பொதுவுடைமைக் காடும் போராடும் காக்கைகளும்: பாகம் 8

க.சிவசங்கர்

மனித சமூகம் தோன்றியது முதல் இன்று வரை பல்வேறு வகையான சமூக அமைப்பு முறைகளைக் கடந்து வந்துள்ளது. இந்த சமூக மாற்றங்களுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் “உற்பத்தி முறை” என்ற ஒன்று மட்டுமே அவற்றின் அடிப்படை அம்சமாக இருந்து வந்துள்ளது. இத்தகைய சமூக மாற்றங்களை ஒரு எளிய கதை வடிவில் விளக்கும் முயற்சியே இது.

வேலைப் பிரிவினையும், ஏற்றத்தாழ்வும்:

ஆலை சீரமைப்புப் பணிகள் அனைத்தும் முடிந்திருந்தது. ஆலையில் உற்பத்தியை எப்போது துவக்கலாம் என்பது குறித்து முடிவு செய்வதற்காக ஊழியர்களின் கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது பேசிய கரடியார், உற்பத்தி துவங்குவதற்கான அனைத்து தயாரிப்புப் பணிகளும் முடிந்து விட்டது எனவும், எனவே நாளையே நாம் உற்பத்தியைத் துவக்கலாம் என்றும் கூறியது. மேலும் ஆலையில் யார் யாருக்கு என்ன வேலை என்பது குறித்து கரடி விவரித்துக் கொண்டிருந்தது. ஏற்கனவே இருந்த படி நரிகளுக்கு காவல் காக்கும் பணியும், காக்கைகளுக்கு குச்சிகள் கொண்டு வரும் பணியும், இயந்திரங்களை இயக்கும் பணி  மான்களுக்கும், சந்தைக்கு சென்று வடைகளை விற்கும் பணி முயல்களுக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த அறிவிப்பை ஏற்க மறுத்த லெனி, இது போன்ற வேலைப் பிரிவினைகள் மீண்டும் நமக்குள் ஏற்றத்தாழ்வுகளையே உருவாக்கும் என்று உறுதியாக தெரிவித்தது. எனவே பிறப்பின் அடிப்படையிலான வேலைப்பிரிவினை என்பது இனியும் தொடரக் கூடாது. ஒவ்வொருவருக்கும் சில திறமைகள் மற்றும் விருப்பங்கள் என்பது இயல்பிலேயே இருக்கும். அந்த துறையில் அவர்களை ஈடுபடுத்தும் போது, மற்றவரை விட சிறப்பாக அவர்களால் செயல்பட முடியும் என்று தன் வாதத்தை முன்வைத்தது. மேலும் ஆலை பாட்டியின் கட்டுப்பாட்டில் இருந்த போது, காட்டின் பெரும்பாலானவர்களைச் சுரண்டி சொத்துக்கள் குவிக்கப்பட்டது.

அதனைப் பாதுகாத்திடும் வகையிலேயே ஒரு பெரிய படையை காவலுக்கு என்று பாட்டி உருவாக்கி வைத்திருந்தார். இப்போது நிலைமை அப்படியல்ல. இங்கு யார் உழைப்பும் சுரண்டப்பட போவதில்லை. எனவே அது போன்ற பாதுகாப்புப் படை எதுவும் நமக்கு தேவையில்லை. பாதுகாப்புப் படையில் பணியாற்றிய நரிகள் அனைவரையும் நாம் உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் நம்மால் முன்பைவிட உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும் என்று கூறியது லெனி. கரடியார் உள்ளிட்ட கூட்டத்தில் இருந்த அனைவரும் இதனை ஏற்றனர். நாளையே உற்பத்தியை துவங்கலாம் என்று கரடியார் ஆலோசனை கூற, அனைவரும் ஒருமனதாக கைகளை உயர்த்தி உற்சாகக் கோஷமிட்டனர்.

உற்பத்தியின் பலன் உழைப்பவருக்கே:

கூட்டம் முடிந்ததாக கரடி அறிவித்தது. அனைவரும் லெனியைச் சூழ்ந்து கொள்ள, “லெனி நேற்று நமது வகுப்பைப் பாதியிலேயே முடிச்சிட்டோம். லாபத்தின் தோற்றம், உபரி மதிப்பு பத்தியெல்லாம் புரிஞ்சிக்கிட்டோம். ஆனாஒரே ஒரு சந்தேகம் மட்டும் இருந்துட்டே இருக்கு. நாம் ஆலையில் வேலை செஞ்சத்துக்கு கூலி கிடைத்த மாதிரி, பாட்டியும் ஆலையில் இருந்தாங்க தானே. அப்போ அவங்களுக்கும் ஏதாவது ஒரு பங்கு கொடுக்கப்படணும் தானே?”என்று வேகவேகமாக கேட்டது நரி.

“அப்படி இல்லை நரியாரே. வடை உற்பத்தியில் செலுத்தப்படும் உயிருள்ள உழைப்பு முழுவதும் உற்பத்தியின் போது உழைப்பைச் செலுத்திய நம்ம 100 பேரோட உழைப்பு. அதனால அது நம்ம நூறு பேருக்கும் சமமா பிரித்துக் கொடுக்கப்படனும். இந்த உற்பத்தி நிகழ்முறையில் பாட்டி ஏதாவது வேலை செஞ்சாங்களா?” என்று திருப்பிக் கேட்டது லெனி.

“ம்ஹம். ஒன்னும் கிடையாது. கல்லா பெட்டியில் உக்காந்து கொண்டு எல்லாரையும் அதட்டுனது தவிர வேற ஒன்னையும் பாட்டி செஞ்சு பார்த்தது இல்ல” என்று சொன்னது ஜோ. “அவ்ளோ தூரம் லாம் யோசிக்க வேண்டாம் ஜோ. நாளையே நாம  உற்பத்தியை துவங்கப் போறோம். நாம நூறு பேரும் இங்க இருக்கோம். இதுல யாராச்சும் ஒரு நாலஞ்சு பேரு ஒரு நாளைக்கு வேலைக்கு வரலன்னா என்ன நடக்கும்?” என்று கேட்டது லெனி. “தினமும் சராசரியா உற்பத்தி ஆகுற 2000 வடைகளில் கொஞ்சம் குறையும் என்று” சொன்னது நரி. “ரொம்ப சரியாச் சொன்னீங்க நரியாரே. நாம நூறு பேரில் ஒருவர் இல்லன்னாலும் உற்பத்தியில் ஒரு சிறிய அளவு குறையும். அதே மாதிரி கச்சாப் பொருள் உள்ளிட்ட உயிரற்ற உழைப்புல ஏதாவது ஒன்னு குறைஞ்சாலும் உற்பத்தியில் ஒரு பாதிப்பு வரும். இப்போ அப்படியே பாட்டி விஷயத்துக்கு வருவோம். இதோ இப்ப பாட்டி இங்க இல்ல. பாட்டி இல்லாததால நம்ம உற்பத்தியில் ஏதாவது மாற்றம் வரப் போகுதா?” என்று கேள்வி எழுப்பியது லெனி.

“நிச்சயம் இல்லை லெனி. ஒரு பாதிப்பும் வராது. அதே 2000 வடைகளை நம்மால உற்பத்தி செய்ய முடியும்” என்று கரடி சொல்ல, ம்ம்…அது தான். அப்போ பாட்டிக்கு பங்கு தேவையில்லை ன்னு ஏன் நான் சொன்னேன் என்று இப்ப புரியுதா? என்று சொல்லி முடித்தது லெனி. அனைவரும் புரிந்ததாக தலையை ஆட்டினர். கூட்டத்தில் ஒரு கை மட்டும் உயர்ந்தது. “ம் யாருப்பா அது? முன்னாடி வந்து கேளுங்க” என்றது லெனி.

முன்னே வந்தது ஜோ. “ஓ நீதானா ஜோ. கேளு உன் சந்தேகத்தை” என்றது லெனி. “உற்பத்தியில் பாட்டி எந்த உழைப்பையும் செலுத்தலன்னு சொல்றது சரி தான். ஆனா இந்த வடை உற்பத்தி செய்யுற இயந்திரம், இந்த தொழிற்சாலை எல்லாம் பாட்டி உருவாக்கியது தானே? இதைத்தானே நாம உயிரற்ற உழைப்புன்னு சொல்றோம். அந்த வகையில் வருவாயில் பாட்டிக்கு ஒரு பங்கு கொடுக்கணும் தானே?” என்று தன் சந்தேகத்தை முன்வைத்தது ஜோ.

உபரி மதிப்பும், மூலதனத் திரட்சியும்:

“ரொம்ப சரியான சந்தேகம் தான் ஜோ. சரி இதை நான் உனக்கு வேற ஒரு வழியில் சொல்றேன். புரிஞ்சிக்க முடியுதான்னு பாரு. இப்ப நாம உற்பத்தியைத் துவங்கப் போறோம். இயந்திரங்கள் இயங்கப் போகுது. நாம நூறு பேரும் நம்ம உழைப்ப கொடுக்கப் போறோம். கச்சாப்பொருள், உற்பத்திக் கருவி உள்ளிட்ட உயிரற்ற உழைப்பின் மதிப்பும் சேர்ப்போகுது. ஒரு நாளைக்கு 2000 வடைகள் உற்பத்தியாகப் போகுது. 10000 ரூபாய் வருவாய் கிடைக்கப் போகுது. அதுல 4000 ரூபாய் செலவு (உயிரற்ற உழைப்பின் மதிப்பு) போக 6000 ரூபாய் மிச்சம் இருக்கும் இல்லையா. இப்போ ஒரு பேச்சுக்கு இப்படி வச்சுக்கலாம். இப்ப நான் தான் இங்க முதலாளியா இருக்கேன் ன்னு நினைச்சிக்கோ. பாட்டி மாதிரியே நானும் உங்க எல்லாருக்கும் ஆளுக்கு 20 ரூபாய் என்று 2000 ரூபாயை கொடுத்துட்டேன் ன்னு வை. மீதி என்கிட்ட 4000 ரூபாய் இருக்கும். இந்த 4000 ரூபாயில் ஒரு 3000 ரூபாயை நான் எனக்கும், என் குடும்பத்தின் சொகுசு வாழ்க்கைக்கும் பயன்படுதிக்கறேன். மீதி 1000 ரூபாயை இந்த தொழில்லயே மறு முதலீடு செய்றேன்.இதே போல ஒவ்வொரு நாளும் 1000 ரூபாய் மறுமுதலீடு. அப்போ என்ன நடக்கும்? என்னோட தொழிலோட வீச்சு இன்னும் பெருசாகும் இல்லையா. நான் இன்னும் கொஞ்ச வருஷத்துல இதை விட பெரிய தொழிற்சாலையை கட்டி இன்னும் அதிநவீன வடை இயந்திரங்கள (உயிரற்ற உழைப்பு) வாங்கி, இன்னும் நிறைய பேரை வேலைக்கு எடுத்து, ஒரு பெரு முதலாளியா மாறியிருப்பேன்.

எனக்கு வயசாகியிருக்கும். என் பையனை எல்லா சொத்துக்களுக்கும் வாரிசாக அறிவிச்சு அவனை முதலாளியா ஆக்கியிருப்பேன். அதே நேரம் உங்க பசங்க நீங்க பாக்குற இதே வேலைய என் பையன்கிட்ட பார்ப்பாங்க. அவங்கள பொறுத்தவரை அந்த தொழிற்சாலையை என் பையன், அதாவது அவங்களோட முதலாளி கஷ்டப்பட்டு முதலீடு செஞ்சு கட்டினது, அதனால இந்த லாபம் முழுக்க அவருக்கு போறது சரின்னு தான் நினைப்பாங்க.  அந்த தொழிற்சாலையை கட்டியது அத்தனையுமே நானும் என் பையனும் தினமும் உங்களுக்கு கொடுக்க வேண்டிய கூலியை லாபம் என்ற பெயரில் பிடுங்கி சேர்த்து வச்ச பணம் தான் என்பது அவங்களுக்கு தெரிய வாய்ப்பே கிடையாது இல்லையா. இப்ப இதை அப்படியே பாட்டியோட கடந்த காலத்தோட தொடர்புபடுத்தி பாருங்க. பாட்டி எப்படி இந்த தொழிற்சாலையைக் கட்டினாங்க, இவ்வளவு முதலீடு எப்படி கிடைச்சுது ன்னு புரியும்.என்ன ஜோ, இப்ப சொல்லு… பாட்டிக்கு பங்கு கொடுக்கணுமா?” என்று லெனி கேட்க, “அடிப்பாவி பாட்டி. நீ சேர்த்தது பூராமே எங்க அப்பா தாத்தாக்களிடம் இருந்து புடுங்குன பணம் தானா?” என்று சீரியது ஜோ முயல். சரி சரி. எல்லாரும் நேரத்தோட வீட்டுக்கு போய் தூங்குங்க. நாளைக்கு முதல் நாள் வேலை. காலையில்சீக்கிரமா வரணும் என்று லெனி கூற, அனைவரும் உற்சாகமாக விடைபெற்றனர். ஜோ முயல் மட்டும் லெனி அருகே வந்து, “லெனி அண்ணா. கொஞ்சம் திரும்புங்க” என்று சொல்ல, திரும்பிய லெனியின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, வரேன் அண்ணா என்று ஓடியது. புன்னகைத்தவாறு வீட்டிற்கு புறப்பட்டது லெனி.

–  தொடரும்…

Comment here...