பொதுவுடைமைக் காடும் போராடும் காக்கைகளும்

க.சிவசங்கர்

மனித சமூகம் தோன்றியது முதல் இன்று வரை பல்வேறு வகையான சமூக அமைப்பு முறைகளைக் கடந்து வந்துள்ளது. இந்த சமூக மாற்றங்களுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் “உற்பத்தி முறை” என்ற ஒன்று மட்டுமே அவற்றின் அடிப்படை அம்சமாக இருந்து வந்துள்ளது. இத்தகைய சமூக மாற்றங்களை ஓர் எளிய கதை வடிவில் விளக்கும் முயற்சியே இது.

பாகம் 5:

உழைப்பும் வேலையும்:

புரட்சிக்கு பிறகான சமூகம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்த திட்டமிடுதலில் மூழ்கியிருந்தது லெனி. அப்போது லெனி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஜோ என்ற ஒரு குட்டி முயல் தனது குட்டி நண்பர்களோடு லெனியிடம் வந்து, லெனி அண்ணா…எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு. கேட்கலாமா? என்றது. அதற்கு லெனி, “ம்… தாராளமா கேளு ஜோ. எனக்கு தெரிஞ்சத சொல்றேன்” என்றது. “அண்ணா நீங்க அடிக்கடி உழைப்பு தான் எல்லாத்துக்கும் அடிப்படை ன்னு உழைப்ப பத்தியே பேசுறீங்களே. அது பத்தி கொஞ்சம் விரிவா சொல்ல முடியுமா?” என்றது ஜோ.

“எந்த ஒரு உற்பத்திக்கும் அவசியமான, அடிப்படையான அம்சம் என்பது உழைப்பு. அந்த உழைப்பு இன்றி உலகில் எந்த ஒரு உற்பத்தியும் நடைபெறாது. அதனால் அந்த உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்படும் அனைத்தும் உழைப்பைச் செலுத்திய உழைப்பாளர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உழைப்பில் ஈடுபடாத எவருக்கும் இதில் துளியும் உரிமையில்லை” என்றது லெனி. இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜோ, “நான் கூட காலையில இருந்து எவ்ளோ உழைச்சிருக்கேன் தெரியுமா லெனி அண்ணா?. நானே சீக்கிரமா எழுந்து, நானே குளிச்சி, நானே சாப்பிட்டு, நானே சைக்கிள் ஓட்டிட்டு இங்க வந்துருக்கேன். எவ்ளோ உழைப்பு பாத்தீங்களா…” என்று கடகடவென சொல்லி முடித்தது.

இதைக் கேட்டுச் சிரித்த லெனி, “நீ தப்பா புரிஞ்சிகிட்ட ஜோ. இப்போ நீ சொன்னது எதுவுமே உழைப்பில் வராது. காலைல இருந்து நீ செஞ்சது எல்லாமே வேலைகள். அது உழைப்பல்ல. ஏதாவது ஒரு புதிய பொருளை உற்பத்தி செய்யும் பொருட்டு நாம் மேற்கொள்ளும் வேலை தான் உழைப்பு. இதோடு கூடுதலா பிறரின் தேவைகளுக்காக நாம செய்ற வேலையையும் உழைப்புல சேத்துக்கலாம். ஆனால் நமக்கு நாமே செய்யும் வேலைகள் உழைப்பாகாது. உதாரணத்துக்கு இப்போ உங்களுக்கு நான் ஒரு புதிய விஷயம் குறித்து சொல்லிக் கொடுப்பது கூட ஒருவகை உழைப்பு தான். இதை மூளை உழைப்புன்னு சொல்லலாம். உங்க அம்மாக்கள் காலையில உங்களுக்கு சாப்பாடு செஞ்சி கொடுத்துருப்பாங்க. அது உடல் உழைப்பு. அந்த சாப்பாட்ட நீங்க நல்லா ருசிச்சு ருசிச்சு சாப்பிட்டு இருப்பீங்களே. அது உழைப்பு இல்ல. அது ஒரு வேலை. சுருக்கமா இப்படி ஞாபகம் வச்சுக்கோங்க, எல்லா உழைப்பும் வேலை தான், ஆனா எல்லா வகையான வேலையும் உழைப்பல்ல” என்று விளக்கி முடித்தது.

“வாவ். சூப்பரா புரியற மாதிரி சொல்லிட்டீங்க லெனி அண்ணா என்று உற்சாகமானது” ஜோ. சரி சரி எல்லாரும் பத்திரமா வீட்டுக்கு போங்க என்று சொல்லிவிட்டு மீண்டும் தனது யோசனையில் மூழ்கியது லெனி.

அடுத்த நாள் காலை. புரட்சிப் படையின் ஆலோசனைக் கூட்டம் லெனியின் தலைமையில் துவங்கியது. பாட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட காடு, தொழிற்சாலை மற்றும் உற்பத்தி சாதனங்கள் போன்றவற்றை யார் நிர்வகிப்பது என்ற கேள்வியே பிரதானமாக எழுந்தது. அப்போது பேசிய முயல், இதுவரை பாட்டி வசம் இருந்த அனைத்து சொத்துக்களும் இனி லெனியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், இப்போதுள்ள நிர்வாக அமைப்பு முறையையும் லெனியே தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும் என்றும் கோரியது.

கூட்டத்தில் இருந்த அனைவருக்கும் இதுவே சரியான யோசனையாகப் பட்டது. ஆனால் இதனை முழுவதுமாக மறுத்த லெனி, “இந்த சொத்துக்கள் யார் வசமும் ஒப்படைக்கப்படாது என்றும், அனைத்தும் அனைவருக்கும் பொதுவாகவே இருக்கும் என்றும் சொன்னது. மேலும் இப்போது நிலவுகின்ற சமூக அமைப்பு முறையைப் பொறுத்தவரை அரசு, சட்டம், ராணுவம் போன்ற அனைத்தும் ஒரு மிகச்சிறிய சிறுபான்மை உடைமை வர்க்கத்தின் நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அடக்குமுறைக் கருவிகள் தான் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே இந்த நிர்வாக அமைப்புமுறையை வைத்து நம்மால் அனைவருக்குமான சமத்துவ கொள்கைகளை வகுக்க முடியாது. எனவே பழைய அமைப்பு முறைகள் அனைத்தும் முற்றாக அழித்தொழிக்கப்பட்டு காட்டில் உள்ள அனைவரும் பங்களிக்கும் விதமான ஒரு புதிய நிர்வாக அமைப்பு முறை ஏற்படுத்தப்பட வேண்டும்” என்று தீர்க்கமாகக் கூறியது. அன்று முதல் வடை சட்டியும், தொழிற்சாலையும், காடும் அனைவருக்கும் பொதுவானதாக ஆனது. காட்டில் இருந்த வேலிகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

தனியார் சொத்துக்களும் (Private Property) , தனி நபர் சொத்துக்களும் (Personal Property):
காட்டில் ஒரு புதிய சர்ச்சை கிளம்பி அனைவரிடமும் மிக வேகமாக பரவ ஆரம்பித்தது. விரைவிலேயே அது லெனியின் காதுக்கும் எட்டியது. சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் வகையில் அவசர கூட்டம் கூட்டப்பட்டது. கூட்டத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு இருந்தனர். அனைவரின் முகத்திலும் ஒரு வித குழப்பம் குடிகொண்டிருந்ததை கவனித்த லெனி, கூட்டத்தைப் பார்த்து இப்படி எல்லோரும் ஒரே நேரத்தில் பேசுவதால் குழப்பம் அதிகமாகுமே தவிர தீராது. எனவே யாராவது ஒருவர் பேசுமாறு கூறியது.

கூட்டத்தில் இருந்த நரி முதலில் பேசத் துவங்கியது. இந்த புதிய சமூக அமைப்பில் காட்டின் தனியார் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் ன்னு சொல்றாங்களே? அப்போ எங்களுக்கு சொந்தமான எங்க வீடு, வீட்டுல இருக்குற பொருட்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்படுமா? என்று தயக்கத்துடன் கேட்டது நரி. இதைக் கேட்ட லெனி, “நாம் கட்டமைக்கப் போகும் இந்த சமூகம் தனியார் சொத்துக்களை (Private Property) ஒழிக்குமே அன்றி, தனிநபர் சொத்துக்களை (Personal Property) அல்ல” என்றது. இதைக் கேட்டுக் கொண்டிருந்த நரி, “கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா லெனி?” என்று கேட்டது.

“தனி நபர் சொத்துக்கள் என்பவை ஒவ்வொரு தனி நபரும் தங்கள் உழைப்பில் கிடைத்த வருவாயைக் கொண்டு தனக்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும் சேர்த்து வைத்திருக்கக் கூடிய சொத்துக்கள். உதாரணத்திற்கு நீங்கள் கட்டிக்கொண்ட வீடு, நீங்கள் வேலைக்கு சென்று வர பயன்படுத்தும் உங்கள் மிதிவண்டி, உங்கள் செலவுகளை சுருக்கிக் கொண்டு நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் சேமிப்பு போன்றவை. இதில் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இவை அனைத்தும் அப்படியே தொடரும்.

இங்கு நாம் சொல்லும் தனியார் சொத்துக்கள் என்பவை சமூக உற்பத்தியை கட்டுப்படுத்திடும் வகையில் உற்பத்தி சாதனங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சொத்துக் குவிப்பில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துக்கள் தான். இந்த வகைச் சொத்துக்களைத் தான் நாம் ஒழிக்கப் போகிறோம்” என்று விளக்கியது லெனி. அதைக் கேட்ட ஜோ, “என்னோட அப்பா சொந்தமா ஒரு மிதிவண்டி ரிப்பேர் செய்யிற கடை நடத்திட்டு இருக்காரு. எங்க கடையில மூணு பேர் வேலை செய்யிறாங்க. நீங்க சொல்ற படி எங்க அப்பா கிட்டயும் சில உழைப்புச் சாதனங்கள் சொந்தமாக இருக்கு. அப்போ எங்க கடையும், அந்த உற்பத்திச் சாதனங்களும் கைப்பற்றப்படுமா லெனி அண்ணா?” என்று தன் கேள்வியை முன்வைத்தது.

“அந்த கடையில உங்க அப்பா வெறுமனே கல்லா பெட்டியில உக்காந்து வரவு செலவு கணக்கு பார்க்கிறாரா? அல்லது அவரும் உழைக்கிறாரா?” என்று ஜோவிடம் கேட்டது லெனி. “என்ன இப்படி கேட்டுட்டீங்க? எங்க அப்பா முழுக்க முழுக்க தினமும் உழைக்கிறார் லெனி அண்ணா. அவருக்கு உதவி செய்யத்தான் மத்த மூணு பேரையும் வச்சிருக்காரு” என்று பட்டென சொன்னது ஜோ.

“உங்க அப்பா மாதிரி இந்த காட்டுல நிறைய பேர் சுயதொழில் செய்றாங்க. அவங்க கிட்டல்லாம் சிறிய அளவில் உற்பத்தி சாதன உடைமையும் இருக்கு. நம்ம கொள்கைப்படி உற்பத்தி சாதனங்கள் எதுவும் எந்த ஒரு தனிநபர் கையிலும் இருக்கக் கூடாது தான். ஆனாலும் அவ்வாறு இருக்கும் ஒரு நபர் உழைப்பாளியாக இருக்கும் வரை, அதாவது அவர் உழைப்புச் சுரண்டலில் ஈடுபடாத வரை, இப்போதைய நிலையில் நாம் அவற்றை எதிர்க்க வேண்டியதில்லை. பாட்டியைப் போல பெரிய அளவிலான உற்பத்திச் சாதனங்களைக் கைப்பற்றி வைத்துக்கொண்டு உழைப்பில் இருந்து முற்றாக விலகி, பிறரின் உழைப்பைச் சுரண்டி, அவர்களின் உபரிமதிப்பில் வாழ்கின்ற சுகபோகிகள் தான் நம்முடைய இலக்கு” என்றது லெனி. கூடவே “இப்போது நாம் காணும் சமூகம் என்பது முதலாளித்துவ சமூக அமைப்பு என்னும் கருவறையில் மிக நீண்ட காலங்கள் இருந்து, பிரசவமாகியிருக்கும் குழந்தையைப் போன்றது. இந்த குழந்தையிடம் அதன் மூதாதையர் பின்பற்றிய பழக்கவழக்கங்களின் எச்சங்கள் நிச்சயம் இருக்கும். அவற்றை சிறிது சிறிதாகத் தான் நம்மால் நீக்க முடியும்” என்றும் விளக்கியது.

  • தொடரும்…

2 comments

Comment here...