ந்து தான் அதை உருவாக்கினோம் என்றும், நம் உதவி இல்லாமல் இருந்திருந்தால் முதன் முதலில் பாட்டியால் வடை சுட்டே இருக்க முடியாது என்றும், எனவே அது நம் அனைவருக்குமான பொதுச்சொத்து தான் என்றும் கூறி புரிய வைத்தது. இதன்மூலம் மூலதனம் என்பது பொருளாக தோற்றமளிக்கும் வடை சட்டியோ அல்லது வேலியிடப்பட்ட காடோ இல்லை என்றும், பாட்டியும் காக்கைகளும் முதன் முதலில் இணைந்து உற்பத்தியில் ஈடுபட்ட அந்த உற்பத்தி உறவே அனைத்திற்கும் அடிப்படையான,உண்மையான மூலதனம் என்றும் அனைவருக்கும் புரிய வந்தது. காட்டை மீட்கும் புரட்சிக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு, அதற்கு லெனி தலைமை வகிக்கும் என்று அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தொடரும்

One comment

Comment here...