அபிநவ் சூர்யா, ஆராய்ச்சி மாணவர், ஜே.என்.யு திருவனந்தபுரம்
ரஷ்ய அக்டோபர் புரட்சி நிகழ்ந்து 106 ஆண்டுகள் (நவ 7, 1917) கடந்த இந்த தருணத்தில், அதன் வெற்றி மற்றும் சாதனைகள் குறித்த பல்வேறு குறிப்புகளும், ஆய்வு கட்டுரைகளும் நம்மிடையே உள்ளன. மிகக் குறுகிய காலத்தில் ரஷ்யாவை பின்தங்கிய நிலையிலிருந்து உலகின் இரண்டாம் மிகப்பெரும் சக்தியாக மாற்றியது மட்டுமல்லாமல், அதே காலத்தில் வறுமையை ஒழித்து, கல்வியின்மையை நீக்கி, பாலின பாகுபாடுகளை தகர்த்து, வரலாறு காணாத சமூக மற்றும் பொருளாதார சமத்துவ நிலையை நிறுவி, உலகிற்கே உத்வேகமாக எழுந்தனர் சோவியத் ஒன்றியத்தின் உழைக்கும் மக்கள்.
இதன் பல அம்சங்கள் குறித்து பலரும் குறிப்பிட்டிருந்தாலும், இந்த கட்டுரையில், இன்றைய சூழலுக்கு மிக முக்கியமான இரண்டு (ஒன்றோடொன்று தொடர்புடைய) அம்சங்களான சர்வதேச நிதி மூலதனம், போர் மற்றும் அமைதி, ஆகிய அம்சங்களின் மீது அக்டோபர் புரட்சி ஏற்படுத்திய தாக்கம் குறித்து மட்டும் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.
சர்வதேச நிதி மூலதனம்
ஏகாதிபத்தியத்தின் பெரும் ஆயுதம் தான் சர்வதேச நிதி மூலதனம். இது குறித்து புரிந்து கொள்ள, 1916-ல் புரட்சிக்கு முன் லெனின் எழுதிய “ஏகாதிபத்தியம்” என்ற நூல் தான் இன்றளவும் ஆகச் சிறந்த குறிப்பாக உள்ளது. பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டும் முதலாளித்துவத்தில், ஆலை உற்பத்தியை கடந்து, “நிதித்துறை” (finance) முதலாளி வர்க்கத்திற்கு எவ்வாறு முக்கிய அம்சமாக எழுகிறது என மார்க்ஸ் குறிப்பிட்டார். இந்த புரிதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார் லெனின். நிதித்துறை முக்கியத்துவம் பெற்ற முதலாளித்துவ சூழலில், வங்கிகள் வெறும் பரிவர்த்தனைக்கு வழிவகை செய்யும் கருவிகளாக இருப்பதில்லை. மக்கள் சேமிப்பை கட்டுப்படுத்தும் வங்கிகள், முதலாளித்துவத்தின் ஏற்ற இறக்க காலங்களில், சிறிய நிறுவனங்களை பெரும் நிறுவனங்கள் அபகரிக்கப்பதற்காக, நிதி சுழற்சிக்கு வழி வகுக்கும் நிறுவனங்களாக எழுகின்றன. காலப்போக்கில் இப்படி ஏகபோகமாக வளர்ந்து வரும் வங்கி மூலதனம் மற்றும் ஆலை மூலதனம் இரண்டிற்கும் இடையேயான பிணைப்பு வலுவுற்று, ஏகபோகத்தை பரந்துபட்ட அளவில் நிலைநாட்டும் “நிதி மூலதனமாக” உருவெடுக்கிறது. இந்த நிதி மூலதனம் பல்வேறு நாடுகளுக்கும் (குறிப்பாக காலனிய நாடுகளுக்கு) ஏற்றுமதி செய்யப்பட்டு, அந்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தி, மக்களை சுரண்ட, அதீத லாபம் ஈட்ட துவங்குகிறது. இந்த நிதி மூலதனத்தின் சர்வதேச ஏகபோகத்தையே நாம் “ஏகாதிபத்தியம்” என புரிந்து கொள்கிறோம் என லெனின் குறிப்பிட்டார்.
இந்த ஏகாதிபத்தியம் மற்றும் நிதி மூலதனத்தின் ஆதிக்கத்திற்கு எதிரான முதல் மாபெரும் பதிலடி கொடுத்தது அக்டோபர் புரட்சி. ஏகாதிபத்திய நாடுகளின் நிதி மூலதனங்களுக்கு இடையேயான போராட்டம் தான் “முதலாம் உலகப் போர்” என கண்டறிந்த லெனின், அதனால் பேரவதிக்கு உள்ளான ரஷ்ய மக்களை திரட்டி, புரட்சியை வழிநடத்தி, உழைக்கும் வர்க்க அரசை அமைத்தார். அக்டோபர் புரட்சி நடந்தேறியவுடன், டிசம்பரில் சோவியத் பிரதிநிதிகள் ஒன்று கூடி, அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை தேசியமயமாக்கும் பிரகடனத்தை அறிவித்தனர்.
மேலும் நிதி மூலதனத்திற்கு மாபெரும் அடி கொடுத்தது “ரஷ்ய கடன் மறுப்பு”. புரட்சிக்கு முன் ஜார் மன்னர் ஆட்சியின் கீழ் இருந்த ரஷ்யா, முதலாம் உலகப்போரில் பங்கேற்றதற்கான முக்கிய காரணம், அது நிதி மூலதனத்தின் பிடியில் சிக்கி இருந்தது தான். புரட்சிக்கு முன், பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளின் தனியார் வங்கிகளிடம் ரஷ்ய அரசின் கடன் அளவு சுமார் £ 338 கோடியாக, தன் உள்நாட்டு உற்பத்தியை விட இரண்டு மடங்காக இருந்தது. இதுவே அன்று எந்த ஒரு நாட்டின் அதிகபட்ச கடன் அளவு. மேலும் ரஷ்யாவின் எண்ணெய் கிணறுகள், சுரங்கங்கள், பல்வேறு ஆலைகள் என அனைத்தும் சர்வதேச நிதி மூலதனத்தின் பிரதிநிதிகளான பிரான்சு மற்றும் ஆங்கிலேய முதலீட்டாளர்கள் வசம் இருந்தது. புரட்சிகர அரசு ஆட்சியை கைப்பற்றிய மூன்று மாதங்களில், இந்த கடன்கள் எதையும் ரஷ்யா திரும்பி கொடுக்காது என அறிவித்தது. மேலும் அந்நிய முதலீட்டாளர்கள் வசம் இருந்த அனைத்து வளங்களையும் தேசியமயமாக்கியது. இதனால் நிதி மூலதனம் பெரும் இழப்புகளை சந்தித்தது. 1918ல் அமெரிக்கா உட்பட 14 நாடுகள் புரட்சிகர சோவியத் அரசை கவிழ்க்க படைகளை அனுப்பி, உள்நாட்டு போர் மூட்டியதற்கு இதுவே முக்கிய காரணம்.
இது மட்டுமல்லாமல், “காலனிகள் அனைத்தும் நிதி மூலதன சுரண்டலுக்காகவே” என்ற புரிதலில் நிறுவப்பட்ட புரட்சிகர அரசு, அன்று ஜார் ரஷ்யாவின் “காலனிகளாக” இருந்த கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு விடுதலை அளித்து, அவை ரஷ்யாவிற்கு எந்த இழப்பீடும் வழங்க வேண்டாம் என அறிவித்து, அவை சுதந்திர தேசங்களாக “சோவியத் ஒன்றியத்தின்” அங்கமாக வேண்டும் என்றால் இணைந்து கொள்ளலாம் என அறிவித்தது. மேலும் பெர்ஷியா (இன்றைய ஈரான்) மற்றும் துருக்கிக்கு ஜார் ரஷ்யா கடன்களை வழங்கி, அந்நாட்டு வளங்கள் மற்றும் வங்கிகளை கட்டுப்படுத்தி வந்தது. இந்த அனைத்து கடன்களையும் புரட்சிகர அரசு தள்ளுபடி செய்தது.
இவ்வாறு நிதி மூலதனத்திற்கு எதிரான தாக்குதல்களை நிகழ்த்தி வந்ததோடு மட்டுமன்றி, ஒடுக்கப்பட்ட நாடுகளை புரட்சிகர அரசு கண்ணியத்துடன் நடத்தியதால், நிதி மூலதனத்தின் சுரண்டல் மையமாக இருந்த காலனிய நாடுகளில் ரஷ்யா மீதான நம்பிக்கை பன்மடங்கு உயர்ந்தது. தங்களின் போராட்டங்களுக்கு அரசியல் ஆதரவு மட்டுமல்லாமல் வளங்களையும் சோவியத் ஒன்றியம் வழங்கும் என இந்நாடுகளின் உழைக்கும் மக்கள் நம்பத் துவங்கினர். இதனால் காலனிய நாடுகளில் உழைக்கும் வர்க்க, மற்றும் தேசிய விடுதலை போராட்டங்கள் வலுவுற்றன. இதன் விளைவு – இரண்டாம் உலகப்போருக்கு பின் இந்தியா உட்பட பல்வேறு காலனிய நாடுகளும் விடுதலை அடைந்தன.
காலனிய நாடுகள் விடுதலை அடைந்த பிறகும், தேசிய வளர்ச்சிக்கு ஏகாதிபத்திய நிதி மூலதனத்தை சார்ந்து இருந்தால் சுரண்டல் தொடரவே செய்யும். இங்கு தான் சோவியத் ஒன்றியம் வளரும் நாடுகளின் அரணாக திகழ்ந்து, அந்நாடுகளுக்கு வளங்களையும் தொழிற்நுட்பத்தையும் வழங்கி, தொழில் வளர்ச்சிக்கு கை கொடுத்தது (இந்தியாவில் நெய்வேலி அனல் மின் நிலையம், பிலாய் உருக்காலை, ஐ.ஐ.டி பம்பாய் ஆகியவை சில உதாரணம்). இதன் மொத்த விளைவு – சர்வதேச அளவில் ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் வலு குறைந்து, உழைக்கும் மக்களின் நலன் வெகுவாக உயர்ந்தது.
இன்று சோவியத் ஒன்றியம் கலைந்த பின், பல நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. ஐ.எம்.எஃப், உலக வங்கி, மேற்கத்திய தனியார் வங்கிகள் என அனைத்தின் தாக்குதல்களால் நம் கண் முன்னரே பாகிஸ்தான், இலங்கை, ஜாம்பியா, கானா, எகிப்து, அர்ஜன்டீனா என்ற பல வளரும் நாடுகளும் அவதிப் படுவதை பார்க்கிறோம். இந்த நாடுகளுக்கு உதவுவதாக வரும் ஐ.எம்.எஃப் மற்றும் உலக வங்கி, நிதி மூலதனத்தின் சுரண்டலை தீவிரமாக்கும் மக்கள் விரோத கொள்கைகளை அமலாக்க நிர்பந்திக்கின்றன. இச்சூழலில் சோவியத் ஒன்றியம் போன்ற புரட்சிகர அரண் இல்லாததன் தாக்கம் உலகளவில் உழைக்கும் மக்களை வாட்டி வதைக்கிறது.
போர் மற்றும் அமைதி
ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் நலனுக்காக நிகழந்ததே முதலாம் உலகப் போர் என லெனின் கண்டு கூறியதை பார்த்தோம். இதற்கு எதிராக, “ரொட்டி, நிலம், அமைதி” என்ற கோஷத்துடன் போல்ஷவிக்கள் மக்களை திரட்டி புரட்சி நிகழ்த்தினர். போர் மற்றும் அதன் விளைவாக ஒரு நாடு மற்றொரு நாட்டை கட்டுப்படுத்துவது நிதி மூலதனத்தின் சுரண்டலுக்காகவே என நம்பிய சோவியத் ஒன்றியம், முன்னர் கூறியது போல் காலனிகளுக்கு விடுதலை அளித்து, அந்த அண்டை தேசங்களுடன் அமைதி நிலவ வேண்டும் என்றால் அவைகளை சுதந்திர தேசமாக அங்கீகரித்து, அவை ஜனநாயக ரீதியாக “ஒன்றியத்தில்” சேரும் அல்லது விலகும் உரிமையை வழங்கியதை நாம் பார்த்தோம். மேலும் ஆட்சியை கைபற்றிய பின், ஐரோப்பாவின் இதர நாட்டு உழைக்கும் வர்க்கங்களும் புரட்சி நிகழ்த்தி, உலகப் போரை நிறுத்தி, அமைதியை நிலைநாட்டும் என நம்பி வந்த லெனின், அது நிகழாது போனதால், நிலங்கள் பறிபோனாலும் பரவாயில்லை என ஜெர்மனியுடன் அமைதி உடன்படிக்கை செய்து, முதலாம் உலகப் போரிலிருந்து ரஷ்யாவை வெளியேற்றினார். இவ்வாறு “சுரண்டலே போர்களின் ஆணி வேர்” என்ற புரிதலை கொண்ட புரட்சிகர அரசு, அமைதியை நிலைநாட்ட பெரும் முயற்சிகள் எடுத்தது.
இது இன்றை சூழலில் மேலும் முக்கிய படிப்பினைகளை கொடுக்கிறது. 1991ல் சோவியத் ஒன்றியம் கலைந்த பின் “இனி போர்களே இருக்காது” என பிரகடனம் செய்த ஏகாதிபத்திய நாடுகள், ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், லிபியாவிலும், சிரியாவிலும் போர் தொடுத்தது எதற்கு? இன்று ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனை போரில் கைப்பாவையாக பயன் படுத்துவதும், மேற்கு ஆசிய பகுதிகளில் இஸ்ரேலை பயன்படுத்தி பாலஸ்தீனத்திற்கு எதிராக போர் தொடுப்பதும் எதற்கு? சீனாவிற்கு எதிரான புதிய பனிப்போரை கட்டவிழ்த்து விடுவது எதற்கு? சர்வதேச ஏகாதிபத்திய நிதி மூலதனம் நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், உலகின் அனைத்து பகுதியிலும் உள்ள வளங்கள் மற்றும் மக்கள் உழைப்பை கட்டுப்படுத்தி, சுரண்டலை கூர்மையாக்கி, லாப வேட்டையை தீவிரமாக்குவது அவசியமாகிறது. இதுவே இன்றைய அமைதியற்ற நிலைக்கு காரணம்.
இதற்கு முடிவு கட்ட “அமைதி வேண்டும்” என்ற கோஷம் இட்டால் போதாது. அக்டோபர் புரட்சி வழி காட்டியது போல, சர்வதேச நிதி மூலதனத்திற்கு எதிராக குரலெழுப்ப வேண்டும்.
நிறைவாக
இன்று நம் கண் முன் காணும் அவலங்கள் இவை – பல வளரும் நாடுகளும் கடன் நெருக்கடியில் சிக்கி, மக்கள் வாழ்வாதாரம் அழிந்து, தீவிரமாக சுரண்டப்படுவதும், போர் மூலம் மக்களை வதைத்து, வளரும் நாட்டு வளங்கள் சூறையாடப்படுவதும். இவ்விரண்டுமே சர்வதேச நிதி மூலதனத்தின் லாப வெறியால் நிகழ்வது. இதை தடுக்க வேண்டுமென்றால் அக்டோபர் புரட்சி காட்டியது போல, தேசங்கள் அனைத்தும் சர்வதேச நிதி மூலதனத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து, அந்நிய முதலீடுகள் நாட்டின் பொருளாதார இறையாண்மையை குலைக்காமல், மக்கள் நலனுக்கு செயல்பட வைக்க வேண்டும். இது எளிதான காரியமல்ல. இதற்கு முதலில் உழைக்கும் மக்களை நிதி மூலதனத்திற்கு எதிராக வலுவாக அணி திரட்ட வேண்டும். இதைச் செய்ததால் தான் “கடன்களை திரும்பத் தர முடியாது” என்று சொன்ன பின்பும், மக்கள் ஆதரவுடன், எதிர்புரட்சியை வீழ்த்தியது சோவியத் ரஷ்யா.
இதை சாதிக்க, இன்றைய சூழலில் சோவியத் ஒன்றியம் போன்ற ஆதரவு சக்தி நமக்கு இல்லாவிட்டாலும், அக்டோபர் புரட்சி மூலம் ரஷ்ய உழைக்கும் மக்கள் நிகழ்த்திய சாதனைகள் நமக்கு அளிக்கும் ஊக்கம் எந்நாளும் நிலைத்திருக்கும்!
ரஷ்ய புரட்சி பற்றி அருமையான கட்டுரை. மானிடம் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னும் ஆழமாக படிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளடக்கியதுதான் ரஷ்ய புரட்சி. ஒரு மாபெரும் இயக்க வரலாற்றை சிறிய கட்டுரையாக அனைவருக்கும் எளிதாக புரியும் வண்ணம் கொண்டு வந்தமைக்கு ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
மிக அருமை. சர்வதேச நிதி மூலதனத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் ஏகாதிபத்திய சுரண்டலை கட்டுப்படுத்த முடியும். புதிய சிந்தனையை தூண்டியுள்ளது. ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
மிகவும் முக்கியமான கட்டுரை. தோழர்கள் இதனின் உள்ளடக்கத்தை- நிதி மூலதனத்தின் மேலாதிக்க போக்கை சரியாக புரிந்து கொள்ள இதே உதவும். கட்டுரை ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள், பாராட்டுகள்.
ஆர்.கருமலையான், சிஐடியூ
The author of this article have explained in simple terms and showed instances as to how finance capital control everyone and everything in this earth/ world to it’s knees.
The November revolution is a lesson to all those countries esp it’s people to learn how the finance capital controlled by the Western nations will destroy anything that resists it’s dominance.
Simply great Mr. Abhinav.