பொதுவுடைமைக் காடும் போராடும் காக்கைகளும் பாகம் 12

க. சிவசங்கர்

மனித சமூகம் தோன்றியது முதல் இன்று வரை பல்வேறு வகையான சமூக அமைப்பு முறைகளைக் கடந்து வந்துள்ளது. இந்த சமூக மாற்றங்களுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் “உற்பத்தி முறை” என்ற ஒன்று மட்டுமே அவற்றின் அடிப்படை அம்சமாக இருந்து வந்துள்ளது. இத்தகைய சமூக மாற்றங்களை ஒரு எளிய கதை வடிவில் விளக்கும் முயற்சியே இது.

லெனியும் ஜோவும் சாப்பிட்டு முடிப்பதற்கும், லெனியின் வீட்டிற்கு புரட்சிப்படையின் தலைவர் நரியார் தலைமையிலான குழுவினர் வருவதற்கும் சரியாய் இருந்தது. அனைவரையும் வரவேற்று அமரச் சொன்னது லெனி. “சொல்லுங்க நரியாரே. எதுவும் முக்கிய விஷயமா?” என்று லெனி கேட்க, “ஒன்னுமில்லை லெனி. நமது பள்ளியில் கொஞ்சம் வேலைகள் இருந்துச்சு. அதை முடிச்சிட்டு போகிற வழியில அப்படியே உன்னைப் பார்த்துட்டு போலாம் ன்னு வந்தோம்” என்றது நரி. “நல்லது நரியாரே. பள்ளிப் பணிகள் எல்லாம் சிறப்பு தானே?” என்று லெனி கேட்க, “நல்லா போய்கிட்டு இருக்கு லெனி. பள்ளிப்படிப்பை முடிக்க இருக்கும் பலர் தங்களது உயர் கல்விகளையும், ஆராய்ச்சி படிப்புகளையும் தொடர நம்மிடம் கட்டமைப்பு எதுவும் இல்லை. எனவே அவற்றை உருவாக்குவதற்கான தேவை இருக்கு” என்று நரி சொல்லியது. “நல்ல யோசனை நரியாரே. அறிவியல் வளர்ச்சி ஒன்றே நமது சமூகத்தை அடுத்தகட்டத்திற்கு உயர்த்தக் கூடியது. எனவே உடனே அதற்கான வேலைகளைத் துவக்குங்கள்” என்று சட்டென சொல்லியது லெனி. “நிச்சயம் லெனி. நாங்க கிளம்பறோம்” என்று விடை பெற்றனர் புரட்சிப்படையினர். அனைத்தையும் தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தது ஜோ.

இயக்கவியல்:

“அப்பறம் ஜோ. நாம் எதில் விட்டோம்” என்று லெனி கேட்க, “பொருள்முதல் வாதம் பற்றி பார்த்து முடிச்சிட்டோம் லெனி அண்ணா. அடுத்ததா இயக்கவியல் பத்தி பாக்கணும்” என்று ஜோ சொல்லியது. “ம்ம் சரி ஜோ. இதுவரை நாம பார்த்ததை விட இப்போது நாம் பார்க்க இருக்கிற விஷயங்கள் புரிஞ்சிக்க கொஞ்சம் கஷ்டமா இருப்பது போல தோணும். ஆனா கொஞ்சம் ஆழ்ந்து கவனிச்சனா நிச்சயம் புரிஞ்சிக்கலாம்” என்று சொல்லவிட்டு இயக்கவியலுக்குள் நுழைந்தது லெனி. “பொருட்களே இந்த உலகின் மூலம் ன்னு பார்த்தோம் இல்லையா. அந்த பொருட்கள் அனைத்துமே ஒவ்வொரு நொடிப்பொழுதும் தொடர்ந்து இயங்கிக் கொண்டும், அதன் மூலம் மாறிக்கொண்டும் தான் இருக்கும். மேலும் அந்த இயக்கம் ஒரு சில விதிகளுக்கு உட்பட்டுத் தான் இருக்கும். அதைப் பத்தி தெரிஞ்சிக்கிறது தான் இயக்கவியல். இப்ப உன்கிட்ட ஒரு கேள்வி. உனக்கு தெரிஞ்ச இயக்கத்தில் இருக்கும் பொருட்கள் பத்தி சொல்லு பாக்கலாம்” என்று லெனி கேட்க, “எவ்ளவோ இருக்கே லெனி அண்ணா. இதோ இங்கே எரிந்து கொண்டிருக்கும் மின் விளக்கு, நம்ம ஆலையில் இயங்கும் இயந்திரங்கள்,  இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நான் ஓட்டிக்கொண்டு வந்த சைக்கிள் அப்படின்னு சொலிட்டே போகலாமே” என்று பதில் அளித்தது ஜோ முயல்.

“இதுல தான் நிறைய பேர் தப்பு பண்றாங்க. ஒரு பொருளை ஒரு புற ஆற்றல் மூலம் இயங்க வைத்து அதை வெளியில் இருந்து பார்க்கும் போது கண்களுக்கு தெரிகின்ற இயக்கம் என்பது யந்திர வகைப்பட்ட இயக்கம். அவை மட்டுமே இயக்கம் அல்ல. எந்த ஒரு பொருளுக்கும் ஒரு சுயஇயக்கச் சக்தி உள்ளது. அதன் மூலம் எந்த ஒரு புற ஆற்றலும் கொடுக்காமல் ஒரு பொருளை வைத்து இருந்தாலும் அது இயங்கிக் கொண்டே தான் இருக்கும்” என்று லெனி விளக்க, “அது எப்படி லெனி அண்ணா? சும்மா இருக்குற பொருள் எப்படி இயங்கும்?” என்று குழப்படத்துடன் கேட்டது ஜோ.

“ஒரு எளிய உதாரணத்தோட சொல்றேன். புரியுதா பாரு என்ற லெனி, வீட்டில் இருந்து நீ ஓட்டிட்டு வந்து இங்க நிப்பாட்டி வச்சுருக்கிற இந்த சைக்கிள் இப்ப இங்க சும்மா நிக்குதுன்னு தானே நீ நினைக்குற. ஆனா இது இப்பயும் இயக்கத்தில் இருக்கு என்பது தான் உண்மை” என்று லெனி சொல்ல, “என்ன லெனி அண்ணா சொல்றீங்க? நிப்பாட்டி வச்சுருக்கிற சைக்கிள் எப்படி இயங்கும்?” என்றது ஜோ.  “சரி…இந்த சைக்கிள ஒரு பத்து நாளைக்கு எடுக்காம இங்கேயே நிப்பாட்டி விடு. என்ன ஆகும்? அதோட டயர்ல இருக்குற காற்று குறைஞ்சிடும் இல்லையா. அதே சைக்கிளை இன்னும் ஒரு ரெண்டு வருஷத்துக்கு அப்டியே விட்டுட்டனா என்ன ஆகும்? துரு ஏறி சைக்கிள் முழுதும் காவி கலருக்கு மாறிடும். அதையே ஒரு நாற்பது, ஐம்பது வருஷம் அப்படியே விட்டுட்டனா முழுசா அரிச்சி ஓட்டை விழுந்து ஒன்னுமே இல்லாம போய்டும். அப்போ இங்க என்ன நடக்குதுன்னு புரியுதா? எல்லாப் பொருட்களுமே, எப்பவுமே இயங்கிக் கொண்டும் அதன் மூலம் மாறிக்கொண்டும் தான் இருக்கு.

ஒவ்வொரு பொருளின் தன்மையைப் பொறுத்து அதன் மாற்றத்தின் வேகம் மாறுபடும். அவ்வளவு தான். ஒரு பழம் மக்கி மண்ணோடு மண்ணாகப் போக அஞ்சு நாள் ஆச்சுன்னா, ஒரு சைக்கிள் அதே மாதிரி மக்கிப் போக ஐம்பது வருஷம் ஆகுது. இது தான் வித்தியாசம். இதை இந்த உலகில் உள்ள எந்த பொருளுக்கும் நீ பொருத்திப் பாத்துக்கலாம். இங்க நீ முக்கியமா கவனிக்க வேண்டியது, எந்த ஒரு பொருளும் அழிஞ்சி போகல. இன்னொரு பொருளா மாறிப்போகுது. அவ்வளவு தான். எந்த ஒரு பொருளையும் ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்ற மட்டுமே முடியும். இது இயக்கவியலின் முக்கியமான விதி” என்று விளக்கியது லெனி. “இது வரைக்கும் தெரியாத நிறைய விஷயங்களைப் பற்றி புரிஞ்சிக்க முடியுது. இன்னும் மிச்சத்தையும் சொல்லுங்க லெனி அண்ணா” என்று ஆர்வமானது ஜோ.

சுழலேணி வகை மேல்நோக்கிய வளர்ச்சி:

அடுத்த விதிகளைப் பற்றி விளக்கத் துவங்கியது லெனி. “இவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கும் பொருட்கள் எல்லாமே ஒரு சங்கிலிப் பிணைப்பு மாதிரி ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியான மாறுதல்களுக்கு உட்பட்டே நடக்குது என்பதையும் நாம் கவனத்தில் வச்சுக்கணும். அதே நேரம் ஒவ்வொரு கட்டத்தில் ஏற்படும் மாறுதல்களும் முந்தைய கட்டத்தை விட முன்னேறிய கட்டமாகவே அமையும். இதை மார்க்சியத்தில் சுழலேணி வகை வளர்ச்சி ன்னு சொல்றோம்” என்றது லெனி. “அது என்னது லெனி அண்ணா சுழலேனி வளர்ச்சி?” ன்னு ஜோ கேட்க, “சுழலேனி என்பது ஓரிடத்தில் துவங்கி சுற்றி மீண்டும் அதே இடத்திற்கு வருவது அல்ல. மாறாக ஒவ்வொரு சுற்றின் முடிவிலும்  மேல் நோக்கி நகர்ந்து முன்னேறுவது. பொருட்களின் இயக்கமும் அப்படித் தான். ஒரு நிலைக்கும் அடுத்த நிலைக்கும் ஒரு முன்னேற்றகரமான வளர்ச்சி இருக்கும்” என்று லெனி சொல்ல, “கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்க லெனி அண்ணா” என்றது ஜோ.

“சரி அதோ இருக்குதே அந்த ஆப்பிள் பழத்தை எடுத்துட்டு வா” என்று லெனி சொல்ல, ஒரு குழப்பத்துடன் ஆப்பிளை எடுத்து வந்தது ஜோ. “இந்த ஆப்பிள் பழமாவதற்கு முன் என்னவா இருந்திருக்கும்? மரத்தில் பூவாகி, பிஞ்சாகி, காயாகி அதற்குப் பிறகு இப்போ இருக்கற மாதிரி ஆப்பிள் பழமா மாறியிருக்கும் இல்லையா. அப்போ ஒரு ஆப்பிள் மரத்துல இருந்து ஆப்பிள் பழம் வந்திருக்குன்னு தெரியுது. அப்படின்னா அந்த ஆப்பிள் மரம் எங்கிருந்து வந்தது? என்று லெனி கேட்க, “இது மாதிரி இன்னொரு ஆப்பிள் பழத்துல இருந்த விதை மூலமே வந்திருக்கும்” என்று சட்டென பதிலுரைத்தது ஜோ. “ம்ம் சரியாச் சொன்ன. இங்க நாம முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா ஒரு விதையில் இருந்து ஒரு மரம் வருது. ஆனா அந்த ஒரு மரத்தில் இருந்து ஒரு ஆப்பிள் பழம் மட்டும் வருவது இல்லை. மாறாக எண்ணற்ற பழங்கள் வருது. இது தான் சுழலேணி வகையான வளர்ச்சி” என்று சொன்னது லெனி.

“இதை அப்படியே நமது சமூக அமைப்பிலும் பொறுத்திப் பார்க்கலாம். ஒரு காலத்தில் அடிமையுடமை சமூகத்தில் எவ்வித உரிமைகளும் அற்று நமது முன்னோர்கள் அடிமைகளாக வாழ்ந்து வந்தனர். அதன்பிறகான முதலாளித்துவ சமூகத்தில் ஒருசில உரிமைகள் கிடைத்தன. அந்த வகையில் அது முந்தைய சமூகத்தை விட ஒரு முன்னேறிய கட்டமாக இருந்தது. அதற்குப்பிறகு இப்போது நாம் எட்டியுள்ள சோசலிச சமூகம் தனது முந்தைய சமூக அமைப்பான முதலாளித்துவ சமூக அமைப்பைக் காட்டிலும் பல வகைகளில் முன்னேறிய, வளர்ச்சியடைந்த சமூகமாக உள்ளது. இதன் பிறகு நாம் எதிர்பார்க்கும் கம்யூனிச சமூகம் என்பது இதனிலும் மேலான, அனைத்து வகையிலும் மேம்பட்ட சமூகமாக இருக்கும்” என்று விளக்கியது லெனி.

முரண்பாடுகளே மாற்றங்களின் அடிப்படை:

“எல்லா பொருட்களும் தொடர்ச்சியா இயங்குது, அதனால மாறுதுன்னு புரியுது லெனி அண்ணா. ஆனால் அது எவ்வாறு அல்லது எதனால் இயங்குதுன்னு சொல்ல முடியுமா?” என்று கேட்டது ஜோ. “நல்ல கேள்வி தான் ஜோ. சொல்றேன் கேட்டுக்கோ. எந்த ஒரு பொருளிலும் இரண்டு விதமான சக்திகள் இருக்கும். அந்த இரண்டு சக்திகளும் ஒன்றையொன்று எதிர்த்தும், அதே நேரம் ஒரே பொருளில் ஒன்றையொன்று சார்ந்தும் இயங்கும். இதையே பொருட்களின் முரண்பாடு என்கிறோம். இந்த முரண்பாடு தான் பொருட்களில் உருவாகும் மாற்றங்களுக்கான அடிப்படை. உதாரணத்திற்கு ஒரு அணுவில் நேர் மின்னோட்டமும், எதிர் மின்னூட்டமும் இருப்பதையும், ஒரு காந்தத் துகளில் வடதுருவமும், தென் துருவமும் இருப்பதையும் பார்க்கலாம்.

இதையும் அப்படியே சமூகத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம். ஒரு சமூகத்தில் உற்பத்தி என்பது சமூகமயமாக்கப்பட்டு, அதே நேரம் அவற்றின் பலன்கள் ஒரு சில தனி நபர்களிடம் சென்று சேர்வது ஒரு முரண்பாடான அம்சமே. இன்னும் ஆழ்ந்து கவனித்தால் ஒரே சமூகத்தில் சுரண்டும் முதலாளி வர்க்கமும், அதற்கு நேர் எதிரான சுரண்டப்படும் பாட்டாளி வர்க்கமும் உள்ளன. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு எதிர் எதிரான தன்மையில் இருந்தாலும் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே இயங்க முடியும். அதே சமயம் இந்த முரண்பட்டால் இரண்டு வர்க்கங்களுக்கும் இடையே தொடர்ச்சியான போராட்டங்ளும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். முரண்பாடுகளால் ஏற்படும் இத்தகைய போராட்டங்களே சமூகத்தை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி எடுத்துச் செல்லும்” என்று விளக்கிய லெனி, ஜோவைப் பார்த்து, “என்ன புரிஞ்சிதா ஜோ?” என்றது.

“புரிஞ்சது லெனி அண்ணா. ஒரே ஒரு சந்தேகம் மட்டும். பொருட்கள் தொடர்ச்சியாக ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறுவது போல, சமூக அமைப்பும் மாறுகிறது. எனில் நாம் உயர்வாக நினைக்கும் கம்யூனிச சமூக அமைப்பு வந்த பிறகு, மீண்டும் மாற்றம் ஏற்பட்டு இன்னொரு சமூக அமைப்பு உருவாகுமா?” என்றது ஜோ. “நல்ல கேள்வி தான் ஜோ. பொருட்களில் மாற்றங்கள் நடைபெறுவதற்கு அடிப்படையான காரணம் முரண்பாடு என்று பார்த்தோம் இல்லையா. பொருட்களில் அந்த முரண்பாடுகள் இருக்கும் வரை மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கும். இதற்கு ஒரு முடிவு என்பது இல்லை.

அதே போல் சமூகத்திலும் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகளின் காரணமாகவே மாற்றங்கள் ஏற்படுகின்றன. அடிமையுடமை சமூகத்தில் ஆரம்பம் ஆன இந்த முரண்பாடுகள் தொடர்ச்சியாக வளர்ந்து முதலாளித்துவ சமூக அமைப்பில் கூர்மையடைந்தது. அதன் பிறகு சோசலிச சமூக அமைப்பில் குறையத் துவங்கும் இந்த முரண்பாடுகள், கம்யூனிச சமூகத்தில் மிக மிக குறையும் அல்லது இல்லாமலே போகும். முரண்பாடுகள் இல்லாத போது மாற்றங்களும் இருக்காது இல்லையா. எனவே முரண்பாடுகள் அற்ற கம்யூனிச சமூக அமைப்பு பல லட்சம் ஆண்டுகள் வரை கூட அதே நிலையில் தொடர்வதற்கு வாய்ப்புகள் அதிகம்” என்று லெனி விளக்க, “அருமையான விளக்கம் லெனி அண்ணா” என்று குதூகலித்தது ஜோ.

“சரி ஜோ. இயக்கவியலின் பெரும்பகுதியை முடிச்சுட்டோம். இன்னும் ஒருசில பகுதிகள் மட்டும் இருக்கு. அதை இன்னொரு நாள் பார்ப்போம். இப்பயே நேரம் ஆகிட்டு. இருட்ட அரம்பிச்சிட்டு. உங்க வீட்டுல தேடுவாங்க. நீ கிளம்பு. காலையில ஆலையில் சந்திப்போம்” என்று லெனி கூற, “சரி லெனி அண்ணா நான் கிளம்புறேன்” என்றவாறு தனது சைக்கிளில் பறந்தது ஜோ.

தொடரும்

One comment

  1. மார்க்சிய சிந்தனைகள் எளிய முறையில் வாசகர்களுக்கு தரப்படுகிறது!
    வாழ்த்துக்கள்!

Comment here...