கமலாலயன்
அமரர் சி.எஸ்.பஞ்சாபகேசன் அவர்களின் நூற்றாண்டு தொடங்கியிருக்கிறது. அவரைப் பற்றிய என் நினைவுகளைத் தொகுத்துக் கொண்டு மனதளவில் அவற்றை அசைபோட்டுக் கொண்டிருந்தேன்.1975-ஆம் ஆண்டில்,நாடு பூராவிலும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நிலை. தொழிற்சங்க உரிமைகள், அரசியல், ஜனநாயக உரிமைகள் மட்டுமன்றி, மனிதர்கள் உயிருடன் வாழம் உரிமை கூட ரத்து செய்யப்பட்டிருந்த ஒரு மோசமான சூழல். நான் அந்த நேரத்தில் காட்பாடி நகர் விரிவில், காங்கேயநல்லூர் என்டிடிஎப் தொழிற்சாலையில் டூல் மேக்கர் பணியில் இருந்தேன். நானும், என்னுடன் பயிற்சியிலிருந்த 3 பேரும் காங்கேயநல்லூருக்குள் ஒரு வீட்டில் குடியிருந்தோம். நாங்களே சமையல் செய்து கொண்டோம். நான் என் சக தொழிற்சாலை நண்பர் முத்துக்குமாருடன் அடிக்கடி இலக்கியம் பற்றி விவாதிப்பது வழக்கம்.
தமுஎச அமைப்புக் கூட்டத்தில் சிஎஸ்பி
அந்தக் கால கட்டத்தில்தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் (இப்போது த.மு.எ.க.ச.) மதுரையில் தொடங்கப்பட்டது. செம்மலரிலும், தீக்கதிரிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த முக்கியமான மூத்த, இளைய படைப்பாளிகள் ஒன்று சேர்ந்து அந்த அமைப்பை உருவாக்கி மாநிலம் நெடுகிலும் கிளைகளை அமைக்கத் தொடங்கினர். அந்த அமைப்பு அப்போது நிலவி வந்த நெருக்கடி நிலைப் பிரகடனத்திற்கு எதிராகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தது. வேலூரிலும் அதன் கிளையை அமைக்க தோழர் சி.எஸ்.பி.யும், அப்போது அவருடன் அஞ்சல் துறையில் சக பணியாளர்களாக இருந்த தோழர்கள் வி.என். ராகவன், பரமசிவம், ஜெகதீசன் (எல்.ஐ.சி.),கே.கங்காதரன் (அரசு ஊழியர் சங்கம்), கருணாநிதி (தபால் தந்தி ஊழியர் சங்கம்) உள்ளிட்ட பல தோழர்களும் ஆர்வத்துடன் முயற்சி மேற்கொண்டனர்.
அதன் அமைப்புக் கூட்டம், சி.எஸ்.பி. தலைமையில்,அவரின் இல்லத்தில் நடந்தது. அதில் பங்கேற்குமாறு நண்பர் முத்துக்குமார் வற்புறுத்தியதன் பேரில் நானும் சென்றிருந்தேன். அங்குதான் சி.எஸ்.பி. அவர்களையும், அவரின் புதல்வர்கள், வங்கித்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த சி.பி.ரவிசங்கர், சி.பி.கிருஷ்ணன் ஆகியோரையும் முதன்முறையாகச் சந்தித்தேன். அன்றைக்கு இப்படியான பல்துறை ஊழியர் சங்கங்கள் பொதுவான நோக்கங்களுக்காக ஒன்றிணைந்து போராடுவதென்பது மிக இயல்பாயிருந்தது.
அன்றைய கூட்டம் எனக்கொரு புதிய திறப்பாக அமைந்தது. சி.எஸ்.பி. அனுபவம் வாய்ந்த மூத்த தொழிற்சங்கத் தலைவர். ஆயினும் என்னைப் போன்ற ஒரு புதிய இளைஞனுடன் சமதையாக அமர்ந்து விவாதித்த பாங்கு எனக்குப் பிரமிப்பைத் தந்தது. இலக்கியம், அதன் பயன்,வடிவம்,உள்ளடக்கம் பற்றி எனக்கு இருந்த பல முன் முடிவுகள் அன்று அவரின் உரையைக் கேட்ட பின் தகர்ந்து நொறுங்கத் தொடங்கின.
நூல்களின் பட்டியல்
படிக்க வேண்டிய சில புத்தகங்களின் பட்டியலைக் கூட்டத்தின் நிறைவுப் பகுதியில் பங்கேற்பாளர்களுக்குச் சொன்னார் அவர். அன்று அவர் சொன்ன புத்தகங்கள் இன்றளவும் எனக்கு ஆதர்சமாக இருந்து வருகின்றன. மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் (தமிழில் தொ.மு.சி.ரகுநாதன்), நிரஞ்சனா வின் ‘சிரஸ்மரணே’ (தமிழில் ‘நினைவுகள் அழிவதில்லை’- பி.ஆர்.பரமேஸ்வரன்), ராகுல் சாங்கிருத்தியாயனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ (தமிழில் : கண. முத்தையா), எமிலி பெர்ன்ஸின் ‘பணம்’, ஜூலியஸ் ப்யூசிக்கின் ‘தூக்கு மேடைக் குறிப்பு’ (தமிழில் இஸ்மத் பாட்சா), லெனின் அவர்களின் ‘செய்ய வேண்டியது என்ன”?- போன்ற நூல்களை அவர் பரிந்துரைத்தார். தவிர,அவற்றில் யார் யாருக்கு என்னென்ன புத்தகங்கள் வேண்டுமென்று சொன்னால்,தாமே வரவழைத்துத் தருவதாகவும் சொன்னார். நான் சில நூல்களை வாங்கிப் படித்தேன். அன்று மட்டுமல்ல, அவர் எப்போது எந்தக் கூட்டத்தில் உரையாற்றினாலும், அல்லது, சில நபர்களுடன் தனியாக உரையாடும் போதும் அவ்வப்போது வெளியீடுகளை அறிமுகம் செய்து படிக்கத் தூண்டுவதைத் தன் வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
தொழிற்சங்க ஒருங்கிணைப்பு
அப்போது வேலூர் ஒன்றுபட்ட வடாற்காடு அம்பேத்கர் மாவட்டத்தின் ஒரு பகுதி. அந்த மாவட்டத்தில் செயல்பட்ட அனைத்துத் தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி சகோதர கூட்டியக்கங்களைத் தோழமையுணர்வுடன் ஒருங்கிணைத்த ஆளுமை, சி.எஸ்.பி. அவர்கள் ‘உரிமை முழக்கம்’ என்ற மாத இதழைத் துவக்கி தொடர்ந்து பல ஆண்டுகள் நடத்தி வந்திருந்தார் அது உழைக்கு வர்க்கம் என்ற பெயர் மாற்றத்துடன் அவரின் மறைவுக்குப் பிறகும் தொடர்ந்து வெளி வந்தது குறிப்பிடத்தக்கது.
என்டிடிஎப் தொழிற்சங்கப் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டு அதை சி.ஐ.டி.யூ.மத்திய தொழிற்சங்க அமைப்புடன் இணைக்குமளவுக்கு வர்க்க உணர்வு பெறுவதற்கு வழிகாட்டியவர் அவர்தான் என்றால் மிகையாகாது. அந்தத் தொழிற்சங்கம் செயல்படத் தொடங்கிய பின்னர்தான், காட்பாடி நகர் விரிவுப் பகுதியான காந்தி நகரில் முதன் முறையாக மே தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. ஊர்வலம்,கூட்டம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அன்று சி.எஸ்.பி.அவர்களும் அந்த நிகழ்வில் உரை நிகழ்த்த இசைந்திருந்தார். ஆனால்,அன்று அவருக்கு வேறொரு முக்கிய அலுவல் வந்து விடவே, அவரால் வர இயலவில்லை. தனது கருத்தை மிகச் சுருக்கமாக ஓர் உள்நாட்டு அஞ்சல் கடிதத்தில் பதிவு செய்து வாழ்த்துச் செய்தியாக அனுப்பியிருந்தார்.
எங்கள் சக தொழிலாளி ஒருவர் சாதி மறுப்புத் திருமணம் செய்ய விழைந்த போது அதை நடத்தி வைப்பதற்கு சி.எஸ்.பி. வர வேண்டுமென விரும்பினார். பல வேலைகள் இருந்த போதும், திருமண நாளன்று சி.எஸ்.பி.அவர்கள் வந்து தலைமை வகித்து நடத்தி கொடுத்தது அனைவருக்கும் மன நிறைவளித்த ஒரு செயலாக அமைந்தது. இது போலப் பல நிகழ்வுகளை என் தனிப்பட்ட அனுபவத்திலிருந்தே சொல்ல முடியும்.
வர்க்க ஒற்றுமை
அஞ்சல் துறை ஊழியர்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக வேலை நீக்கம் செய்யப்பட்டு ஊதியமின்றிப் போராட வேண்டிய ஒரு சூழலில், வேலூர் நகர பீடித் தொழிலாளர்களும், நடுத்தர வர்க்க ஊழியர்களும் அவரவர் தொழிற்சங்க சார்பில் நிதி திரட்டிப் போராடும் ஊழியர்களுக்கு உதவியிருக்கின்றனர்.
அந்த அனுபவங்களைத் தோழர் சி.எஸ்.பி. விவரிக்கையில் அவரின் கண்களில் கண்ணீர் பளபளக்கும்; நாத் தழு தழுக்கும் உழைக்கும் வர்க்க ஒற்றுமை குறித்து அவர் பேசும் போதெல்லாம் தவறாமல் மேற்கோள் காட்டும் திரைப்படப் பாடல் : ‘எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும், வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப் போமே…’ என்பது.உழைக்கும் வர்க்கத்திற்கு மட்டுமே தனக்கு வாழ்வு வந்தால் அதை அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கும் பண்பு இருக்கும் என்பார் அவர். அதே போல், புரட்சி பற்றிய விளக்கங்களில், வன்முறையின் தேவை பற்றி அவர் குறிப்பிடும் உதாரணம், பிரசவம் அல்லது அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவர்,தாயும்,சேயும் நலமாக மீள வேண்டுமெனில்,சிகிச்சையின் போது இரத்தம் சிந்துவது தவிர்க்கவே முடியாதது என்று சொல்லுவார்.
சுரண்டப்படும் ஈ.டி.ஊழியர்கள்
சி.எஸ்.பி.,அஞ்சலக அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர். அவர் அன்றைய நாளில் தாம் நடத்தி வந்த உரிமை முழக்கம் மாத இதழின் சார்பில் சிறு பிரசுரங்களை வெளியிட்டு வந்திருக்கிறார். அவற்றில் ஒன்று,’சுரண்டப்படும் ஈ.டி.ஊழியர்கள்’ என்பது. அஞ்சல் துறையில், பணி வரன் முறைப் படுத்தப்படாமல் ‘கூடுதல்’ அல்லது ‘அதிகப்படியான’ ஊழியர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்த சுமார் ஒரு லட்சம் பணியாளர்களின் நிலைமைகள் பற்றிய ஒரு முழுமையான படப்பிடிப்பு அது. அதை ஏன் அவர் வெளியிட முன் வந்தார் என்று ஒரு முன்னுரையில் சொல்கிறார் : “ தோழர்களே ! தமிழகத் தபால்-தந்தி ஊழியர்கள் இயக்கத்தின் தொழிற்சங்க வெளியீடான ‘உரிமை முழக்கம்’ தனது வளர்ச்சிப்பாதையில் ஐந்தாம் ஆண்டைக் காண்கிறது.
அரசு ஊழியர்களை அணி திரட்டுவது,தொழிற்சங்க இலட்சியங்கள் குறித்த உணர்வூட்டுவது,ஒன்றுபட்ட இயக்கங்களுக்கு அவர்களை ஆயத்தப் படுத்துவது என்ற இலட்சிய முழக்கங்களோடு தொழிற்சங்க அரங்குகளில் அடி வைத்த ‘உரிமை முழக்கம்’ தொடர்ந்து பணியாற்ற வழியமைத்துக் கொடுத்த தோழர்கள் அனைவரும் இதன் வளர்ச்சி குறித்துப் பெருமைப்படலாம்.இதன் வாழ்வும்,வளமும்,வலிமையுமாக நிற்கும் முன்னணித் தோழர்களுக்கு மகிழ்ச்சி ஊட்டும் அறிவிப்பு : உரிமை முழக்கம் தனது வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முற்படுகிறது.அனைத்து ஊழியர் பகுதிகளுக்கும் பயன்படும் பிரசுரங்களையும் அவ்வப்போது வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் முயற்சியாக,இன்று நமது இயக்கத்தில் மிகவும் பின்னடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் ED (Extra Department) ஊழியர்கள் குறித்த ஒரு படப்பிடிப்பும்,அவர்களது இயக்கத்தின் சோதனைகளையும்,சாதனைகளையும் குறித்த விரிவான விவரங்களையும் தருகிற ‘சுரண்டப்படும் ஈ.டி.ஊழியர்கள்’ என்ற இந்த நூலை வெளியிடுகிறோம்.” சி.எஸ்.பி.அவர்களின் பேனா முனை,எந்த அளவுக்குக் கூர்மையானது,வலிமை மிக்கது என்று தெரிந்து கொள்ள வேண்டுவோர் அதைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
பிரமிப்பும் சோகமும்
அவர் தனது உரைகளிலும்,கட்டுரைகளிலும் புள்ளி விவரங்களைத் தருவதற்கு கையாண்ட முறைகளை நான் நேரில் ஒரு கள ஆய்வின் போது கண்டறிந்தேன்.உரிமை முழக்கம் இதழில் சி.எஸ்.பி.தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறார்.அவற்றில்,இன்றும் பொருந்தக்கூடிய தத்துவார்த்த, அனுபவத் தொடர்களைத் தொகுத்து,ஒரு நூலாக வெளியிடுவோம் என்று நானும்,தோழர் சி பி ரவிசங்கரும் திட்டமிட்டோம். அதற்காக சி.எஸ்.பி. அவர்களின் குறிப்பு நோட்டுகள்,டயரிகள்,உரிமை முழக்கம் பழைய இதழ்கள் ஆகியவற்றைப் படித்துப் பார்க்க விரும்பினேன். நானும் ரவிசங்கரும் ஓர் அரை நாள் போலச் செலவிட்டு அந்தக் களஞ்சியத்திலிருந்து பல குறிப்புகளைத் தேடித் தொகுத்தோம்.அவற்றை நான் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்தேன். அவற்றை இந்தக் கட்டுரைக்காகப் படித்துப் பார்த்த போது பெரும் பிரமிப்பும்,ஒரு சோகமும் என் நெஞ்சில் கவிந்தன. பிரமிப்பு- இத்தனை பொடியான கையெழத்துகளில்,இத்தனை பக்கங்களைக் குறிப்பெடுக்க எத்தனை பிரயாசையையும்,உழைப்பையும் அவர் செலுத்தியிருந்திருக்க வேண்டுமென்ற உணர்வினால் ! சோகம்,இந்த அளவுக்குத் தன் உழைப்பைச் செலுத்திய அவர்,நூல்களை எழுதுவதில் கவனம் செலுத்தியிருந்தாரானால்,நமக்கு எத்தகைய தத்துவ,அரசியல் அனுபவப் பதிவுகள் கிடைத்திருக்கும் என்ற ஏக்கத்தினால் !
இன்றும் பொருந்தும்
ஒரேயோர் உதாரணம் : 1987-ஆம் ஆண்டில்,டிசம்பர் 13-ஆம் தேதியிட்டு வெளியான இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளிதழின் வாராந்திர இணைப்பிதழில் வெளியான ஒரு கட்டுரையின் நறுக்கு அவரின் சேகரிப்புகளில் இருந்தது. எடுத்துப் பிரித்தால் ஒரு முழப் பக்கம்,பின் மேலும் இரு கால் பக்கங்கள் அளவுக்கு விரிவான கட்டுரை.அதை எழுதியிருந்தவர் குஷ்வந்த்சிங் ! பஞ்சாபி மொழியிலும் ஆங்கிலத்திலும் ஏராளமாக அவர் எழுதிக் குவித்திருக்கிறார். அன்றைய புகழ் பெற்ற ஆங்கில வார இதழ் ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆப் இந்தியா’ வின் ஆசிரியராகப் பணியாற்றி உலகப்புகழ் பெற்றவர்.அந்தக் கட்டுரை,இன்றைக்கு நாம் உடனே புத்தகமாக வெளியிட்டு இலட்சக்கணக்கில் கொண்டு போக வேண்டிய கருத்துப் பெட்டகம் ! ‘India Needs A New Religion’ என்பது அதன் தலைப்பு.சீக்கியரான குஷ்வந்த் சிங்,அன்றைக்குப் பரவலாகத் தொடங்கியிருந்த இந்துத்துவ மத வெறியைச் சாடி,உண்மையான மதம் என்பது,ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயமாயிருக்க வேண்டுமேயொழிய, மற்றவர்களின் மதங்களை இழிவுபடுத்துவதாகவோ,தனது மதத்தை மற்றவர்களின் மேல் பலவந்தமாகத் திணிப்பதாகவோ இருக்காது;இருக்கக் கூடாது என்று ஆணித்தரமாகக் கூறியிருந்தார்.அதனைப் படித்த சி.எஸ்.பி., தனக்குப் பிடித்த வரிகளை அடிக்கோடிட்டு,பாதுகாத்து வைத்திருந்த பாங்கு, என்னை மெய் சிலிர்க்க வைத்தது !
குறிப்புகளில் மூழ்கினால்,இன்றைய இந்திய அரசியல்,சமூகப் பிரச்னைகள் அனைத்தையும் பற்றிய நுணுக்கமான பரிசீலனைக் குறிப்புகளாக அவை இருக்கின்றன.எல்லாவற்றையும் சொல்லப் புகுந்தால்,பல கட்டுரைகளை நாம் உருவாக்கியாக வேண்டும் ! இடமோ,நேரமோ போதாது என்பதால் இந்த ஓர் எடுத்துக்காட்டுடன் நிறுத்திக் கொள்கிறேன்.
தோன்றாத் துணை
எங்கள் தொழிலாளர்களின் மே தினக் கொண்டாட்டம்,அரசியல்-தத்துவ வகுப்பு, கலை-இலக்கியப்பணிகள்,வாசிப்பு போன்ற பன்முக நடவடிக்கைகள் அனைத்தும் சி.எஸ்.பி.அவர்களின் இடையறாத,உத்வேகமிக்க அரவணைப்போடுதான் நடந்தன. .அந்த அனுபவங்கள் அனைத்தையும் விரிவாகச் சொல்ல முற்பட்டால் ஒரு புத்தகமாக அது விரியும். இன்று,சி.எஸ்.பி.நூற்றாண்டு தொடங்கும் இந்தத் தருணத்தில்,அவரின் நினைவுகள் எனக்கும்,என் போன்ற எண்ணற்ற தோழர்களுக்கும் என்றும் தோன்றாத் துணைகளாகும்.
This is a very inspiring article that kindles the emotional, revolting , creating a mind that fights all odds against the attack on the working class.
A devout trade union fighter.
A teacher, a guide, on the principles of Marxism Leninism to construct trade union activities with a great vision towards a better world free of exploitation.
The events the author of this article described are very interesting and be followed by today’s leadership.
Dedication, discipline,focus were his forte to establish himself as great leader of the trade union movement.
Once again best wishes to the author Kamalayan