இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போரை கண்டிப்போம் – பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவோம்

ஐ. ஆறுமுக நயினார்

காசா நகரில் பாலஸ்தீன மக்கள் சுமார் 23 லட்சம் பேர் திறந்தவெளி சிறைச்சாலையில் உண்ண
உணவின்றி உடுக்க உடை இன்றி, தங்குவதற்கு இடம் இன்றி, குடிக்க தண்ணீர் இன்றி, உயிர்
காக்கும் மருந்துகள் இன்றி, எரிபொருள் இன்றி, மின்சாரம் இன்றி, மனிதாபிமானமற்ற முறையில்
சாவை எதிர்நோக்கி காத்திருப்பவர்கள் போல் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு
ஐக்கிய நாடுகள் சபையினுடைய அமைப்புகள் மூலமும், சகோதர நாடுகளின் ஆதரவு மூலமும்

திரட்டப்பட்ட உணவு உட்பட உயிர் காக்கும் பொருட்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களில்
காசாவின் மேற்கு எல்லையில் உள்ளே அனுமதிக்கப் படுவதற்காக காத்திருக்கின்றன. அவற்றை
காசாவின் உள்ளே அனுப்ப இஸ்ரேல் ராணுவம் மருத்து வருகிறது. 

 “இது ஒரு நீண்ட நெடிய போராக இருக்கப் போகிறது; மத்திய கிழக்கு பகுதியின் வரைபடமும் /
தன்மையும் இன்றுடன் உருத்தெரியாமல் மாறப்போகிறது” என்று இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.
இந்த முறை காசாவை கைப்பற்றினால் காசாவில் இருக்கிற அனைவரையும் வெளியேற்றிவிட்டு
அந்தப் பகுதி முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்கு, ஆக்கிரமிப்புக்கு கொண்டு வருவதற்கு
இஸ்ரேல் எத்தனித்து வருகிறது. இஸ்ரேலின் ராணுவ மந்திரியும், ராணுவ ஜெனரலும், 
பாலஸ்தீனர்களுக்கு அனைத்து தேவைகளும் இன்றுடன் நிறுத்தப்படுகிறது. ‘அவர்கள் நரகத்தை
கோரினார்கள்; நாங்கள் அதையே அவர்களுக்கு கொடுத்திருக்கிறோம்’ என்று அறிவித்து
இருக்கிறார்கள். குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் செத்து
மடிந்து கொண்டிருக்கிறார்கள். சுமார் 700 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்ததாக
கூறி, அதற்குப் பழி வாங்குகிறேன் என்று அறிவிக்கப் பட்டிருக்கிற இந்தப் போரில் இன்று வரை
சுமார் 5000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் முடமாகி

இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த விதமான பாதுகாப்பும், மருத்துவ சேவையும், உதவியும்
இன்றுவரை கிடைக்கவில்லை. 

‘இஸ்ரேல் தன்னுடைய இறையாண்மையை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு
இருக்கிறது; உலக நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்க வேண்டும்’என்று கூறுகிறார் ஜோ பைடன். 
ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு ஒரு சேர ஆதரவை அறிவித்திருக்கின்றன.
மூன்றாம் உலக நாடுகளும், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் ‘உடனடியான போர் நிறுத்தம்
தேவை; பதட்டத்தை தணியுங்கள்; பேச்சுவார்த்தைகளை தொடரலாம்’ என்று தங்களுடைய
குரலை எழுப்பி இருக்கின்றன.

மணிப்பூரில் நடந்த கலவரங்களில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான இந்திய மக்கள் பற்றி பிரதமர்
நரேந்திர மோடி அவர்கள் 80 நாள் கழித்துத்தான் வாய் திறந்தார்; ஆனால் இஸ்ரேல் தாக்கப்பட்டு
எட்டு மணி நேரத்தில் நாங்கள் இஸ்ரேலியர்களுடன் எங்களுடைய ஒருமைபாட்டை
தெரிவிக்கிறோம்; தீவிரவாதத்தை கண்டிக்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 

இவை ஒரு பக்கம் இருக்க, சர்வதேச அளவில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டங்களும்
ஆர்ப்பாட்டங்களும் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. 2023 அக்டோபர் 14ஆம் தேதி
லண்டன் மாநகரில் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்ட பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு
ஆதரவான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐரோப்பாவின் வலதுசாரி அரசுகள் இஸ்ரேலை
ஆதரிக்ககின்றன. அந்தந்த நாடுகளில் உள்ள உழைக்கும் மக்கள் தெருவில் இறங்கி
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறனர். 

ஏன் இந்த போர்? இது தவிர்க்கப்பட்டிருக்க முடியாதா? என்ற கேள்வியை முன் வைக்கிறார்கள்.
கடந்த 75 ஆண்டுகளாக பாலஸ்தீனர்களின் குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமித்து இஸ்ரேல் என்ற
தேசம் உருவாக்கப்பட்ட பின்னணியில் “இரண்டு தேசங்கள்” கொள்கை அமுலாக்கப்பட்டு
பாலஸ்தீனர்களும் இஸ்ரேலியர்களும் அவரவர்கள் நாடுகளில் வாழ வேண்டும் என்று முடிவு
செய்யப்பட்டது.  பாலஸ்தீனர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இதற்கு எதிராக இருந்தாலும்
1962ல் இந்த இரண்டு தேசங்கள் கொள்கையை ஏற்றுக்கொண்டு அமைதியான முறையில் இந்த
ஒப்பந்தத்தை அமல் நடத்த முயற்சி செய்து வருகிறது. ஆனாலும் இஸ்ரேல் விடுவதாக இல்லை.

அவர்கள் மேலும் மேலும் பாலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமிப்பதும், பாலஸ்தீனர்களை கொன்று
குவிப்பதுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, 1967இல் பாலஸ்தீனத்துக்கு எதிரான மிகப்பெரிய
போரை தொடுத்தனர். சர்வதேச நிர்பந்தத்தின் காரணமாக ஓர் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு
அன்றைய தேதியில் யார் யார் எவ்வளவு நிலங்களை அவர்கள் கட்டுப்பாட்டில்
வைத்திருக்கிறார்களோ அந்தந்த பகுதிகள் அவர்களுக்கு சொந்தம் என்ற முறையில் ஒப்பந்தம்
இருதரப்பினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. இருந்த போதும், 1967 க்கு
பின்னரும் தொடர்ந்து பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்து வருகிறது.

பாலஸ்தீனர்களை காசா, மேற்கு கரை உள்ளிட்ட பகுதிகளில் குறுக்கி அவர்களை எந்தவித
தொழில், வேலைவாய்ப்பு இல்லாமல் திறந்தவெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர்கள்
போன்று அவர்களை சுற்றி சுவர்களை எழுப்பி ஓர் எல்லைக்குள் அடக்கி விட்டனர். இன்று
மிகச்சிறிய நிலப்பரப்பு பாலஸ்தீனர்கள் கையில் இருக்கிறது.  பாலஸ்தீனம் என்று அறியப்பட்ட
முழு எல்லை பிரதேசம் இஸ்ரேலியர்கள் கையில் அடங்கி இருக்கிறது. இதுவும் போதாது என்று
மிச்சமிருக்கும் பாலஸ்தீனர்களையும் பாலஸ்தீனத்தை விட்டு விரட்டுகிற வேலையை இஸ்ரேல்
செய்து வருகிறது.

2022 டிசம்பர் மாதத்தில் பெஞ்சமின் நேத்தன்யாகூ பிரதம மந்திரி ஆக வந்தது முதல் இந்த
நடவடிக்கை தீவிரமடைந்திருக்கிறது. அவர் ஒரு கடைந்தெடுத்த வலதுசாரி பிற்போக்கு
அரசியல்வாதி. அவர் கடந்த 20 ஆண்டுகளில் ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு,
தோற்கடிக்கப்பட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார். தற்போது கூட ஒரு சிறுபான்மை
கூட்டணி அரசாங்கத்துக்கு தான் அவர் தலைவராக இருக்கிறார். ஆனால் அவருடைய
வருகையை அமெரிக்கா கோலாகலமாக வரவேற்றுள்ளது.

2022ல் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 2023 ஜனவரி மாதத்தில் 
அவர்களுடைய அல் அக்சா மசூதியில் அவர்களை தொழுகை நடத்த விடாமல் அதனுடைய பல
பகுதிகளை இடித்து தள்ளியது இஸ்ரேல். ஜனவரி 2023 முதல் செப்டம்பர் 2023 வரை 226
பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அன்றாடம் அவர்கள் குடியிருப்பு பகுதி மீது
ஏவுகணைகள் தாக்குதல், குண்டுகள் வீசி தாக்குதல் அவர்களுடைய
பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், சாலைகள் உட்பட அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாகி
இருக்கின்றன. இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் போது தான் இந்த இனப்படுகொலையை
நிறைவேற்றி வரும்  அரசாங்கத்தை எதிர்த்து திசை திருப்பப் பட்ட ஒரு சில தீவிரவாத எண்ணம்
கொண்ட ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தனர்.

இந்த தாக்குதலை பற்றி இஸ்ரேல் அரசாங்கம் மிகத் தந்திரமாக இவ்வாறு கூறியது. “இது
அமெரிக்கா மீது நடந்த 9/11 தாக்குதல் போன்றது. இந்த தாக்குதலை நாங்கள் உரிய முறையில்
எதிர்கொள்வோம். இதுபோன்று இனி வரலாற்றில் எப்போதும் நடக்க விடாமல் இருக்க என்ன
செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்வோம்” என்று அறிவித்தார்கள் . அது அவர்கள்
கையில் கிடைத்த ஒரு ஆயுதமாக மாறி விட்டது. அக்டோபர் 7ஆம் தேதியே பாலஸ்தீனத்தின் மீது
குண்டு வீசுவதும் புல்டோசர்கள் மூலமாக வீடுகளை இடிப்பது, குடியிருப்புகளில் இருப்பவர்களை
காலி செய்து அகதிகளாக முகாம்களுக்கு அனுப்புவது ஆகிய நாசகர வேலைகளில் இஸ்ரேலிய
இராணுவம் ஈடுபட்டு வருகிறது. பாலஸ்தீனிய மக்களுக்கு சேர வேண்டிய உயிர்காக்கும்
பொருட்கள், உணவு, தண்ணீர், எரிபொருள் உட்பட அனைத்தையும் கிடைத்துவிடாமல்
தடுத்துவருகிறது. 

 இதற்கு எதிராக சர்வதேச கண்டனங்கள் எழுந்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையினுடைய
செயலாளர் அன்டோனியோ கெளட்ரஸ் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று
வலியுறுத்தி உள்ளார். ஹமாஸ் தாக்குதல் என்பது ஒரு வெற்றிடத்திலிருந்து நடைபெறவில்லை;
அது ஒரு பின்புலத்தோடு தான் நடைபெற்றது என அவர் கூறக்கூடிய அளவுக்கு இந்தப் போர் ஒரு
நியாயமற்ற போர் என்பதை ஐக்கிய நாடுகள் சபை கூறி இருக்கிறது. ஆனாலும் பலவிதமான
நவீன ஆயுதங்களையும், பாஸ்பரஸ் குண்டுகளையும், விமானங்களையும் இஸ்ரேலுக்கு கொடுத்து
இந்தப் போரை தீவிரப்படுத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. தன்னுடைய யூ
எஸ் எஸ் ஜெரால்ட் போர்ட் என்ற ஆயுதம் தாங்கிய கப்பலை மத்திய தரைக் கடல் பகுதிக்கு
அனுப்பி இருக்கிறது. உக்கிரேன் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும்
யுத்தம் என்பது அமெரிக்க பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது என்று அமெரிக்கா கூறி
இருக்கிறது.

பல நாடுகளில் நடைபெறுவது போல் இந்தியாவிலும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மிகப்பெரிய
ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. அப்பாவி பாலஸ்தீன மக்கள்
கொல்லப்படுவதை அன்றாடம் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் பார்க்கின்ற இந்திய

மக்கள் கொதித்து எழுந்து இந்த போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். 
ஏகாதிபத்தியத்தின் இந்த போர்வெறிக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தொடர்கின்றன. 
அமைதியை விரும்பக்கூடிய, ஜனநாயகத்திலும் பன்முகத்தன்மையிலும், மக்களுடைய நல்
வாழ்க்கையிலும் நம்பிக்கை கொண்ட இந்திய மக்கள் ஒன்று திரண்டு இந்தப் போர்
நிறுத்தத்துக்கான குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும்.

2 comments

  1. மிக பயனுள்ள விவரங்கள்..மனதை தொடும் வார்த்தை களுடன்… சிறப்பு…

  2. Well written article. The only solution is a two nation statehood. More than the people heads of Government should try to resolve the long pending issue for over 70 years and try to implement the already agreed charter as per UN agreement. One thing is for sure; the world as to stand up against US which is the root cause of all issues in west Asia.

Comment here...