பொதுவுடைமைக் காடும், போராடும் காக்கைகளும்

க.சிவசங்கர்

மனித சமூகம் தோன்றியது முதல் இன்று வரை பல்வேறு வகையான சமூக அமைப்பு முறைகளைக் கடந்து வந்துள்ளது. இந்த சமூக மாற்றங்களுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் “உற்பத்தி முறை” என்ற ஒன்று மட்டுமே அவற்றின் அடிப்படை அம்சமாக இருந்து வந்துள்ளது. இத்தகைய சமூக மாற்றங்களை ஒரு எளிய கதை வடிவில் விளக்கும் முயற்சியே இது.

பாகம் 4:

புரட்சிப் படையின் திட்டமும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும்:

பாட்டியிடம் இருந்து காட்டையும், உற்பத்தி தொழிற்சாலையையும் மீட்கும் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக புரட்சிக் குழுவின் கூட்டம் லெனியின் தலைமையில் கூடியது. தாக்குதலுக்கான தயாரிப்புப் பணிகள் குறித்தும், ஒவ்வாருவரும் செய்ய வேண்டிய வேலைகள் குறித்தும் அனைவருக்கும் விரிவாக எடுத்துக் கூறிக் கொண்டிருந்தது லெனி. அப்போது அங்கிருந்த ஒரு நரி, “பாட்டி நம்மை அடிமைகள் போல நடத்தி ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார் என்பதற்காக நாமும் அதே சர்வாதிகாரப் போக்கை கையில் எடுத்து வன்முறையில் ஈடுபடுவது சரியா? என்று தனது சந்தேகத்தை முன்வைத்தது.

“நீங்கள் நினைப்பது சரியல்ல. பாட்டியின் சர்வாதிகாரமும், நமது சர்வாதிகாரமும் ஒன்றல்ல. பாட்டியின் சர்வாதிகாரம் என்பது ஒரு சில தனி நபர்களின் சொத்துடமையைக் காத்துக்கொள்ள ஒட்டுமொத்த பெரும்பான்மை சமூகத்தின் மீதும் செலுத்தப்படும் தனிநபர் சர்வாதிகாரம். நாம் மேற்கொள்ள இருப்பது சமூகத்தின் மிகப்பெரும்பான்மை நபர்களின் விடுதலைக்காக ஒரு சில தனிநபர்களின் மேல் நடத்துப்போகும் சர்வாதிகாரம் என்றும், நமது நோக்கம் அல்லது ஆசை வன்முறை அல்ல, மாறாக விடுதலையே…” என்றும் விளக்கியது லெனி.

“புரிந்தது லெனி. தாக்குதலுக்கு நாங்கள் தயார்…” என்றது நரி. நரியின் கருத்தை ஆமோதிப்பது போல் கூட்டத்தில் இருந்த அனைவரும் ஒருசேர ஆர்ப்பரித்தனர். அன்றைய தினத்தில் இருந்து சரியாக நான்கு நாட்கள் கழித்து ஒரு அதிகாலைப் பொழுதில் தாக்குதலைத் தொடுப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

முதலாளித்துவ உற்பத்தி முறையின் பண்பும், அதன் முரணும்:

மறு நாள் இரவு. தனது வீட்டு வாசலில் அமர்ந்து தாக்குதல் குறித்த யோசனையில் மூழ்கியிருந்தது லெனி. வீட்டிற்குள் லெனியின் குழந்தை அம்மாவிடம் வந்து, “அம்மா ரொம்ப பசிக்குதும்மா. சாப்பாடு கொடுங்கம்மா” என்று கேட்டது. அதற்கு அந்த அம்மா காக்கை, “அப்பாக்கு வேலை போயிருச்சுலம்மா. அதனால இப்ப நம்ம வீட்ல சாப்பாடு இல்ல. நீ கொஞ்சம் பொறுத்துக்கோ. அப்பா ஏதாவது கொண்டு வருவாங்க…” என்று கூறியது. உடனே குட்டிக் காகம், ” ஏம்மா அப்பாக்கு வேலை போயிருச்சு?” என்று கேட்டது. “அப்பா வேலை செஞ்ச நிறுவனத்துல நிறைய வடைகள் உற்பத்தியாகி அது எதுவும் விக்காம தேங்கிப் போய், நட்டம் ஆயிருச்சாம். அதுனால வேலைய விட்டு நிறுதிட்டாங்கடா” என்றது அம்மா காக்கை. “அங்க நிறைய வடைகள் இருக்குதுன்னா அப்போ ஏம்மா நமக்கு அந்த வடை கிடைக்கல?” என்றது குட்டி.

இந்த உரையாடல் முழுவதையும் வீட்டு வாசலில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த லெனி, அருகில் வந்து, “நீ கேட்குறது ரொம்ப சரி டா கண்ணா. ஒருபக்கம் உற்பத்தியான பொருள் விற்காமல் தேக்கம் ஏற்பட்டு, மறுபுறம் அதே பொருளுக்கு தேவை இருந்தும் வாங்க முடியாமல் இருப்பது ஒரு முரண். இந்த முரண் இப்போதிருக்கும் இந்த உற்பத்தி முறையில் தவிர்க்க முடியாத ஒன்னு. இதை முதலாளித்துவ உற்பத்தி முறை ன்னு சொல்லுவாங்க”.

“அப்போ இத மாத்தவே முடியாதாப்பா?” என்றது குட்டி. “நிச்சயம் முடியும் கண்ணா. அதற்கு இப்போதிருக்கும் இந்த உற்பத்தி முறையை முற்றிலுமாக மாற்றியமைக்கணும். இந்த உற்பத்தி முறையில என்ன நடக்குது? எல்லோரும் சேர்ந்து உழைச்சு வடைய உற்பத்தி செய்யிறாங்க. ஆனா அதோட பலன் மொத்தமும் பாட்டி ஒருத்தருக்கே போய்டுது. இதனால மத்தவங்களால உற்பத்தியான பொருட்கள வாங்க முடியாம போகுது. அப்படி இல்லாம உற்பத்தி மாதிரியே அதோட பலனும் எல்லோருக்கும் சமமா கிடைச்சா?…எல்லோராலயும் வடைகள வாங்க முடியும் இல்லையா?…ஒரு முதலாளித்துவ சமூக அமைப்புல விற்பனையை மையப்படுத்தியே, இன்னும் சொல்லப்போனால் விற்பனைக்காகவே பொருட்கள் உற்பத்தி செய்யப்படுது. அந்த நிலமை மாறனும். நுகர்வை அடிப்படையாகக் கொண்டு பொருட்கள் உற்பத்தி செய்யப்படனும். அதை நோக்கி தான் நாம் போகணும்” என்று கூறி முடித்தது லெனி. “புரியுதுப்பா” என்றவாறு தூங்கிப் போனது குட்டி. தூக்கம் வராமல் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து யோசித்தவாறு படுத்திருந்தது லெனி.

புரட்சிப்படையின் வெற்றியும், தனியுடமையின் ஒழிப்பும்:

தாக்குதலுக்கு திட்டமிட்ட நாளும் வந்தது. அதிகாலையிலேயே லெனி தலைமையில் பாட்டியின் மாளிகையை புரட்சிப் படை முற்றுகையிட்டது. மாளிகைக் காவலளிகளுக்கும், புரட்சிப் படைக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்றது. தங்களது சரியான வியூகங்களால் காவலாளிகளை முறியடித்து மாளிகைக்குள் நுழைந்து பாட்டியை நெருங்கியது புரட்சிப் படை. இதனை அறிந்த பாட்டி தனது முக்கிய பலமாகக் கருதிய நரிப்படையை தாக்குதல் தொடுக்குமாறு பணித்தாள். ஆனால் பாட்டி எதிர்பாராத சம்பவம் அங்கு அரங்கேறியது. நரிகள் அனைத்தும் தங்கள் ஆயுதங்களைப் பாட்டியை நோக்கி திருப்பின. இதனை சற்றும் எதிர்பாராத பாட்டி செய்வதரியாது திகைத்தாள். புரட்சிப்படை பாட்டியை சுற்றி வளைத்து சிறைப்பிடித்தது. உடனடியாக அனைத்து உடமைகளையும் விட்டுவிட்டு காட்டை விட்டு வெளியேறினால் உயிர் பிழைக்கலாம் என்று கெடு விதித்தது புரட்சிப்படை. உயிருக்கு அஞ்சிய பாட்டி அனைத்தையும் விட்டுவிட்டு காட்டில் இருந்து வெளியேறினாள். புரட்சி மாபெரும் வெற்றி பெற்றது. காடே மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தது.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வதற்காக புரட்சிப்படை கூடியது. காட்டில் இருந்த அனைவரும் லெனியின் வருகைக்காக காத்திருந்தனர். வந்தது லெனி. அனைவரும் உற்சாகக் குரலிட்டனர். எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாகவும், தீர்க்கமாகவும் பேசத் துவங்கியது லெனி. தனது முதல் அறிவிப்பாக காட்டில் இருக்கும் அனைத்து வேலிகளும் முழுவதுமாக அகற்றப்படும் என்றும், இன்று முதல் இந்த காடு அனைவருக்கும் சொந்தம் என்றும் கூறியது. கூட்டத்தில் கரவொலி பறந்தது.

அப்போது புரட்சிப் படையில் இருந்த சிலர், எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் இந்த புது வகையான தொழில்நுட்பம் கொண்ட வடை சட்டி மற்றும் வடை சுடும் இயந்திரம் தான் என்றும், எனவே அவற்றை ஒழித்து விட்டு நம்முடைய பழைய முறைக்கே திரும்ப வேண்டும் என்றும் கூறினர். ஆனால் பிரச்சனைகளுக்கு காரணம் தொழில்நுட்பம் அல்ல என்றும், அதை பயன்படுத்தும் விதம் தான் என்றும் அதனை ஏற்க மறுத்தது லெனி. மேலும் அவ்வாறு நாம் செயல்பட்டால் அது பிற்போக்குவாதமாக மாறிப்போகும் என்றும், வரலாற்று வளர்ச்சியின் உருவமாக தோன்றியுள்ள இந்த தொழில்நுட்பங்களை நாம் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும், வரலாற்றுச் சக்கரம் என்றும் பின்னோக்கிச் சுழலாது என்றும் தீர்க்கமாகத் தெரிவித்தது லெனி.

தொடரும்…

2 comments

Comment here...