ஏற்கனவே நமது 09.09.2023 தேதிய இதழில் தமிழ்நாட்டில் மத்திய கூட்டுறவு வங்கி நகர கூட்டுறவு வங்கி ஊழியரின் போராட்டம் தொடர்பாகவும் கூட்டுறவு வங்கிகளில் ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தும் நடைமுறைகள் என்ன என்பது பற்றியும் தற்போது 01.01.2021 முதல் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் 01.01.2022 முதல் நகர கூட்டுறவு வங்கிகளுக்கும் ஊதியம் மறு நிர்ணயம் செய்து ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பான ஆணை வெளியிடுவதில் பதிவாளர் அலுவலகம் கடைப்பிடித்து வரும் மெத்தன போக்கை கண்டித்து கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு தொடர்ந்து போராடி வருவதையும் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு கோரிக்கைகள் மற்றும் இதர முக்கிய கோரிக்கைகளை உள்ளடக்கிய போராட்டமாக
1. 21.0 8. 2023 அன்று மாவட்டங்களில் மாலை நேர ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன
2. 28 .08 .2023 அன்று மாவட்ட தலைநகரங்களில் முழு நாள் தர்ணா நடத்தப்பட்டது .
மேற்கண்ட இந்த போராட்டங்கள் கூட்டுறவுத் துறையின் காதுகளில் ஏறாததினால் அடுத்த கட்டத்திற்கு போராட்டத்தை நகர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது .
இதற்கென ஆலோசிக்க கூட்டப்பட்ட மத்திய குழு கூட்டத்தில் தொடர்ந்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது எனவும் , நம்முடன் ஒத்த கருத்துடைய சங்கங்கள் இணைந்து போராட முன் வந்தால் அவர்களையும் இணைத்துக் கொண்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம் எனவும் முடிவு எடுக்கப்பட்டது .
கூட்டுறவு வங்கிகளில் உள்ள AIBEA ,ATP ,LPFஆகிய சங்கங்களுடன் நமது சங்கம் 22 .09 .2023 அன்று இது விஷயமாக கூடி பேசிய பொழுது நம்முடன் இணைந்து போராட AIBEA ATP சங்கங்கள் முன் வந்தன . வேலை நிறுத்த தேதி 17 .10. 2023 என நிர்ணயிக்கப்பட்டு மூன்று சங்கங்களும் கூட்டாக வேலை நிறுத்த அறிவிப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது . LPF சங்கத்திற்கு கோரிக்கைகளில் ஒத்த கருத்து இருந்த போதிலும் திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இயலாது என தெரிவித்து கூட்டு போராட்டத்தில் பங்கேற்கவில்லை .
வேலை நிறுத்த அறிவிப்பு அரசுக்கும் பதிவாளருக்கும் அந்தந்த வங்கி நிர்வாகத்திற்கும் கூட்டாக அளிக்கப்பட்டது . தங்களுடைய ஊதிய உயர்வு சார்ந்த கோரிக்கைகளை உள்ளடக்கிய வேலை நிறுத்தம் நடைபெறுவதால் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வேலை நிறுத்த ஆயத்த பணிகளில் ஈடுபட்டிருந்தனர் .
இந்நிலையில் 13 .10. 2023 அன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு பதிவாளர் அலுவலகம் அழைத்தது . திரு. சுப்பிரமணியம் கூடுதல் பதிவாளர்( நிதி மற்றும் வங்கியியல்) அவர்களின் தலைமையில் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மூன்று சங்க தலைவர்களும் கலந்து கொண்டனர் . ஏற்கனவே மத்திய கூட்டுறவு வங்கியின் ஊதிய சீரமைப்பு குழு தலைவராக இருந்தவரும் நகர வங்கிகளின் கோப்புகளை கவனித்து வந்தவருமான கூடுதல் பதிவாளர் திரு வில்வசேகரன் பணி மாற்றம் செய்யப்பட்டு புதிய கூடுதல் பதிவாளராக திரு சுப்பிரமணியம் சென்ற மாதம் பொறுப்பேற்றுள்ளதால் நமது கோரிக்கைகளை அவர் அறிய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு கோரிக்கையாக தெளிவாகவும் விரிவாகவும் விளக்கி BEFI சார்பாக சம்மேளன தலைவர் தோழர் .
தமிழரசு பேசினார்.
1. மத்திய வங்கிக்கும் நகர வங்கிக்கும் ஊதியம் மற்றும் அகவிலைபடியில் 20% ஊதிய உயர்வு வங்கிகளை தரம் பிரிக்காமல் அனைத்து வங்கிகளுக்கும் வழங்க வேண்டும் .
2. ஏற்கனவே உள்ள கல்விச் சலுகைகள் மேம்படுத்தப்பட வேண்டும் .
3. மருத்துவ சிகிச்சைக்கான செலவினத்தை காப்பீட்டு நிறுவனமே நேரடியாக மருத்துவமனைக்கு செலுத்தும் வகையில் திட்டத்தில் முன்னேற்றம் வேண்டும் .
4.நகர வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் .
5.. SRB, DRB மூலமாக நியமிக்கப்பட்டவர்களுக்கு முதுநிலை பட்டியல் வெளியிட வேண்டும் .
6.தற்போதுள்ள வியாபார அளவிற்கு ஏற்ப பணியாளர் எண்ணிக்கையை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் .
7.வங்கிக்கு புதிய உதவியாளர் மற்றும் துணைப் பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் .
8.மத்திய வங்கிகளில் உதவி மேலாளர் பதவி உயர்வில் உள்ள 3:1 என்ற விகிதாச்சாரம் நீக்கப்பட வேண்டும் .
9.. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் உடனே வழங்கப்பட வேண்டும் .
10. பதிவாளர் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள கூட்டுறவு வங்கிகளில் BC நியமனம் செய்வது தொடர்பான சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும் .
ஆகிய கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசி இவற்றின் மீது பதிவாளரின் முடிவு என்ன என்பதை அறிய விரும்புவதாகவும் தெரிவித்தார் . இதைப்போலவே AIBEA சங்க தலைவரும் அண்ணா பணியாளர் சங்கத் தலைவரும்(ATP) பேசினார்கள் .
அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்ட கூடுதல் பதிவாளர் இன்னும்10 அல்லது 15 நாட்களுக்குள் ஊதிய உயர்வு ஆணை வெளியிடப்படும் என்றும் மற்ற கோரிக்கைகள் மீது டிசம்பர் மாதத்திற்குள் நடவடிக்கை எடுத்து முடிக்கப்படும் எனவும் தெரிவித்து வேலை நிறுத்தத்தை கைவிடக் கேட்டுக்கொண்டார் . சங்கங்கள் சார்பாக அதை ஏற்கவில்லை.
வேலை நிறுத்த அறிவிப்பை முன்னிட்டு தொழிலாளர் துறை துணை ஆணையர் அவர்கள் 16. 10 .2023 அன்று காலை 11.00 மணிக்கு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். இக்கூட்டத்தில் தொழிற்சங்கங்களும் பதிவாளர் அலுவலகத்தின் சார்பாக இணைப்பதிவாளர் (நிதி மற்றும் வங்கியியல்) அவர்களும் கலந்து கொண்டனர். அவர் அனைத்து கோரிக்கைகளையும் சுமூகமாக முடித்து தர இருப்பதால் வேலை நிறுத்த கைவிட அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டார் . துணை ஆணையர் அவர்களும் வேலை நிறுத்தத்தை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டார் . இதை சங்கங்கள் ஏற்காததால் அன்று மதியம் 3 .00 மணிக்கு மீண்டும் பதிவாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை தொடரும் என தெரிவிக்கப்பட்டது .
சங்கங்கள் பதிவாளர் அவர்கள் நேரில் வந்து உறுதிமொழி அளிக்க வேண்டும் என வலியுறுத்தின . அக்டோபர் 13 16 ஆகிய இரண்டு தினங்களும் பதிவாளர் விடுப்பில் இருப்பதால் அவரால் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இயலவில்லை . அடுத்த இரு தினங்களுக்குள் பதிவாளர் சங்கங்களை நேரில் அழைத்து பேசுவார் . ஒரு மாத காலத்திற்குள் ஊதிய உயர்வு ஆணை வெளியிடப்பட்டு விடும் . இதர கோரிக்கைகளும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் . என்று தெரிவித்துக் கொண்டு வேலை நிறுத்தத்தை தள்ளி வைக்கக் கோரியதன் அடிப்படையில் 17 10 2023 ஒரு நாள் வேலை நிறுத்தம் தள்ளி வைக்கப்பட்டது . கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும் என்றும் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
கோரிக்கைகள் ஏற்கப்படும் என்று அனைத்து கூட்டுறவு ஊழியர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள். தேவை ஏற்படும்போது மீண்டும் போராடவும் தயாராக இருக்கிறார்கள்.
தொழிற்சங்கங்கள் கோரிக்கை அமைத்து அதை வென்றெடுக்க போராட்ட களத்தில் இறங்குவதும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றங்கள் வரும்பொழுது அவற்றை பெறுவதற்கு கால அவகாசம் வழங்குவதும் நல்லதே. இருப்பினும் குறிப்பிட்ட காலத்திற்குள் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் மீண்டும் தீவிரமான போராட்டங்களில் இறங்குவதற்கும் ஊழியர்களை தயார் நிலையில் வைக்க வேண்டிய கடமையும் உள்ளது. அதை நோக்கி கூட்டுறவு தொழிற்சங்கங்கள் நகரும். போராட்ட வாழ்த்துக்கள். இப் போராட்டத்தை பெருவாரியான ஊழியர்களுக்கு சென்றடையும் வண்ணம் கட்டுரையாக வடிவமைத்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.