குழந்தைகள் தினம்: அன்பு கொண்டாடும் தினம் 

எஸ் வி வேணுகோபாலன் 

ன்பைப் புதுப்பித்துக் கொள்ள ஒரு தினமாக வந்திருக்கக் கூடும், குழந்தைகள் தினம். குழந்தைகள் அன்பைச் சுவைக்கத் துடிக்கின்றனர். அன்பில் திளைத்திருக்க விரும்புகின்றனர். அன்புச் சுனையில் ‘குள்ளக் குளிரக் குடைந்து நீராட’ வேட்கையுறுகின்றனர். அன்பு வாய்க்காவிடில் வாடிப் போய் விடுகின்றனர்.   எத்தனை வயதானாலும் தங்கள் பிள்ளைகளைக் குழந்தை என்று கொண்டாடும் பெற்றோர், வரம் பெற்றோர்.

குழந்தைகள் தன்னியல்பாக அடுத்தவரைப் பாராட்ட அறிந்திருக்கின்றனர். அண்மையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒரு குழந்தை நன்றாகப் பாடித் ‘தங்க மழை’ பரிசு பெற்றால் மற்ற குழந்தைகள் தாங்களும் கைதட்டிக் கொண்டாடி மகிழ்வதைக்  குறிப்பிட்டுத் தனக்கும் கற்றுக் கொள்ள வாய்த்த தருணம் என்றார்.  போட்டிகள் நிறைந்த இடத்திலேயே புன்னகையோடு வாழத் தெரிந்த குழந்தைகள்தாம் வளர்ந்த காலத்தில் போட்டியுலகில் பொறாமைகளுக்கும் வெறுப்புக்கும் ஆளாகப் பழகிக் கொள்கின்றனர். ஒப்பிட்டு ஒப்பிட்டுப் பேசி, ஒருவருக்கு மற்றவரை ஆகாதவராக நாம் தான் வளர்த்து விடுகிறோம். 

‘ஒரு குழந்தையை வையாதே பாப்பா ‘ என்ற வரியில், மகாகவி அபாரமான செய்தியைப் பேசுகிறார். நல்லன அல்லாதது வெறுக்கவும், அநீதியானது எதிர்த்து நிற்கவும் கூடக் குழந்தைகளுக்குக் கற்பிக்கிறார் அவர்.  ‘பாதகம் செய்பவரைக் கண்டு பயங்கொள்ளாது மோதி மிதிக்கவும்’ அறிவுறுத்துகிறார். செய்யத் தக்கன, செய்தக்க அல்லாதன எல்லாமே சொல்லிச் செல்லும் ‘பாப்பா பாட்டு’ முழுக்க முழுக்க அவர் குழந்தைகளோடு  காலகாலத்திற்கும் நடத்தும் உரையாடல் தான்.  விலங்கினங்களை, சுற்றுச் சூழலை, இயற்கையை நேயத்தோடு பார்க்க உணர்த்தும் பரவசமிக்க தத்துவம் அது. 

ஒரு வயது நிறைவடைய உள்ள நேரத்திலேயே ஒரு குழந்தைக்குப் பெரியவர்கள் உண்ணும் உணவு வகைகளை மிகச் சிறு அளவில் கொடுத்துப் பழக்கப் படுத்த வேண்டும் என்பார் ஓமியோபதி மருத்துவர் பி வி வெங்கட்ராமன். தங்களுக்கு உள்ள சில ஒவ்வாமைகள் தங்கள் குழந்தைகளுக்கும் நீட்சி அடைவதைச் சிலர் பெருமையோடு சொல்லிக் கொள்வது உண்மையில் தவறானது. அது உறவுகளை வெறுத்தலிலும் பிரதிபலித்து விடும். 

எதிர்ப்புச் சக்தி குழந்தைகளுக்குள் வளர்த்தெடுக்க வேண்டியது அடிப்படை தேவை. அவர்களுக்குப் போராடக் கற்றுக் கொடுக்க வேண்டும்.  எந்த நிலையிலும் சோர்வும், அவநம்பிக்கையும் தங்களைத் தின்று விட இடம் தராது சமாளித்து நிற்கக் குழந்தைகளைப் பயிற்றுவிக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இளவயதிலேயே தள்ளப்படும் குழந்தைகளின் தவிப்புகளை அக்கறையோடு கேட்கும் காதுகள் வேண்டும் சமூகத்திற்கு. உடனே தலையிட்டு ஆற்றுப்படுத்தும் முன்னுரிமையும் நெருக்கத்தில் உள்ளோருக்கு உண்டு. பள்ளிகளில், கல்லூரிகளில் பயிலும் பெருகி வரும் தற்கொலைகள் உணர்வுள்ள ஒரு சமூகத்தை உலுக்க வேண்டாமா?

இல்லங்களில், பொது வெளியில், பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை சமூகம் எப்படி நடத்துகிறது என்பதை ஒரு மறுபரிசீலனை நடத்திக் கொள்ள வேண்டிய தினம் குழந்தைகள் தினம்.  வீடற்ற குழந்தைகள், வெளியே எப்படி எப்படியோ திரிய நேரும் குழந்தைகள், குழந்தைமை மறுக்கப்பட்டு வேலை செய்ய விதிக்கப்பட்ட குழந்தைகளுக்குமான தினம் தானே இது…..சமூகம் தன்னை மன்னித்துக் கொள்ள முடியாது என்று உணர்ந்து திருந்த வழி பார்க்க வேண்டிய தினம் இது.

வெறி பிடித்தலைவோர் சிலரது மோசமான செய்கைகளுக்கு இன்னதென்றே அறியாமல் உட்படுத்தப்பட்டு உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் சிதைக்கப்படுமுன் குழந்தைகளைத் தற்காத்துக் கொள்ளவைக்கும் பெரும் பொறுப்பும் சமூகத்திற்கு உண்டு.  

இளவயதில் உளச்சிதைவு புறக்காயத்தை விடப் பன்மடங்கு ஆழமானது, எளிதில் ஆறி விடாது. அவமதிப்புக்கும், புறக்கணிப்புக்கும் உள்ளாகும் குழந்தைகள் அந்தக் காயங்களை மறப்பதில்லை.  அதன் விளைவாக வெளிப்படும் எதிர்வினைகளில் அதிர்ச்சியுறும் சமூகம், நோய் முதல் நாடி அதைத் தணிக்க முற்படுவதில்லை. குழந்தைகள் தினம் நம்மைத் தகவமைத்துக் கொள்ள நினைவூட்டும் தினம்.

எல்லோரையும் போல் வாழ்ந்து மடியும் உரிமை எங்களுக்கு வேண்டும்’ என்று எழுதி வாசிக்கிறான், சக மாணவனைப் பறிகொடுத்துத் தான் குண்டு மழையில் தப்பித்த பாலஸ்தீனச் சிறுவன் ஒருவன். கல்வி நிலையங்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும் நடக்கிறது ஏகாதிபத்திய நிதி உதவியில் நடக்கும் இஸ்ரேலிய தாக்குதல். இராக்கில் எண்ணற்ற குழந்தைகள் மடிந்த போது, கிஞ்சிற்றும் வருத்தம் தெரிவிக்காத அப்போதைய அமெரிக்க செயலர் காண்டலீசா ரைஸ், ஒரு போர் நடக்கையில் ஒட்டுமொத்த சேதம் விளையத்தான் செய்யும் என்று திமிரோடு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்தத் திமிர்த்தனத்தின் நீட்சி, குழந்தைகளைப் பறிகொடுத்துவிட்டு அவர்களது பொம்மைகள் பரிதவிக்கும் இப்போதைய போர்க்களத்தின் புகைப்படங்களில் தெறிக்கிறது. அப்பாவிக் குழந்தைகள் கொல்லப்படும் உலகில் குழந்தைகள் தினத்தை யார் யாருக்காகக் கொண்டாடுவது….

ஆனாலும், ‘கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்த்துப் புதியதோர் உலகம் செய்யும்’ நம்பிக்கைகளோடு உறுதியாக இயங்க வேண்டிய சூழலில் பிறக்கிறது குழந்தைகள் தினம். எல்லோர்க்குமான உலகத்தில் உண்மையாகக் கொண்டாடப்படுவார்கள் குழந்தைகள். அப்படியான சமூகத்தைப் படைக்கும் உணர்வோடு கொண்டாடுவோம் குழந்தைகளையும், குழந்தைகள் தினத்தையும்!

-நன்றி தீக்கதிர்

2 comments

  1. குழந்தைகள் தின கட்டுரையில் சமூகத்திற்கான கடமைகளை அழகாக எடுத்துரைத்தமைக்கு ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். புதியதோர் உலகம் செய்ய குழந்தைகள் தினத்தை கொண்டாடுவோம்

Comment here...