பொதுவுடைமைக் காடும் போராடும் காக்கைகளும்: பாகம் 7

க.சிவசங்கர்

மனித சமூகம் தோன்றியது முதல் இன்று வரை பல்வேறு வகையான சமூக அமைப்பு முறைகளைக் கடந்து வந்துள்ளது. இந்த சமூக மாற்றங்களுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் “உற்பத்தி முறை” என்ற ஒன்று மட்டுமே அவற்றின் அடிப்படை அம்சமாக இருந்து வந்துள்ளது. இத்தகைய சமூக மாற்றங்களை ஒரு எளிய கதை வடிவில் விளக்கும் முயற்சியே இது.

வடை தொழிற்சாலையின் சீரமைப்புப் பணிகள் கரடியாரின் தலைமையில் முழு வேகத்தில் நடைபெற்று வந்தது. “என்ன கரடியாரே வேலையெல்லாம் எந்த நிலையில் இருக்கு” என்று கேட்டது லெனி. ஏறக்குறைய பெரும்பாலான வேலைகள் முடிஞ்சிருச்சு லெனி. இன்னும் ஒருசில நாட்களில் நாம உற்பத்தியத் துவக்கிறலாம் என்று கரடி சொன்னது. “சரி சரி நேரமாச்சு எல்லாரும் சாப்பிட வாங்க. சாப்பிட்டு விட்டு வேலை பார்க்கலாம்” என்று அழைத்தது ஜோ முயல். அன்றைய உணவாக ஜோ முயல் அனைவருக்கும் தங்களது தோட்டத்தில் இருந்து கேரட் பறித்து கொண்டு வந்திருந்தது. எல்லோரும் விரும்பி சாப்பிட்டனர். சாப்பாடு முடிந்து சிறிது நேர ஓய்விற்காக அனைவரும் அமர்ந்திருந்தனர்.

அப்போது கரடி லெனியிடம், “லெனி நேத்து விட்ட இடத்தில் இருந்து இன்னைக்கு ஆரம்பிக்கலாமே..” என்று சொன்னது. “கண்டிப்பா கரடியாரே… நேத்து எந்த இடத்தில்  நிறுத்தினோம் யாராச்சும் சொல்லுங்க பாக்கலாம்” என்று லெனி சொல்ல, “உற்பத்தி எப்படி நடக்குது, உற்பத்தியான பொருளோட மதிப்பை எப்படி கண்டறிவது என்பது பற்றி பார்த்தோம். அப்போ கரடி மாமா, நம்ம உழைப்புக்கு தான் பாட்டி கூலி கொடுத்தாங்களே, அப்போ அதை எப்படி சுரண்டல் ன்னு சொல்ல முடியும்? ன்னு கேட்டாங்க. அதோட முடிச்சோம் லெனி அண்ணா” என்று உற்சாகமாக சொன்னது ஜோ முயல்.

நீ நல்லா கவனிச்சு  இருக்கன்னு தெரியுது ஜோ என்று சொல்லிவிட்டு கரடியைப் பார்த்து, “இங்க தான் நாம தப்பு செய்றோம் கரடியாரே. நம் உழைப்பின் மதிப்பிற்கு ஏற்ப எப்போதுமே நமக்கு கூலி வழங்கப்படுவது இல்லை. அதில் பெரும்பகுதியை பாட்டி சுரண்டிக் கொண்டார்” என்று லெனி சொன்னது. “எந்த அடிப்படையில் அப்படி சொல்ற லெனி? கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?” என்று கேட்டது நரி. “சரி சொல்றேன். புரிஞ்சிக்க முடியுதான்னு பாருங்க” என்று சொல்ல ஆரம்பித்தது லெனி.

முதலாளித்துவமும் சுரண்டலும்:

“பாட்டியோட தொழிற்சாலையில் ஒரு நாள் வருமானம் எவ்வளவு வரும்? செலவு எவ்வளவு ஆகும்? ன்னு யாராவது சொல்ல முடியுமா?” என்று கேட்டது லெனி. பாட்டியோட கம்பெனி ல அக்கவுண்ட் செக்சன் ல வேலை பார்த்த நம்ம கரடியாருக்கு தெரியாத கணக்கா என்று நரி சொல்ல, “ஒரு நாளைக்கு 10000 ரூபாய் வருமானம் வரும் என்றும், அதில் கச்சாப் பொருட்களுக்கு 3500 ரூபாய் செலவாகும்” என்றும் சொன்னது கரடி. ஒவ்வொரு முறை உற்பத்தி நிகழ்முறையின் போதும் உற்பத்திக் கருவியின் தேய்மானம் என்ற வகையிலும், துணைப்பொருளாக விறகிற்கும் ஒரு 500 ரூபாய் சேர்த்துக்கோங்க என்று சொன்னது லெனி. “அப்போ மொத்த செலவு 4000 ரூபாய் வருது லெனி” என்றது கரடி.

“அப்படின்னா உயிரற்ற உழைப்போட மதிப்பு 4000 ரூபாய் ஆகுது.  சரி…பாட்டியோட கம்பெனி ல நாம 100 பேர் வேலை செஞ்சோம் இல்லையா. நமக்கு ஒரு நாளைக்கு பாட்டி எவ்வளவு சம்பளம் கொடுத்தாங்க ன்னு சொல்லுங்க” என்று கேட்டது லெனி. “உனக்கு தெரியாதா லெனி..!!! நாம சங்கம் அமைச்சு போராடுன பிறகு தான் கொஞ்சம் உயர்த்தி ஒரு நாளைக்கு 20 ரூபாய் கொடுத்தாங்க” என்றது நரி.

சரியாச் சொன்னீங்க நரியாரே. ஒரு நபருக்கு 20 ரூபாய். எனில் 100 பேருக்கு 2000 ரூபாய் ஆகுது. நாம முன்னாடியே படிச்சிருக்கோம் இல்லையா. ஒரு பொருளோட மதிப்பு என்பது அதில் உள்ள உயிரற்ற உழைப்பின் மதிப்பு மற்றும் உயிருள்ள உழைப்பின் மதிப்போட கூட்டுத்தொகை தான். இங்க ஒரு நாள் உற்பத்தியின் வருவாய்(மதிப்பு) 10000 ரூபாய். அதில் உயிரற்ற உழைப்பின் மதிப்பு 4000 ரூபாய் எனில் மீதி 6000 ரூபாய் என்பது உயிருள்ள உழைப்பின் மூலம் சேர்க்கப்பட்ட மதிப்பு தானே? எனில் 6000 ரூபாய் மதிப்புள்ள உயிருள்ள உழைப்பை அங்க வேலை செஞ்ச நம்ம 100 பேரும் சேர்ந்து தானே உருவாக்கினோம். அப்படின்னா ஒரு நபரின் உழைப்பு மதிப்பு என்பது 60 ரூபாய் வர வேண்டுமா இல்லையா?. ஆனால் பாட்டி நமக்கு தந்ததோ 20 ரூபாய் தான். அப்போ மீதி 40 ரூபாய் எங்க போச்சு? ஒருத்தருக்கு 40 ரூபாய் என்றால் 100 பேருக்கு 4000 ரூபாய் ஆச்சு. அந்த 4000 ரூபாய் எங்க போச்சுன்னு யாராச்சும் யோசிச்சீங்களா? என்று லெனி கேட்க, அனைவரும் குழும்பிய படி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.ஒரு நாளைக்கு நமக்கு வர வேண்டிய 4000 ரூபாயைத் தான் லாபம் என்ற பெயரில் பாட்டி அபகரித்துக் கொண்டார் என்று போட்டு உடைத்தது லெனி.

உற்பத்தியில் கிடைக்கும் உபரி மதிப்பே லாபம்:

ஓ…அப்படின்னா லாபம் என்பது விற்பனையின் போது பாட்டியின் சாமர்த்தியத்தால் கிடைப்பது இல்லையா. நாங்க இவ்ளோ நாள் அப்படி நினைச்சிட்டு இருந்ததுல்லாம் தப்பா லெனி? என்று கேட்டது கரடி. “தப்பு தான் கரடியாரே.. லாபம் என்பது விற்பனையில் கிடைக்கும் அம்சம் இல்லை. அது உற்பத்தி நிகழ்முறையிலேயே கிடைத்திடும் ஒன்று” என்றது லெனி. முதலாளித்துவ சமூகத்தின் கீழ் எந்த ஒரு பொருள் உற்பத்தியிலும் தொழிலாளர்களுக்கு செல்ல வேண்டிய உயிருள்ள உழைப்பின் மதிப்பு இரண்டாக பிரிக்கப்படுகிறது. ஒரு பகுதி கூலியாக தொழிலாளர்களுக்கும், மறுபகுதி உபரி மதிப்பாக முதலாளியின் பைகளுக்கும் செல்கிறது. இந்த உபரி மதிப்பைத் தான் லாபம் என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்றது லெனி.

“ஓ…அப்போ பாட்டிக்கு லாபமா செல்லக் கூடிய பணம் எல்லாமே நமக்கு வர வேண்டிய பணம் தானா அண்ணா?” என்று வியப்புடன் கேட்டது ஜோ. “சரியாச் சொன்ன ஜோ. தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படாத கூலி தான் லாபம்” என்றது லெனி. “சரி லெனி. ஆனா சில நேரங்களில் நம்ம வடையை 5 ரூபாய்க்கு பதிலா 6 ரூபாய்க்கும், ஒரு முறை 7 ரூபாய்க்கும் கூட வித்துருக்கோம். வடையோட மதிப்பு 5 ரூபாயா இருந்தா எப்படி அத விட அதிகமா விற்க முடிஞ்சது? அப்போ உற்பத்தியின் முடிவில் இருந்த பொருளின் மதிப்பு விற்பனையின் போது மாறுகிறது தானே?” என்று கரடி தனது சந்தேகத்தை முன்வைத்தது.

“நீங்கள் சொல்வது சந்தையின் வேண்டல் வழங்கலைப் பொறுத்து உருவாகும் நிகழ்வு. இது அவ்வப்போது முதலாளித்துவ உற்பத்தி முறையில் நடக்கும் தான். ஆனால் அப்போதும் அது உற்பத்தியின் போது உள்ள பொருளின் மதிப்பை ஒட்டி, அதற்கு மிக அருகிலேயே இருக்கும். அதாவது வடையின் விலை சந்தையின் வேண்டல் வழங்கலைப் (Supply and Demand) பொருத்து சிறிய அளவில் மாறினாலும் எப்போதும் ஒரு வடையை 50 ரூபாய்க்கு விற்க முடியாது. அவ்வாறு சந்தையின் தன்மையைப் பொருத்து லாபத்தின் அளவு சிறிது அதிகரிக்கலாமே ஒழிய, லாபம் என்பது சந்தையில் உருவாவது அல்ல. மாறாக உற்பத்தி நிகழ் முறையில் தொழிலாளியின் உழைப்பிற்கான மதிப்பை குறைத்துக் கொடுத்து அபகரிக்கப்படும் உபரி மதிப்பினால் உருவாவதே லாபம்” என்று லெனி விளக்கியது.

உடனே அங்கிருந்த நரி “புரியுது லெனி. ஆனா நமக்கு கூலி கிடைக்கிற மாதிரி பாட்டிக்கும் ஏதாவது கிடைக்கனும் தானே லெனி? அது தானே நியாயம்”… என்று கேட்டது. அதற்குள் நேரமாகிவிட, சரி சரி இன்னைக்கு நேரமாயிரிச்சு…மறுபடி நாளைக்கு ஓய்வு நேரத்தில் நம்ம வகுப்பைத் தொடரலாம் என்று லெனி சொல்ல, அனைவரும் உற்சாகமாக ஆலை சீரமைப்புப் பணியினைத் தொடர்ந்தனர்.

தொடரும்

Comment here...