பழைய ஓய்வூதிய திட்டம்: மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு  தடை

க.சிவசங்கர்

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக சமீபத்தில் பாராளுமன்றத்தில்  கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு ஒன்றிய அரசின் நிதித்துறை அமைச்சகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட பதிலும் நாட்டின் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை  ஏற்படுத்தியுள்ளது. அதில் கீழ்க்காணும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன:

இதுவரை எந்தெந்த மாநில அரசாங்கங்கள் தங்கள் மாநிலங்களில் உள்ள அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளன?

எந்தெந்த மாநில அரசாங்கங்கள் ஒன்றிய அரசிடம் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தங்கள் மாநில தொழிலாளர்களின் பணத்தை திருப்பித் தர கேட்டுள்ளன?

அவ்வாறு பணத்தை திருப்பிக் கேட்கும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு என்ன பதில் வழங்கியுள்ளது?

ஒன்றிய அரசிடம் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை திருப்பிக் கொண்டு வரும் திட்டம் உள்ளதா?

இந்த கேள்விகளுக்கு ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் பின்வரும்  பதில்களைத் தெரிவித்துள்ளது:

பஞ்சாப் மாநில அரசு கடந்த நவம்பர் 18ம் தேதி அன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தங்களுடைய  அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில அரசாங்கங்கள் தங்கள் மாநிலங்களில் உள்ள அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர முடிவு செய்திருப்பதாகவும், தங்கள் ஊழியர்களிடமிருந்து புதிய ஓய்வூதிய திட்டத்தின் அடிப்படையில் பிடித்தம் செய்யப்பட்டுள்ள பணத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத்திடம் (PFRDA) கேட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்திற்காக பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை திருப்பிக் கொடுக்க ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை சட்டத்தில் இடமில்லாத காரணத்தால் அந்த பணத்தை மாநில அரசுகளிடம் திருப்பிக் கொடுக்க முடியாது.

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கான திட்டம் எதுவும் இல்லை.

ஒரு தொழிலாளி தன் உடலிலும், உள்ளத்திலும் வலு உள்ள வரை, தன் கரத்தாலும், கருத்தாலும் உழைத்து ஓய்ந்த பிறகு, தன்னுடைய முதுமையில் யார் ஒருவரையும் சார்ந்திராமல் சுய கௌரவத்துடன் வாழ்வதற்கு வழிவகை செய்யும் சமூக பாதுகாப்புத் திட்டமே ஓய்வூதியமாகும்.

சோவியத் யூனியனின் முன் முயற்சி

இருபதாம் நூற்றாண்டில் சோவியத் ரஷ்யாவில் அமைந்த சோசலிச அரசின் மூலம் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டம் உலகெங்கும் இருந்த தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து பிற நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் மத்தியிலும் இந்த கோரிக்கை வலுவாக எழுப்பப்பட்டது. இதன் அழுத்தம் காரணமாக  முதலாளித்துவ அரசுகள் தங்கள் நாட்டு தொழிலாளிகளுக்கும்  ஓய்வூதிய திட்டங்களை அமல்படுத்தத் துவங்கின. பிறகு இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் சோவியத் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பின்னடைவாலும், உலகம் முழுவதும் முன்னுக்கு வந்த வலதுசாரி கருத்தியல்களாலும் ஓய்வூதிய திட்டங்கள் யாவும் தேவையற்ற செலவினங்களாக கருதப்பட்டு அதனை  முடிவிற்கு கொண்டுவர பல்வேறு அரசுகள் முயலுகின்றன.

புதிய ஓய்வூதிய திட்டம் திணிக்கப்பட்டது

அந்த வகையிலேயே 21 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவில் பழைய ஓய்வூதிய திட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு எவ்வித உத்தரவாதமும் இல்லாத புதிய ஓய்வூதிய திட்டம் திணிக்கப்பட்டது. நம் நாட்டில் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கும் இந்த திட்டத்தில் உள்ள பாதகமான அம்சங்களை எதார்த்தத்தில்  புரிந்து கொண்ட தொழிலாளர்கள் தொடர்ந்து இந்த திட்டத்திற்கு எதிராக பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவற்றின் மூலம் இது தொழிலாளர்களின் முதன்மை பிரச்சனையாக உருமாறி அரசாங்கங்களுக்கு நெருக்கடிகள்  ஏற்படுத்தத் துவங்கின.

மாநில அரசுகளின் முன் முயற்சி

இதன் நீட்சியாகவே கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டிலேயே முதல் மாநிலமாக ராஜஸ்தான் மாநில அரசு தங்கள் மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கை மற்ற மாநிலங்களிலும் முன்னுக்கு வந்து தொடர்ச்சியாக சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில அரசுகளும் இந்த அறிவிப்புகளைச் செய்துள்ளன. மேலும் இந்த மாதம் நடந்து முடிந்த இமாச்சலப் பிரதேசம் மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக உறுதியளித்து. தற்போது ஆட்சியையும் கைப்பற்றியுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் எந்த மாநிலங்களில் தேர்தல்கள் நடந்தாலும் இந்த பிரச்சனை முன்னுக்கு வந்து அரசியல் கட்சிகளுக்கு அழுத்தங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தப் பின்னணியில் ஒன்றிய அரசின் தற்போதைய இந்த அறிவிப்பு நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களிடையேயும் மிகப்பெரிய கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் தங்கள் மாநில மக்களின் கோரிக்கைக்கு செவிமடுத்து ஒரு கொள்கை முடிவை எடுத்து அதனை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நித்தியத்திற்கு  அனுப்பி வைக்கும் போது அதை உரிய முறையில் பரிசீலித்து அனுமதி அளிப்பது தான் ஒரு மக்கள் நல அரசின் செயலாக இருக்க முடியும். அதை விடுத்து விதிகளை  காரணம் காட்டி திருப்பி அனுப்புவது சரியான முடிவாக இருக்க முடியாது.

மக்களுக்காகத்தான் விதிகள்

“மக்களுக்காகத்தான் விதிகளே ஒழிய விதிகளுக்காக மக்கள் அல்ல”. அந்த அடிப்படையில் தான் நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டமே நூற்றுக்கும் மேற்பட்ட முறைகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் முடிவுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒன்றிய அரசின் நிதித்துறை அமைச்சகம் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ராஜஸ்தான், சட்டிஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில அரசுகள் மற்றும் ஊழியர்கள் செலுத்திய பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். அதற்கேற்றபடி  விதிகள் திருத்தப்பட வேண்டும்.

மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து அரசுத்துறை மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக  மேற்கொள்ள வேண்டும்.

2 comments

  1. பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என, தொழிலாளி வர்க்கத்தின் பொருளாதார கோரிக்கை போராட்டம், அரசியல் அழுத்தம் தந்ததால் தான்,புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த
    மாநில அரசுகள் முன்வருகின்றன. நிதி மூலதனத்திற்கு எதிரான இப்போராட்டம் தொடர் முன் கொண்டு செல்லப்பட வேண்டும், பொருளாதார அரசியல் தளங்களில்!

Comment here...