க. சிவசங்கர்
மனித சமூகம் தோன்றியது முதல் இன்று வரை பல்வேறு வகையான சமூக அமைப்பு முறைகளைக் கடந்து வந்துள்ளது. இந்த சமூக மாற்றங்களுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் “உற்பத்தி முறை” என்ற ஒன்று மட்டுமே அவற்றின் அடிப்படை அம்சமாக இருந்து வந்துள்ளது. இத்தகைய சமூக மாற்றங்களை ஒரு எளிய கதை வடிவில் விளக்கும் முயற்சியே இது.
பாகம் 6:
ஆலை சீரமைப்பு:
பாட்டியை காட்டை விட்டு வெளியேற்றிய பிறகு வடை தொழிற்சாலை பூட்டியே கிடந்தது. காட்டின் பெரும்பாலானவர்கள் இந்த தொழிற்சாலையின் வேலையையே நம்பி இருந்ததால் காட்டின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருப்பதை உணர்ந்தது லெனி. இனியும் தாமதிக்காமல் தொழிற்சாலையைத் திறந்து இயக்கிட வேண்டும் என்று முடிவு செய்து அனைவருக்கும் தகவல் அனுப்பியது. அதன் படி அனைவரும் ஒன்று சேர்ந்து ஆலையைப் பார்வையிட சென்றனர். நீண்ட நாட்களாக பூட்டிக் கிடந்ததால் ஆலை தூசியடைந்து இயந்திரங்கள் பழுதாகி இருந்தது. எனவே ஆலையைப் பற்றி நன்கு பரிச்சயமான கரடியாரின் தலைமையில் ஒரு சீரமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து விரைவாக உற்பத்தியைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
கரடியின் தலைமையில் தயாரிப்புப் பணிகள் துரிதமாகத் துவங்கியது. அனைவரும் உற்சாகமாக தயாரிப்புப் பணியில் ஈடுபட்டனர். வேலைகளுக்கு இடையே ஒரு சிறிய இடைவேளையின் போது லெனியும் கரடியும் பேசிக்கொண்டிருந்தன. அப்போது கரடி லெனியிடம், “பாட்டியிடம் வேலை செய்த போது அவர் நம்முடைய உழைப்பையெல்லாம் சுரண்டித் தான் வாழ்கிறார் என்பதை எங்களால் உணர முடிந்தது. ஆனாலும் அந்த சுரண்டல் எப்படி நடைபெறுகிறது என்பதை எங்களால் விளங்கிக் கொள்ள முடியல. உன்னால அதை விளக்க முடியுமா லெனி?” என்று கேள்வி எழுப்பியது.
உற்பத்தியின் உட்கூறுகள்:
“நிச்சயமா கரடியாரே. அதைப் பற்றி தெரிஞ்சிக்கிறது ரொம்ப முக்கியம். அது தான் முதலாளித்துவ அமைப்பு முறையின் அடிப்படை அம்சம். இத பத்தி நம்ம தொழிலாளர்களுக்கு தெரிவதில்லை என்பதை விட முதலாளிகளுக்கே தெரிவதில்லை என்பது தான் ஆச்சரியமான உண்மை. எனவே அத முடிஞ்ச வரை எளிமையா சொல்ல முயற்சி பன்றேன். புரிஞ்சிக்க முடியுதா ன்னு பாருங்க” என்றவாறு துவங்கியது லெனி.
எந்த ஒரு உற்பத்திக்கும் தேவையான சில அடிப்படையான அம்சங்கள் உண்டு. குறிப்பா கச்சாப்பொருள், துணைப்பொருள், உற்பத்திக் கருவிகள் போன்றவை இதுல முக்கியமானவை என்று லெனி துவங்க, “அய்யோ லெனி…நிறைய புதுப்புது வார்த்தைகளை சொல்ற…கொஞ்சம் ஒவ்வொன்னா விளக்கமா சொல்லு…அப்ப தான் எங்களுக்கு புரியும்” என்று சொன்னது நரி.
ம்ம்.. சரி ஒவ்வொன்னாவே சொல்றேன். நல்லா கேட்டுக்கோங்க என்ற லெனி, கச்சாப்பொருள், உழைப்புக் கருவி, துணைப்பொருள் எல்லாமே ஏதாவது ஒரு இயற்கைப் பொருள் மீது உழைப்பைப் போட்டு உருவாக்கப்படுகிற ஒரு பொருள் தான்.
உயிரற்ற உழைப்பு(கடந்த கால உழைப்பு):
1. கச்சாப்பொருள் என்பது ஒரு புதிய உற்பத்தி நடக்கும் போது தனது பழைய வடிவத்தை விட்டுவிட்டு உற்பத்தியாகும் புதிய பொருளோடு ஒன்றாக சேர்ந்து கொண்டு புதிய வடிவத்தை எடுக்கும்.
2. உழைப்புக் கருவி என்பது உற்பத்திக்கு தேவைப்படும் ஒரு அத்தியாவசிய பொருள். ஆனால் கச்சாப்பொருளைப் போல் உற்பத்தி முடிந்த பிறகு இது தன்னுடைய வடிவத்தை மாற்றிக் கொள்ளாது. உற்பத்தியாகும் புதிய பொருளில் கலக்கவும் செய்யாது.
3. துணைப்பொருள் என்பது ஒருமுறை உற்பத்திக்கு உதவி செய்துவிட்டு உற்பத்தி நிகழ் முறையின் போது தன்னுடைய வடிவத்தை முழுதாக இழந்து, இறுதியில் மறைந்து போகக் கூடிய பொருள்” என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்த லெனி, புரிஞ்சுதா என்பது போல் முகத்தை சுழித்தது.
“கொஞ்சம் கொஞ்சம் புரிஞ்சது. இன்னும் ஏதாவது உதாரணத்தோட சொன்னன்னா நல்லா புரிஞ்சிக்குவோம்” என்று இழுத்தது நரி. ம்ம்…சரி நமக்கு நல்லா தெரிஞ்ச வடை உற்பத்தியை வச்சே சொல்றேன், கேட்டுக்கோங்க என்ற லெனி, தனது பேச்சைத் தொடர்ந்தது.
“வடை உற்பத்தியில் மாவு தான் கச்சாப்பொருள்- இது உற்பத்தியில் பங்கு பெற்று, உற்பத்தியான வடையோடு ஒன்றுசேர்ந்து தனது வடிவத்தை மாவிலிருந்து வடையாக மாற்றிக் கொள்கிறது.
வடை சுடும் இயந்திரம் தான் உற்பத்திக் கருவி- உற்பத்திக்கு உதவி செய்து விட்டு, வடை உற்பத்தியாகி முடித்த பின்னரும் தனது வடிவத்தை இழக்காமல் அப்படியே இருக்கும் ஒரு பொருள்.
வடை சுடும் அடுப்பை எரிக்க பயன்படும் விறகு தான் துணைப்பொருள்- ஒருமுறை மட்டும் உற்பத்திக்குத் துணை புரிந்து, வடை உற்பத்தியான பிறகு தனது வடிவத்தை இழந்து, மறைந்து போகிற ஒரு பொருள்” என்று விளக்கி விட்டு இப்ப புரிஞ்சுதா என்றது லெனி.
“நல்லா புரிஞ்சது லெனி அண்ணா. இனி தூக்கத்துல எழுப்பிக் கேட்டாலும் சரியா சொல்லிடுவேன்” என்று உற்சாகமானது ஜோ முயல்.
பாட்டியோட தொழிற்சாலையில் உற்பத்தி நடந்த போது ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் வடைகள் வரை உற்பத்தி ஆனது நமக்குத் தெரியும். ஒரு வடை எவ்வளவு விலைக்கு விற்கப்பட்டதுன்னு யாராச்சும் சொல்லுங்க? என்று லெனி கேட்க, “5 ரூபாய்” என்றது ஜோ முயல். ம்ம் சரியாச் சொன்ன ஜோ. ஒரு வடையோட மதிப்பு எப்படி 5 ரூபாய் என்று முடிவு செய்யப்படுது ன்னு யாராச்சும் யோசிச்சி இருக்கீங்களா? என்று லெனி கேட்க, அனைவரும் தெரியலயே என்பது போல் உதட்டைப் பிதுக்கினர்.
நானே சொல்றேன் கேட்டுக்கோங்க. “வடை தயாரிக்க கச்சாப் பொருட்கள் என்ற வகையில் மாவு, வெங்காயம், உப்பு, மிளகாய், எண்ணெய் போன்றவை தேவைப்படுது இல்லையா. அதே மாதிரி உற்பத்தி சாதனம் என்ற வகையில் வடை சுடும் இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு முறை இந்த உற்பத்தி சாதனத்தை உற்பத்திக்காக பயன்படுத்தும் போதும் ஏற்படும் குறிப்பிட்ட அளவு சேதாரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேற்கூறிய அனைத்துமே உற்பத்தியில் பங்கு வகிக்கக் கூடியவை. இவற்றை “உயிரற்ற உழைப்பு” ன்னு வகைப்படுத்துறோம். இவற்றின் மதிப்பு முழுவதும் அப்படியே வடையின் மதிப்பாக இடம்பெயர்ந்து விடுகிறது” என்றது லெனி.
அது என்ன உயிரற்ற உழைப்பு லெனி? உழைப்புக்கு கூட உயிர் இருக்கா என்ன? என்று நரி கேட்டது. “உழைப்புக்கு உயிர் இல்ல நரியாரே. ஆனா உயிருள்ளவை மட்டும் தான் உழைப்பில் ஈடுபட முடியும். உயிரற்ற உழைப்பு ன்னு நாம சொல்றது கடந்த கால உழைப்பைத் தான். மாவு, வடை இயந்திரம் எல்லாமே ஏதோ ஒரு காலத்துல உழைப்பினால் உருவான பொருட்கள் தானே. அது உருவான போது உயிருள்ள உழைப்பா இருந்து, உற்பத்தியான பிறகு உயிரற்ற உழைப்பா மாறியிருக்கு” என்று சொன்னது லெனி.
உயிருள்ள உழைப்பு (நிகழ்கால உழைப்பு):
உடனே அங்கிருந்த ஜோ முயல், “ஓ…அப்ப இந்த உயிரற்ற உழைப்போட மொத்த மதிப்பு தான் வடையோட மதிப்பு. சரியா லெனி அண்ணா?” என்றது. அது தான் இல்லை ஜோ. இதோட சேர்ந்து இன்னொரு முக்கியமான அம்சம் இருக்கு. அது தான் நிகழ்கால உழைப்பு. இது தான் எந்த ஒரு உற்பத்தியையும் சாத்தியமாக்கும் முக்கியமான கூறு. இந்த உழைப்பைக் கொடுக்கக் கூடியவர்கள் தான் நாம எல்லாரும். நம்முடைய உழைப்பின் மதிப்பும் அந்த வடையின் மதிப்பில் சேர்கிறது. இத உயிருள்ள உழைப்பு ன்னு சொல்றோம். இந்த உயிருள்ள உழைப்பும், நாம ஏற்கனவே பேசுன உயிரற்ற உழைப்பும் சேர்ந்த மொத்தம் தான் வடையோட மதிப்பா மாறுது என்று லெனி விளக்க, நம்ம உழைப்போட மதிப்பை எப்படி அளவிடுறது லெனி என்று தனது சந்தேகத்தை எழுப்பியது நரி.
“நல்ல கேள்வி நரியாரே. உற்பத்தியில் நாம் செலவிடும் உழைப்பு நேரத்தைப் பொருத்து அதன் மதிப்பு அளவிடப்படுகிறது. இதனால தான் அதிகமான உழைப்பு நேரம் செலவு பண்ற பொருள் அதிக மதிப்பு கொண்டதாகவும், குறைவான உழைப்பு நேரம் செலவு பண்ற பொருள் குறைவான மதிப்பு கொண்டதாகவும் இருக்கு” என்று விளக்கி முடித்தது லெனி.
“புரியுது லெனி. நாம் உழைப்பைச் செலுத்தி வடைகளை உற்பத்தி செஞ்சோம். அதுக்கு பாட்டி நமக்கு கூலி கொடுத்தாங்க. இதுல எங்க இருந்து சுரண்டல் வந்துச்சு?” என்று கேட்டது கரடி.
மிகப்பெரிய உழைப்புச் சுரண்டல் இருக்கு கரடியாரே. ஆனா இன்று வேண்டாம். இப்பவே ரொம்ப நேரம் ஆயிருச்சு. மீதி வேலைய சீக்கிரமா முடிச்சு உற்பத்தியை விரைவா துவக்கணும். இப்ப வேலையப் பார்ப்போம். நாளைக்கு மறுபடி இடைவேளை நேரத்தில் கூடி இது பத்தி விரிவா பேசலாம் என்று கூற, அனைவரும் ஆலை சீரமைப்பு வேலையைத் தொடர்ந்தனர்.
தொடரும்…
அருமை