முதுபெரும் தோழர் சங்கரய்யா காலமானார்

தலையங்கம்

சுதந்திர போராட்ட வீரரும், பொது உடமைவாதியும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை சிறந்த தலைவருமான தோழர் சங்கரய்யா அவர்கள் தனது 102 வது வயதில் இன்று காலை 9.30 மணியளவில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறோம்.

தோழர்சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறு என்பது ஒரு தனிமனிதரின் வரலாறு மட்டுமல்ல, தமிழக தொழிலாளர் இயக்க வரலாற்றின் ஒரு பகுதியாகும். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் போது தனது படிப்பை துறந்து நாட்டின் விடுதலைப் போராட்டப் பாதையை தனது வாழ்க்கை பாதையாக தேர்வு செய்தார். தனது வாழ்நாளில் சுமார் 8 ஆண்டுகள் சிறை வாழ்க்கை மற்றும் மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டார். மதுரை சதிவழக்கில் கைது செய்யப்பட்ட தோழர் சங்கரய்யா நாட்டுக்கு விடுதலை கிடைத்த போதுதான், 1947 ஆகஸ்ட் 14ல்சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

மார்க்ஸிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர், கட்டுப்பாட்டுக் குழு தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் அர்ப்பணிப்பு உணர்வோடு நிறைவேற்றினார். தமிழகத்தின் தலைசிறந்த எழுச்சிப் பேச்சாளர். அவரின் சிம்மக்குரலால் சகல பகுதி மக்களுக்கும் போராடும் உத்வேகத்தை ஏற்படுத்தியவர்.

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறை ஆங்கிலேய அரசாங்கத்தால் ஏவிவிடப்பட்டது. இதனை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பட்டாபி சீத்தாராமையா உடன் மாணவர் தலைவர் சங்கரய்யாவும் உரை நிகழ்த்தினார்.

1947 செப்டம்பர் 18 அன்று ஆசிரியை நவமணி அம்மையாரை சாதி மத மறுப்பு திருமணம் செய்து கொண்டார். 1967, 1977, 80 ஆகிய ஆண்டுகளில் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக செயல்பட்டார்.

மாணவர் சங்கத்தின் முதல் மாநில செயலாளர், விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர், பின்பு மாநில தலைவர்,  மத்திய கிசான் குழு உறுப்பினர், 1986 இல் அகில இந்திய பொதுச் செயலாளர், பின்னர் தலைவர் ஆகிய பல பொறுப்புகளில்  செயல்பட்டு வந்துள்ளார்.

இந்திய வங்கி ஊழியர் அசோயேசன் – தமிழ்நாடு ( IBEA – TN) குறிச்சியில் நடத்தி வரும் பள்ளி அவர் கரங்களால்தான் திறக்கப்பட்டது.

தீண்டாமைக் கொடுமையை ஒழித்திடவும், ஆண்-பெண் சமத்துவத்திற்காகவும் வாழ்நாள் முழுவதும் குரல் எழுப்பியவர். தமிழக அரசு அவருக்கு தகைசால் தமிழர் விருது அளித்து பெருமைப்படுத்தியது.

தலித் மக்கள் மீதான தாக்குதலை தடுத்திட, தீண்டாமை கொடுமையை ஒழித்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியதுடன், தமிழக அரசு சார்பில் 1997 செப்.1 இல் மதுரையில் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை நடத்த வைத்ததில் மிக முக்கியமான பங்கு உண்டு. நிலச் சீர்திருத்தம் செய்வதன் மூலமாக தீண்டாமை முற்றாக ஒழிக்கப்படும் என எடுத்துரைத்ததோடு, அனைவருக்கும் ஒரே சுடுகாடு என்ற கோரிக்கையை அமலாக்க வலியுறுத்தினார்.

வாழ்நாள் முழுவதும் எளிமையோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் தொழிலாளி வர்க்க விடுதலைக்காக போராடிய தோழர் சங்கரய்யா அவர்களின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடமாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகின்றோம். தோழர் சங்கரய்யா அவர்களுக்கு செவ்வணக்கம்.

2 comments

  1. தோழர் சங்கரய்யா அவர்களுக்கு செவ்வணக்கம். அவரின் மறைவு ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்துக்கும் ஒரு பெரிய இழப்பு. அவர் காட்டிய பாதையில் பயணிப்பதே நாம் அவருக்கு செலுத்தும் வீரவணக்கமாக இருக்கும்

  2. Com.Sankaraiah should’ve been honoured with doctorate. It’s really unfortunate. The people behind are biting nails now. They are exposed.

Comment here...